மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மாலிங்க

1740

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இன்று (07) அறிவித்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார்.

எனினும், தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் அண்மைக்காலமாக இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த லசித் மாலிங்கவை அவ்வணி முதல் தடவையாக இம்முறை விடுவித்திருந்தது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்

எனவே, 11 ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களுரில் கடந்த மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இதன்படி, இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் கலந்துகொண்ட மாலிங்கவை, குறைந்த பட்சம் ஏலத்திலாவது எடுக்கலாம் என எதிர்பார்த்திருந்த போதிலும், அவரை எந்தவொரு அணியும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனால் மாலிங்க மாத்திரமின்றி, அவரை விரும்புகின்ற கோடிக்கணக்கான ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவரது ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டதாவே கருதப்பட்டது.

இந்நிலையிலையே, மாலிங்க ஆங்கில நாளிதழொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில், ஐ.பி.எல் ஏலத்தில் என்னை எடுக்காதது கவலையில்லை. ஐ.பி.எல் அரங்கில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரராக நான் விளங்கிய போதும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காமை கவலையளிக்கிறது. ஐ.பி.எல் தொடரில் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மாத்திரம்தான் விளையாட முடியும். எனவே என்னுடைய வயதைக் கருத்திற்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் என்னை விடுவிக்க அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.

எனவே இலங்கை அணிக்காக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆவலுடன் இருக்கிறேன். அவ்வாறு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் வெளிநாட்டு அணியொன்றுக்கு பந்துவீச்சு ஆலோசகராக எனது சேவையைப் பெற்றுக்கொடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவ்வணி அறிவித்தது. மும்பை அணிக்காக 110 போட்டிகளில் விளையாடி இதுவரை 154 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரராக விளங்குகின்ற மாலிங்க, முதல் தடவையாக பந்துவீச்சு ஆலோசகராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

இதுகுறித்து மாலிங்க கூறுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 10 வருடங்களாக மும்பை எனது இரண்டாவது வீடாக இருந்து வந்தது. ஒரு வீரராக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்து வந்தேன். இப்போது பந்துவீச்சு ஆலோசகராக தொடர உள்ள புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தனவும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஷேன் போண்ட்டும், துடுப்பாட்ட பயிற்சியாளராக ரொபின் சிங்கும், களத்தடுப்பு பயிற்சியாளராக ஜேம்ஸ் பெம்மென்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.