சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25ஆவது தடவையாகவும் நடைபெறும் பிரிவு-A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ‘சிங்கர் கிண்ண’ மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் ஐந்து போட்டிகள் நிறைவடைந்தன.

சம்பத் வங்கி எதிர் கென்ரிச் பினான்ஸ்

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இந்தப் போட்டியில் கென்ரிச் பினான்ஸ் அணியினை 51 ஓட்டங்களால் சம்பத் வங்கி வெற்றி கொண்டது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சம்பத் வங்கி அணியில் தசுன் சானக்க சதம் கடந்து 104 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதேபோன்று ரொமேஷ் புத்திக்க (54) மற்றும் அவிஷ்க பெர்னாந்து (47) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிக்கொணர 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து சம்பத் வங்கி 280 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது. கென்ரிச் பினான்ஸ் அணியின் பந்து வீச்சில் சரங்க ராஜகுரு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

ஸர்ஜீயோ அக்வேய்ரோவின் ஹட்ரிக் கோலினால் மென்சஸ்டர் சிடி முன்னிலையில்

பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள்…

தொடர்ந்து வெற்றி இலக்கினை அடைய தமது இன்னிங்சினை ஆரம்பித்த கென்ரிச் பினான்ஸ் வீரர்கள் 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.  கென்ரிச் பினான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் கசுன் விதுர (67) மற்றும் கவிந்து குலசேகர (64) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அது வெற்றி பெற போதுமானதாக அமைந்திருக்கவில்லை. சம்பத் வங்கி அணியின் பந்துவீச்சில் சுழல் வீரர் தரிந்து  கெளசால் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியினை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 280/9 (50) தசுன் சானக்க 107, ரொமேஷ் புத்திக்க 54, அவிஷ்க பெர்னாந்து  47, சரங்க ராஜகுரு 3/49

கென்ரிச் பினான்ஸ் – 229 (48) கசுன் விதுர 67, கவிந்து குலசேகர 64, தரிந்து கெளசால் 3/38, கசுன் ராஜித 2/43


மாஸ் யுனிச்செல்லா எதிர் ஹட்டன் நஷனல் வங்கி

கொல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் 8 விக்கெட்டுக்களால் மாஸ் யுனிச்செல்லா அணி ஹட்டன் நஷனல் வங்கியினை வீழ்த்தி இலகு வெற்றியினை சுவைத்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் யுனிச்செல்லா அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஹட்டன் நஷனல் வங்கிக்கு வழங்கியிருந்தது.

முதலில் துடுப்பாடிய ஹட்டன் நஷனல் வங்கி வீரர்களை இடது கை சுழல் வீரர் துவிந்து திலகரத்ன நிலைகுலையச் செய்தார். இதனால், 76 ஓட்டங்களுக்கு ஹட்டன் நஷனல் வீரர்கள் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் மோசமான முறையில் பறிகொடுத்தனர். அதிரடியான முறையில் செயற்பட்ட துவிந்து திலகரத்ன வெறும் 20 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 77 ஓட்டங்களினை, அணித்தலைவர் திலகரத்ன தில்ஷான் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 35 ஓட்டங்களுடன் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மாஸ் யுனிச்செல்லா அடைந்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 76 (27.2) நவிந்து நிர்மல் 19, துவிந்து திலகரட்ன 6/20

மாஸ் யுனிச்செல்லா – 78/2 (8.3) திலகரத்ன தில்ஷான் 35*, ரமித் ரம்புக்வெல 33


கொமர்ஷல் கிரடிட் எதிர் ஹேய்லிஸ் நிறுவனம்

கட்டுநாயக்க BOI மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இப்போட்டியில் கொமர்ஷல் கிரடிட் அணி 112 ஓட்டங்களால் ஹேய்லிஸ் நிறுவனத்தினை வீழ்த்தியது.

பிரமோத்யவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை வீரர்கள் கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹேய்லிஸ் அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொமர்ஷல் கிரடிட் அணிக்கு வழங்கினர். இதன்படி களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் வீரர்களில் தில்ஷான் முனவீர (90), ஜெஹான் முபாரக் (77) மற்றும் அஷான் பிரியன்ஞன் (71) ஆகியோர் அதிரடியான முறையில் அரைச் சதங்களை விளாசினர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் கொமர்ஷல் கிரடிட் அணி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 325 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது. ஹேய்லிஸ் நிறுவன பந்து வீச்சு சார்பாக சஜித்ர சேரசிங்க மற்றும் சானக்க ருவன்சிரி ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

போட்டியின் சவாலான வெற்றி இலக்கான 326 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய ஹேய்லிஸ் நிறுவன வீரர்கள் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  213 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவினர்.

ஹேய்லிஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சஜித்ர சேரசிங்க 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கியிருக்கும் சுராஜ் ரன்தீவ் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி கொமர்ஷல் கிரடிட் அணிக்காக சிறந்த பந்து வீச்சினை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் – 325 (50) தில்ஷான் முனவீர 90, ஜெஹான் முபாரக் 77, அஷான் பிரியன்ஞன் 71, சானக்க ருவன்சிரி 2/61, சஜித்ர சேரசிங்க 2/74

ஹேய்லஸ் நிறுவனம் – 213 (45.3) சஜித்ர சேரசிங்க 56, அன்ட்ரே சோலமன் 36, சுராஜ் ரன்தீவ் 4/31, இமேஷ் உதயங்க 2/49


டிமோ நிறுவனம் எதிர் ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் நிறுவனம்

மொரட்டுவ டைரோன் பெர்னாந்து மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் டிமோ அணியினை 8 விக்கெட்டுக்களால் ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் நிறுவனம் வீழ்த்தியது.

முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த டிமோ வீரர்கள் ஆரம்பம் முதலே எதிரணியின் அபார பந்து வீச்சினால் ஓட்டங்களை குவிக்க சிரமப்பட்டனர். இதனால், 34 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த டிமோ அணி 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

டிமோ அணி சார்பாக அதிகபட்சமாக லசித் அபேய்ரத்ன 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டிய ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணியில் மதுக லியனபத்திரனகே 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், விக்கும் சஞ்சய, சமிகர எதிரிசிங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

Kamaldeen Hamthan – Motor racer from Puttalam

இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றான மோட்டார் பந்தயத்தில்…

தொடர்ந்து வெற்றி இலக்கான 96 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் அணி லசித் லக்ஷான் மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் 14.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களுடன் இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டிமோ நிறுவனம் – 95 (34) லசித் அபேய்ரத்ன 24, மதுக லியனபத்திரனகே 4/9, பானுக்க ராஜபக்ஷ 2/10, சமிகர எதிரிசிங்க 2/10, விக்கும் சஞ்சய 2/40

ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் நிறுவனம் – 97/2 (14.1) லசித் லக்ஷன் 37*, சந்துன் வீரக்கொடி 37


டீஜேய் லங்கா எதிர் எல்.பி பினான்ஸ்

MCA மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்களால் டீஜேய் லங்கா அணி எல்.பி பினான்ஸ் அணியினை இலகுவாக வெற்றிகொண்டது.

டீஜேய் லங்கா அணியினரால் முதலில் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த எல்.பி பினான்ஸ் வீரர்கள் 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 140 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தனர். தனியொருவராக எல்.பி பினான்ஸ் அணிக்காக சிறப்பாக செயற்பட்டிருந்த லஹிரு உதார 68 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். டீஜேய் லங்கா அணியின் பந்து வீச்சில் உபுல் பண்டார மற்றும் தேசிய அணியின் வீரர் ஜெப்ரி வன்டர்சேய் ஆகியோர்  தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் பதம்பார்த்திருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 141 ஓட்டங்களினை பெற பதிலுக்கு ஆடிய டீஜேய் லங்கா வீரர்கள், திலான் ஜயலத் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச் சதத்துடன் 22.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை பெற்றவாறு இலக்கினை தொட்டனர்.

போட்டியின் சுருக்கம்

எல்.பி பினான்ஸ் – 140 (29.3) லஹிரு உதார 68, உபுல் பண்டார 3/29, ஜெப்ரி வன்டர்சேய் 3/33

டீஜேய் லங்கா – 146/3 (22.3) திலான் ஜயலத் 62*, சரித் அசலன்க 44, அஞ்சலோ பெரேரா 2/16

 மேலும் பல செய்திகளைப் படிக்க