சட்டவேலி ஓட்டத்தில் மன்னார் வீரர் அபிக்ஷனுக்கு வெள்ளிப் பதக்கம்

156

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்) மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (11) யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி கொண்டனர். 

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 55.05 செக்கன்களில் நிறைவுசெய்த மன்னார் புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆனந்தராசா அபிக்ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் யாழ். மகாஜனாவின் கேதுஷன், ஐங்கரனுக்கு முதல் தங்கம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்…

கடந்த வாரம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் பங்குபற்றிய இவர் குறித்த போட்டியில் தங்கத்தினை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிய அவர் 2ஆவது தடவையாகவும் வெள்ளிப் பதக்கமொன்றினை வெற்றிகொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

குறித்த போட்டியில் காலி மஹிந்த கல்லூரியின் நவோத்ய சங்கல்ப (53.84 செக்.) தங்கப் பதக்கத்தையும், ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியின் பசிந்து புன்சர வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்

இந்த நிலையில் போட்டியின் பிறகு ThePapare.com இணையத்தளத்திற்கு அபிக்ஷன் வழங்கிய செவ்வியில், சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் வெற்றியீட்ட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

இறுதியாக, கடந்த 2016ஆம் ஆண்டு இதே ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பதக்கம் வென்றேன். அதன்பிறகு பிறகு என்னால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற முடியாமல் போனது

Photos: Sir John Tarbat Athletics Championship 2019 – Day 2

அதுமாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மைதான வசதிகள் இல்லை. எனது பாடசாலையிலும் 200 மீற்றர் கொண்ட ஓடுபாதையே உள்ளது. அதில் பயிற்சிகளை எடுத்து கொழும்புக்கு வந்து சுகததாச ஓடுபாதையில் ஓடுவதென்பது மிகவும் கடினமானது. 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்துக்கு வைக்கப்படுகின்ற 10 சட்டவேலிகளுக்கு உரிய இடைவெளியும் எமது மைதானத்தில் இல்லை. அதுவும் மன்னார் மாவட்டத்தில் அப்படி ஒரு மைதானம் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியவில்லை

அத்துடன், கடந்த காலங்களில் எனது தோல்விக்கு அதுவும் முக்கியமான காரணம். நிறைய தடவைகள் நான் மைதானத்தில் வைத்து தடுக்கியுள்ளேன். என்னிடம் திறமை உண்டு. என்னால் சாதிக்க முடியும். ஆனாலும், 200 மீற்றரில் ஓடி, இங்கு வந்து செயற்கை ஓடுபாதையில் 400 மீற்றர் ஓடி பதக்கமொன்றை வெல்வது மிகப் பெரிய வெற்றி என கருதுகிறேன். 

எனவே, எமது பிரதேசத்திலும் 400 மீற்றர் ஓடு பாதையுடனான மைதானமொன்றை அமைத்தால் என்னைப் போன்ற இன்னும் பல திறமையான மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தேசிய மட்ட, சர்வதேச மட்டத்தில் சாதிப்பார்கள்” என அவர் தெரிவித்தார்

அபிக்னின் பயிற்சியாளராக ஸ்டான்லி இசிடோர் (தேவா) செயற்பட்டு வருகின்றார். இவரது பயிற்சியின் கீழ் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வீரர்கள் சுவட்டு நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக மாகாண மட்ட, தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளையீட்டி வருகின்றனர்

அதுமாத்திரமின்றி, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் மன்னார் புனித ஆளாள் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவொன்று களமிறங்கியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

எனவே தன்னிடம், திறமையும், மனஉறுதியும் இருக்கின்றதை நிரூபித்துக் காட்டிய அபிக்னுக்கு எதிர்வரும் காலங்களிலும் நடைபெறுகின்ற தேசிய மட்டப் போட்டிகளில் இன்னும் இன்னும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<