பிக்பேஷ் டி20 லீக் தொடரிலிருந்து மெக்கலம் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

253
Image Courtesy - AFP

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான பிரெண்டன் மெக்கல்லம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் டி-20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி-20 லீக் தொடரில் இவ்வாரம் நடைபெறவுள்ள போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ள மெக்கலம், எதிர்வரும் காலங்களில் பயிற்றுவிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 37 வயதுடைய பிரெண்டன் மெக்கல்லம். 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி-20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்ற அவர், 2011 முதல்  அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் டி20 லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தொடர் தோல்விகளினால் அடுத்த வார பிற்பகுதியில் ஆரம்பமாகவிருக்கும்……

இந்த நிலையில், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிராக நேற்று (03) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெக்கல்லம் 39 பந்துகளில் 51 ஓட்டங்களைக் குவித்தார். எனினும், அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் பிரிஸ்பேன் அணி வெற்றி பெற்றது.

இது இவ்வாறிருக்க, போட்டி முடிந்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மெக்கலம், இந்த பருவத்தோடு பிக் பேஷ் டி-20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன். அத்துடன், இவ்வருடத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி-20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதன்பிறகு பயிற்றுவிப்பாளர் பதவி குறித்து யோசிப்பேன். அத்துடன், ஏதாவது ஒரு அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற ஆர்வத்துடன் உள்ளேன். பிக் பேஷ் லீக்கில் விளையாடியது மறக்க முடியாது. இதில் கிடைக்கும் அனுபவம் இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரகாசிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக உள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை பிக் பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணி, அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. எனவே, கடந்த 8 வருடங்களாக பிக் பேஷ் போட்டித் தொடரில் விளையாடி வந்த மெக்கலம், எதிர்வரும் 8 ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் விடைபெறுகிறார்.

இதுவரை 34 போட்டிகளில் பிரஸ்பேன் அணிக்காக விளையாடியுள்ள அவர், 9 அரைச்சதங்கள் உட்பட 920 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மேலும் 2 வருடங்கள் அந்த அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<