இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் ஹேலீஸ், ஜோன் கீல்ஸ் அணிகளுக்கு வெற்றி

206

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் இன்று (26) நடைபெற்றன. இதில் ஹேலீஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் இலங்கை A அணிக்காக விளையாடி வருகின்ற ஜோன் கீல்ஸ் அணி வீரரான பானுக ராஜபக்ஷ ஆகிய வீரர்கள் அபார சதம் பெற்றதோடு, எல்.பி. பினான்ஸ் அணி தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது.     

ஹேலீஸ் எதிர் கான்ரிச் பினான்ஸ்

அவிஷ்க பெர்னாண்டோவின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் பிரபாத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு மூலம் கான்ரிச் பினான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 140 ஓட்டங்களால் ஹேலீஸ் அணி வெற்றியை பதிவு செய்தது.

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சீரற்ற காலநிலையால் 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

வர்த்தக நிறுவன கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் தேசிய அணி வீரர்கள்

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹேலீஸ் அணி சார்பில் 20 வயதுடைய வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ 167 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தார். இதன் மூலம் அந்த அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய திலேஷ் குணரத்ன 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கான்ரிச் பினான்ஸ் அணி, 33.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. அவ்வணிக்காக ஓஷத பெர்னாண்டோ 76 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இடதுகை சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் – 335 (48) – அவிஷ்க பெர்னாண்டோ 167, அன்டி சொலமன் 41, நிமேஷ குணசிங்க 34, சானக்க ருவன்சிறி 30, லஹிரு திரிமான்ன 20, திலேஷ் குணரத்ன 4/69, ரொஷான் லக்சிறி 2/49

கான்ரிச் பினான்ஸ் – 195 (33.4) – ஓஷத பெர்னாண்டோ 76, அலங்கார அசங்க 28, பிரபாத் ஜயசூரிய 4/48, அலி கான் 2/32, லஹிரு சமரகோன் 2/32, நிமேஷ குணசிங்க 2/14

முடிவு – ஹேலீஸ் அணி 140 ஓட்டங்களால் வெற்றி

  • சம்பத் வங்கி எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்

இலங்கை A அணிக்காக விளையாடி வருகின்ற மற்றுமொரு அனுபவமிக்க வீரரான பானுக ராஜபக்ஷ பெற்ற அதிரடி சதத்தின் உதவியுடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

விறுவிறுப்பான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி, கௌஷால் சில்வாவின் அரைச்சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும், அவ்வணி சார்பில் தனித்து துடுப்பாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 257/9 (50) –  கௌஷால் சில்வா 91, தசுன் சானக்க 32, சரித் புத்திக 28, இஷான் ஜயரத்ன 2/39, ஜெஹான் டேனியல் 2/57, ஜெப்ரி வெண்டர்சே 2/46

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ – 261/7 (43.5) – பானுக ராஜபக்ஷ 121*, திமுத் கருணாரத்ன 27, மதுக லியனபதிரன 25, தரிந்து கௌஷால் 2/76, துஷ்மந்த சமீர 2/46

முடிவு – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

  • கொமர்சியல் கிரெடிட் எதிர் எல்.பி. பினான்ஸ்

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சீரற்ற காலநிலையால் 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொமெர்சியல் கிரெடிட் அணி 161 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவ்வணிக்காக வனிந்து ஹசரங்க டி சில்வா மாத்திரம் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து 61 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்.பி பினான்ஸ் அணி 33.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்க  ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி, இம்முறை வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரில் எல்.பி. பினான்ஸ் அணி, தொடர்ச்சியாக 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டியின் சுருக்கம்

கொமர்சியல் கிரெடிட் – 161 (35.4) – சாமர கபுகெதர 30, வனிந்து ஹசரங்க டி சில்வா 61, லஹிரு மதுஷங்க 21, சதுரங்க குமார 2/19, ஷெஹான் ஜயசூரிய 3/41, அஞ்செலோ பெரேரா 2/23, ஷிரான் பெர்னாண்டோ 3/33

எல்.பி .பினான்ஸ்  – 165/2 (33.4) – சரித் அசலங்க 80*, சதீர சமரவிக்ரம 38, குசல் மெண்டிஸ் 37*

முடிவு – எல்.பி. பினான்ஸ் அணி 8 விக்கெட்டுக்களல் வெற்றி

  • டீஜே லங்கா எதிர் யுனிச்செலா

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டீஜே லங்கா அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய யுனிச்செலா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டீஜே லங்கா அணிக்கு யுனிச்செலா பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பந்துவீச்சில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், யுனிச்செலா அணியின் தலைவருமான திலகரத்ன டில்ஷான் மற்றும் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் நெருக்கடி கொடுத்து தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் டீஜே லங்கா அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனிச்செலா அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்த போதிலும், 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அத்துடன், இம்முறை போட்டிகளில் அவ்வணி பெற்றுக்கொண்ட இரண்டாவது வெற்றியாகவும் இது பதிவாகியது.

போட்டியின் சுருக்கம்

டீஜே லங்கா – 155 (36.4) –  மினோத் பாணுக 32, சச்சித்ர சேரசிங்க 30, ருவிந்து குணசேகர 28, லக்‌ஷான் சந்தகென் 22*, லசித் குரூஸ்புள்ளே 21, திலகரத்ன டில்ஷான் 3/41, கமிந்து மெண்டிஸ் 3/20, துவிந்து திலகரத்ன 2/25

யுனிச்செலா – 159/5 (22.5) – நிரோஷன் திக்வெல்ல 38, திலகரத்ன டில்ஷான் 28, மஹேல உடவத்த 23, குசல் ஜனித் பெரேரா 27*, லக்‌ஷான் சந்தகென் 3/51

முடிவு – மாஸ் யுனிச்செலா 5 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க