மாலிங்க பந்துவீச்சில் மீண்டும் மிரட்ட மும்பைக்கு 5ஆவது வெற்றி

306
plt20.com

லசித் மாலிங்கவின் துள்ளியமான பந்துவீச்சினாலும், ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அரைவாசி கட்டத்தை எட்டியுள்ள குறித்த தொடரில் நேற்று (15) நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வெங்கடே மைதானத்தில் மோதின.

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் அல்சாரி ஜோசப்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் ……

குறித்த போட்டியில் இலங்கையில் நடைபெற்ற மாகாண ஒருநாள் தொடரில் பங்குபற்றுவதற்காக இடைநடுவில் நாடு திரும்பியிருந்த இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து கொண்டிருந்தார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணியின் முதல் விக்கெட் 12 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 8 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

6ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விக்கெட் காப்பாளர் பார்த்தீவ் பட்டேல் 28 ஓட்டங்களை பெற்ற வேளையில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 3ஆவது விக்கெட்டுக்காக இணைந்துகொண்ட ஏபி. டி. வில்லியஸ் மற்றும் மொயின் அலி ஜோடி 95 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.

31 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்று அதிரடியாக ஆடிவந்த மொயின் அலி லசித் மாலிங்க வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில்டீப் ஸ்குயார் லெக்திசையில் ஹர்த்திக் பாண்டியாவிடம் பிடிகொடுத்து ஆடுகளத்தை விட்டும் வெளியேறினார். பின்னர் ஆடுகளம் நுழைந்த மார்கஸ் ஸ்டொயினிஸ் ஓட்டம் எதுவும் பெறாமலே அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

மாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய தேசிய அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ……..

அதிரடியாக ஆடிவந்த ஏபி. டி. வில்லியஸ் 51 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் கவனயீனம் காரணமாகவும், கிரான் பொலாட்டின் சிறப்பான களத்தடுப்பு மூலமாகவும் ரன் அவுட் முறையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து லசித் மாலிங்கவின் இறுதி ஓவரில் ஆடுகளம் நுழைந்த இரு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் 3ஆவது மற்றும் 5ஆவது பந்துகளில் ஆட்டமிழந்தனர்.   

இறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மும்பை அணியின் பந்துவீச்சில் லசித் மாலிங்க 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஹார்த்திக் பாண்டியா 3 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஜெசன் பெஹ்ரென்ட்ரொப் 49 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 172 என்ற சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தது. முதல் பவர்பிளே 6 ஓவர்களுக்கும் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. மொயின் அலி வீசிய 7ஆவது ஓவரின் முதல் பந்தில் அணித்தலைவர் ரோஹிட் சர்மா போல்ட் முறையில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த குயின்டன் டி கொக் 40 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அதே ஓவரின் 4ஆவது பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 3ஆவது விக்கெட்டுக்காக சூரிய குமார் யாதவுடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்த இஷான் கிஷான் 9 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் 10ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் சஹாலின் பந்துவீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் சூரிய குமார் யாதவ் 29 ஓட்டங்களுடன் சஹாலின் பந்துவீச்சிலேயேலோங் ஓப்திசையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்துவந்த குர்ணால் பாண்டியா அணிக்கு ஏமாற்றமளித்தார். 21 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு சிறாஜின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார்.  

உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வோனர்

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்……

இறுதியில் மும்பை அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களுள் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இருந்தாலும் ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடியால் அந்த 21 ஓட்டங்களும் ஒரு ஓவரிலேயே பெறப்பட்டது. இதன் மூலம் 6 பந்துகள் மீதமிருக்க மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஹர்த்திக் பாண்டியா ஆட்டமிழக்காது 16 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இவ்வெற்றியின் மூலம் 12ஆவது .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள அதேவேளை, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7ஆவது தோல்வியை தழுவியுள்ளது.  குறித்த போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 171/7 (20) – ஏபி. டி. வில்லியஸ் 75 (51), மொயின் அலி 50 (32), லசித் மாலிங்க 31/4, ஹர்த்திக் பாண்டியா 21/1

மும்பை இந்தியன்ஸ் – 172/5 (19) – குயின்டன் டி குக் 40(26), ஹர்த்திக் பாண்டியா 37(16), மொயின் அலி 18/2, யுஸ்வேந்திர சஹால் 27/2

முடிவுமும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகளினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<