வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரின் B பிரிவிற்கான (B டிவிஷன்) இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன. இப்போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட் B மற்றும் மாஸ் சிலுவெட்டா அணிகள் வெற்றியை தமதாக்கிக் கொண்டன.

மொபிடல் எதிர் கொமர்ஷல் கிரெடிட் B

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி பனாகொட இராணுவ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொபிடல் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 இலங்கை வீரர்கள்

ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும்…

நிதானமாக துடுப்பெடுத்தாடிய எரந்த ரத்நாயக்க (46) மற்றும் திமிர ஜயசிங்க (42) ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்த போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கே ஓய்வறை திரும்பினர். அதன்படி மொபிடல் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

கொமர்ஷல் கிரெடிட் B சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுரங்க சாலிந்த 38 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரனீத் விஜேசேன மற்றும் அனுர டயஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 181 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொமர்ஷல் கிரெடிட் B அணியின் முன்வரிசை வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர். துடுப்பாட்டத்திலும் தனது கைவரிசையை காட்டிய அனுர டயஸ் 47 ஓட்டங்களை குவித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.

சனித டி மெல் (29) மற்றும் ஷாலித்த டி சில்வா (22*) ஆகியோரும் அணிக்கு தம் பங்களிப்பினை வழங்க, கொமர்ஷல் கிரெடிட் B அணி 47.3 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்தது.

போட்டியின் சுருக்கம்

மொபிடல்: 180 (49.1)எரந்த ரத்நாயக்க 46, திமிர ஜயசிங்க 42, சுபேஷல ஜயதிலக்க 22, சுரங்க சாலிந்த 3/38, பிரனீத் விஜேசேன 2/27, அனுர டயஸ் 2/32

 கொமர்ஷல் கிரெடிட் B: 181/6 (47.3)அனுர டயஸ் 47, சனித டி மெல் 29, ஷாலித்த டி சில்வா 22*

முடிவு: கொமர்ஷல் கிரெடிட் B அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி.


மாஸ் சிலுவெட்டா எதிர் சிங்கர் ஸ்ரீ லங்கா

இப்போட்டியானது சர்ரே விலேஜ் மைதானத்தில் ஆரம்பமானதுடன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிங்கர் ஸ்ரீ லங்கா அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி ஆடுகளம் பிரவேசித்த மாஸ் சிலுவெட்டா அணியின் இரோஷ் சமரசூரிய (55) மற்றும் நிமந்த மதுஷங்க (52*) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். அத்துடன் புத்திக சஞ்சீவ மற்றும் சங்கீத் குரே 38 ஓட்டங்கள் வீதம் குவித்து அணிக்கு வலுவளித்தனர்.

இதன் பலனாக மாஸ் சிலுவெட்டா அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் சிங்கர் ஸ்ரீ லங்கா அணியின் சாமிக மகேஷ் 3 விக்கெட்டுக்களையும் பசிந்து டில்ஷான் மற்றும் ராஜித் பிரியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணியின் நம்பிக்கை தரும் 5 சமிக்ஞைகள்

இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை..

278 என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சிங்கர் ஸ்ரீ லங்கா அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அபாரமாக பந்து வீசிய ருமேஷ் சில்வா 10 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுக்களை பதம்பார்க்க, சிங்கர் ஸ்ரீ லங்கா அணி 64 ஓட்டங்களுக்கே சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. சகலதுறையிலும் அசத்திய நிமந்த மதுஷங்க 3 விக்கெட்டுக்களை சாய்த்ததுடன் புத்திக சஞ்சீவ 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுவெட்டா: 277/8 (50) இரோஷ் சமரசூரிய 55, நிமந்த மதுஷங்க 52*, புத்திக சஞ்சீவ 38*, சங்கீத் குரே 38, சாமிக மகேஷ் 3/34, பசிந்து டில்ஷான் 2/74, ராஜித் பிரியன் 2/53

 சிங்கர் ஸ்ரீ லங்கா: 64 (24.3) ருமேஷ் சில்வா 5/10, நிமந்த மதுஷங்க 3/27, புத்திக சஞ்சீவ 2/09

முடிவு: மாஸ் சிலுவெட்டா 213 ஓட்டங்களினால் வெற்றி.