ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் மனம் திறக்கும் கிளேன் மெக்ஸ்வெல்

189

அவுஸ்திரேலிய  அணியின் நட்சத்திர  சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வெல்  தன்மீது மறைமுகமாக சுமத்தப்பட்டிருக்கும்  ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் முதற்தடவையாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதோடு, தான் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் செய்திகள் தொடர்பில் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்…

கட்டாரினை மையமாக கொண்டு இயங்கும் அல் ஜெசீரா செய்தி ஊடகம் தனது ஆவணப்படமொன்றில் கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஊழல்கள் பற்றியும், ஆட்ட நிர்ணயத்தில் இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் இரகசியமாக பதியப்பட்ட  காணொளி ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியிருந்தது.

இந்த ஆவணப்படத்தில்  2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சில வீரர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்து. இதில் மெக்ஸ்வெலின் பெயர் நேரடியாக வராவிட்டாலும் அவுஸ்திரேலிய அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் மெக்ஸ்வெலின் பக்கம் தமது பார்வைகளைத் திரும்பினர்.

எனினும், குறித்த டெஸ்ட் போட்டியில் அதிசிறப்பான சதமொன்றினை விளாசிய மெக்ஸ்வெல் வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தன் மீது இப்படியானதொரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை கேட்டு முதலில்  அதிர்ச்சியடைந்தததுடன், கவலையும் ஆட்கொண்டதாக கூறியிருந்தார். இதேநேரம், இந்திய அணியுடனான அந்த டெஸ்ட் போட்டி பற்றி பேசிய மெக்ஸ்வெல் அதன் மூலம் இனிய ஞாபகங்களை பெற்றுக் கொண்டதை குறிப்பிட்டிருந்தார்.

>> தென்னாபிரிக்க ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

“சந்தோசமான நினைவுகளை மாத்திரமே கொண்டிருக்கும் போட்டியொன்றில் எமது பங்களிப்பை பற்றி இப்படியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை மிகவும் சிறந்த நினைவுகள். நான் எனது கன்னி டெஸ்ட் சதத்தினை பெற்றமைக்காக  என்னை ஸ்டீவ் ஸ்மித் கட்டித் தழுவியது இன்னும் ஞாபகம் இருக்கின்றது. “ என  மெக்ஸ்வெல் பேசியிருந்தார்.

மேலும் தன் மீது இவ்வாறு வைக்கப்படுகின்ற மறைமுகமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவித உண்மைகளும் இல்லை என மறுத்த மெக்ஸ்வெல், தனது சிறந்த தருணம் ஒன்றினை இப்படியான குற்றச்சாட்டுக்கள் மூலம் கலங்கம் செய்வது நியாயமான செயல் இல்லை என தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

“வெளிப்படையாகவே இவற்றில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. அதோடு 100% இவை (குற்றச்சாட்டுக்கள்) நியாயமானதும் அல்ல. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு தருணத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது மிகவும் கொடூரமான ஒன்று. “ என்றார்.

தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள மெக்ஸ்வெல் கிரிக்கெட் போட்டிகளில் (குறிப்பாக ஐ.பி.எல். போன்ற T20 கிரிக்கெட் தொடர்களில்) ஏதும் சந்தேகத்திற்கிடமான விடயங்களை காணும் போது, குறித்த விடயங்களை தடுப்பதற்காகவும் ஆய்வு செய்வதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு முறைப்பாடுகளை வழங்குவதில் முனைப்பு காட்டுபவர்களில் முதன்மையான ஒருவர் எனவும் தெரிவித்திருந்தார்.