சேனநாயக்க, வன்டர்சேய், மாலிங்க ஆகியோரின் பந்து வீச்சில் வீழ்ந்த டிமோ

953

இம்முறை 25 ஆவது தடவையாகவும் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு – A யில் அங்கம் வகிக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியொன்றில், டீஜேய் லங்கா நிறுவனம் 7 விக்கெட்டுக்களால் டிமோ நிறுவனத்தினை வீழ்த்தி அபார வெற்றியினை சுவைத்துள்ளது.

மஹேல உடவத்தவின் சதத்துடன் அபார வெற்றியை சுவீகரித்த மாஸ் யுனிச்செல்லா

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த டிமோ அணியின் தலைவர் நிசல தாரக்க முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். டீஜேய் லங்கா அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் முதலே டிமோ வீரர்களை தமது அபரிதமான பந்து வீச்சினால் மிரட்டி வெறும் 78 ஓட்டங்களுக்குள் மடக்கினர்.

டீஜேய் லங்கா அணியில் அதிசிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டிய தேசிய அணியின் வீரர்களான சஜித்ர சேனநாயக்க இதில் வெறும் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜெப்ரி வன்டர்சேய் 3 விக்கெட்டுக்களையும், லசித் மாலிங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். டிமோ அணி சார்பான துடுப்பாட்டத்தில் ப்ரமுத் ஹெட்டிவத்த அதிகபட்சமாக 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 79 ஓட்டங்களை பெற பதிலுக்கு ஆடிய டீஜேய் லங்கா வீரர்கள் இலங்கை கனிஷ்ட வீரர் சரித் அசலன்க பெற்றுக்கொண்ட 31 ஓட்டங்களின் துணையுடன் வெறும் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டிமோ நிறுவனம் – 78 (24.4) ப்ரமுத் ஹெட்டிவத்த 24*, ரமேஷ் மெண்டிஸ் 21, சஜித்ர சேனநாயக்க 4/10, ஜெப்ரி வன்டர்சேய் 3/25, லசித் மாலிங்க 2/10

டீஜேய் லங்கா – 79/3 (14.4) சரித் அசலன்க 31, நிசல தாரக்க 2/43

 மேலும் பல செய்திகளைப் படிக்க