MCA T20 சம்பியனாக முடிசூடிக்கொண்டது கொமர்ஷல் கிரடிட் அணி

910
Commercial Credit - MCA Singer T20 Champions

இலங்கையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான MCA T20 தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளின் வெற்றிகள் மூலம் மாஸ் யுனிச்செலா மற்றும்கொமர்ஷல் கிரடிட் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன. இந்நிலையில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 24ஆவது ‘சிங்கர்’ MCA தொடரின் T20 சம்பியனாக கொமர்ஷல் கிரடிட் அணி தெரிவாகியுள்ளது. 

இன்று காலை MCA கிரிக்கெட் வாரிய மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷல் கிரடிட் அணியின் தலைவர் சாமர கப்புகெதர முதலில், சாமர சில்வா தலைமையிலான மாஸ் யுனிச்செலா அணியை துடுப்பெடுத்தாடுமாறு நிர்பந்தித்தார். இதன்படி, ரமித் ரம்புக்வெல, லஹிரு ஒப்பத்த ஆகியோருடன் தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மாஸ் யுனிச்செலா அணியினர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு ஒப்பத்த, லஹிரு மதுசன்கவின் பந்தில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மாஸ் யுனிச்செலா அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோகத் தொடங்கின. இதனால், மாஸ் யுனிச்செலா அணி 18.4 ஓவர்களில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரமித் ரம்புக்வெல 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக 28 ஓட்டங்களையும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷான், லஹிரு ஒப்பத்த ஆகியோர் தலா 19 ஓட்டங்களையும் மாஸ் யுனிச்செலா அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்ட சத்துரங்க டி சில்வா 4 ஓவர்களை வீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இவருடன் சேர்ந்து 2 ஓவர்களை வீசி 8 ஓட்டங்களைக் கொடுத்து பிரனீத் விஜசேன 8 ஓட்டங்களுக்கும், மலிந்த புஸ்பகுமார 3.4 ஓவர்களை வீசி 16 ஓட்டங்களைக் கொடுத்து தலா இரண்டு விக்கெட்டுகளையும், லஹிரு மதுசன்க, அஷன் பிரியன்ஞன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கொமர்ஷல் கிரடிட் அணி சார்பாகக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, இலகு வெற்றி இலக்கான 113 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொமர்ஷல் கிரடிட் அணியினர் ஆரம்பத்தில் சரிவுகளை சந்தித்த போதும் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று அடைந்தனர். கொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷான் பிரியன்ஞன் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்ளடங்களாக 26 ஓட்டங்களையும், சத்துரங்க டி சில்வா 18 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரி உள்ளடங்களாக 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மாஸ் யுனிச்செலா அணி சார்பாக ரமித் ரம்புக்வெல 4 ஓவர்களை வீசி 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், டனில் அபேயதார மற்றும் திலக்ஷ சுமணசிரி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் யுனிச்செலா அணி: 112/10(18.4) – ரமித் ரம்புக்வெல 28(18), லஹிரு ஒப்பத்த 19(10), டி.எம் டில்ஷான் 19(16), சத்துரங்க டி சில்வா 22/3(4), பிரனீத் விஜேசேன 8/2(2), மலிந்த புஷ்பகுமார  16/2(3.4)

கொமர்ஷல் கிரடிட் அணி: 115/5(17.4) – அஷான் பிரியன்ஞன் 26(20), சத்துரங்க டீ சில்வா 22(18), ரமித் ரம்புக்வெல 27/3(4), திலக்ஷ சுமணசிரி 13/1(2)

போட்டி முடிவு – கொமர்ஷல் கிரடிட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி