இறுதிப் போருக்குத் தெரிவாகிய மாஸ் யுனிச்செலா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அணிகள்

687

24ஆவது சிங்கர் MCA காலிறுதிப் போட்டிகளில் மாஸ் யுனிச்செலா, டிமோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தன.

அந்த வகையில் நேற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி காணும் அரையிறுதிப் போட்டிகளில் பங்குபற்றி மாஸ் யுனிச்செலா மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதி சமருக்குத் தகுதி பெற்றன.

மாஸ் யுனிச்செலா எதிர் டிமோ

மொறட்டுவ, டி சொய்சா மைதானத்தில் நேற்று இடம் பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், மாஸ் யுனிச்செலா அணிக்காக மிகவும் அதிரடியாக துடுப்பாடிய மஹேல உடவத்த சதம் அடித்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதே நேரம் முன்னாள் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் அணித் தலைவர் TM டில்ஷான் மற்றும் சாமர சில்வா அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் கடந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டிமோ அணி முதலில் மாஸ் யுனிச்செலா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மாஸ் யுனிச்செலா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக துடுப்பாடிய மஹேல உடவத்த 14 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 134 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் TM டில்ஷான் மற்றும் சாமர சில்வா முறையை 59, 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

350 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய டிமோஅணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் மீதமிருக்க, சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களுக்கு சுருண்டது. மாஸ் யுனிச்செலா அணிக்காக TM டில்ஷான் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் தங்களுக்கிடையே தலா 3 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதன் முலம் மாஸ் யுனிச்செலா அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் யுனிச்செலா – 349/6 (50) – மஹேல உடவத்த 134, T.M. டில்ஷான் 59, சாமர சில்வா 71

டிமோ – 154/10 (29.3) – N.T. கமகே 37, P. தரங்க 33, T.M. டில்ஷான் 3/34, M.D.K. பெரேரா 3/20, C. பண்டார 2/23

கொமர்ஷல் கிரெடிட் எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்


கட்டுநாயக்க,சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில், கொமர்ஷல் கிரெடிட் அணி 30 ஓட்டங்களால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியை வெற்றிகொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷல் கிரெடிட் அணி முதலில் துடுப்பாடி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கொமர்ஷல் கிரெடிட் அணிக்காக சிறப்பாகத் துடுப்பாடிய அஷான் ப்ரியஞ்சன் 61 ஓட்டங்களையும் மற்றும் உபுல் தரங்க 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அதே வேளை, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணிக்காக இஷான் ஜயரத்ன மற்றும் விக்கும் பண்டார தமக்கிடையே 6 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பதிலுக்குத் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி அதிரடியாக விளையாடிய போதும், 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று, 30 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களையும், மனோஜ் சராச்சந்திர 42 ஓட்டங்களையும் பெற்றனர். கொமர்ஷல் கிரெடிட் அணியின் சார்பாகப் பந்துவீச்சில் சுராஜ் ரன்திவ், சத்துரங்க டி சில்வா மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரெடிட் – 254 (48.3) – அஷான் ப்ரியாஞ்சன்  61, உபுல் தரங்க 52, டில்ஹான் குரே 33, இமேஷ் உதயங்க 31, சதுரங்க டி சில்வா 27, இஷான் ஜயரத்ன 4/60, விக்கும் பண்டார 2/38, மதுக லியனபத்திரன 2/44

ஜோன் கீல்ஸ் – 224 (45.4) – பானுக ராஜபக்ஷ 71, மனோஜ் சரத்சந்திர 42, சுராஜ் ரன்டிவ் 2/43, சத்துரங்க டி சில்வா 2/40, செஹான் ஜயசூரிய 2/40

24ஆவது சிங்கர் MCA இறுதிப் போட்டி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.