டொட்டன்ஹாம் முகாமையாளர் அதிரடி நீக்கம்

74

டொட்டஹாம் ஹொட்ஸ்பர் அணியின் முகாமையாளர் மொரிசியோ பொச்சடினோ திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டொட்டன்ஹாம், ப்ரீமியர் லீக் பருவத்தில் சோபிக்கத் தவறிய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

“மொரிசியோ பொச்சடினோ மற்றும் அவரது பயிற்சி பணியாளர்களான ஜேசுஸ் பெரஸ், மிகுவேல் டகஸ்டினோ மற்றும் அன்டோனி ஜிமனஸ் ஆகியோரை அவர்களின் பணிகளில் இருந்து விடுவிப்பதாக கழகம் இன்று அறிவிக்கிறது” என்று டொட்டன்ஹாம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ப்ரீமியர் லீக்கில் சோபிக்கத் தவறிவரும் டொட்டன்ஹாம் தற்போது 14 ஆவது இடத்திற்கு பின்தள்ளி சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் உள்ளது.   

2014 ஆம் ஆண்டு டொட்டன்ஹாம் அணியுடன் இணைந்த 47 வயது பொச்சடினோ, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த அணி தொடர்ச்சியாக சம்பியன்ஸ் லீக்கில் ஆடும் அணியாக மாறுவதற்கு காரணமாக இருந்தார்.  

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூனில் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் முதல் முறை ஆடியது. எனினும் மெட்ரிட்டில் நடந்த அந்தப் போட்டியில் லவர்பூல் அணியிடம் 2-0 என டொட்டன்ஹாம் தோல்வியை சந்தித்தது. 

எனினும் உள்ளூர் போட்டிகளில் டொட்டன்ஹாம் கடந்த பெப்ரவரி தொடக்கம் வீழ்ச்சியை காண்பித்து வருகிறது.  

இம்முறை ப்ரீமியர் லீக்கின் ஆரம்ப 12 போட்டிகளில் மூன்றில் மாத்திரமே வென்ற டொட்டன்ஹாம் 11 புள்ளிகளை மாத்திரம் பெற்று முதல் நான்கு இடங்களுக்குள் எட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் அந்த அணி 20 புள்ளிகளால் பின்தங்கியுள்ளது. 

“இந்த முடிவை நாம் மிகவும் தயக்கத்துடனேயே எடுத்தோம். இது அவசரமாகவும் இலகுவாகவும் எடுத்த முடிவல்ல” என்று டொட்டன்ஹாம் தலைவர் டெனிலி லேவி குறிப்பிட்டார்.