பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து நாடு திரும்பிய மாலிங்க

1591

ஆறாவது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி-20 தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. இதில் குல்னா டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவரும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமான லசித் மாலிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க (குல்னா டைட்டன்ஸ்), திசர பெரேரா (கொமில்லா விக்டோரியன்ஸ்), இசுரு உதான (ராஜ்ஷாஹி கிங்ஸ்), தசுன் சானக்க (சிட்டகொங் வைகிங்ஸ்), சீக்குகே பிரசன்ன (ராஜ்ஷாஹி கிங்ஸ்) மற்றும் அசேல குணரத்ன (கொமிலா விக்டோரியன்ஸ்) உள்ளிட்ட ஆறு வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர …

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்றிருந்த லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் தசுன் சானக்க ஆகிய வீரர்கள் கடந்த வாரம் தத்தமது அணிகளுடன் இணைந்துகொண்டனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், குல்னா டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜயவர்தனவின் அணியில் முதல் தடவையாக விளையாடிய லசித் மாலிங்க, இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 66 ஓட்டங்களுக்கு ஒரேயொரு விக்கெட்டினை மாத்திரம் வீழ்த்தியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, தனது தனிப்பட்ட காரணங்களுக்காக லசித் மாலிங்க நாடு திரும்பியுள்ளதாக குல்னா டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக தீர்மானித்துள்ள லசித் மாலிங்க, அண்மைக்காலமாக இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட மாலிங்க, இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். எனினும், துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டங்களினால் இவ்விரண்டு தொடர்களையும் இலங்கை அணி இழந்து வெறுங்கையோடு நாடு திரும்பியது.

முன்னதாக லசித் மாலிங்கவின் தலைமையில் இலங்கை அணி கடந்த வருடம் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்ததுடன், குறித்த போட்டியில் இலங்கை தோல்வியயைத் தழுவியது. எனினும், 2014 டி-20 உலகக் கிண்ண அணியின் தலைவராக செயற்பட்ட மாலிங்க, இலங்கைக்கு முதல் தடவையாக டி-20 உலகக் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான …

எனவே, 2019ஆம் ஆண்டின் ஆரம்பம் லசித் மாலிங்கவுக்கு அடுத்தடுத்து ஏமாற்றங்களைக் கொடுத்திருந்தாலும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் மீண்டும் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள அவர், எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.

தற்போது 35 வயதாகும் மாலிங்கவினால் இனிமேலும் பந்துவீச்சில் சாதிக்க முடியுமா? அல்லது இலங்கை அணிக்கு ஒரு பந்துவீச்சாளராக வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். ஆனாலும், அவருடைய அனுபவமும், கடந்தகால பெறுபேறுகளும் நிச்சயம் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இது இவ்வாறிருக்க, ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரதன இசுரு உதான, தற்போது நடைபெற்றுவருகின்ற அயர்லாந்து A அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<