ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் சொஹைப் மலிக்

113

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் தனது கடைசிப் போட்டியில் விளையாடிமுடித்த விரைவில் அந்த அணியின் அனுபவ சகலதுறை வீரர் சொஹைப் மலிக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

எனினும் 37 வயதான மலிக் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டி வரை டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார். இப்போது எனது இலக்கும் அதுதான் என்று மலிக் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிதான் அரையிறுதி வாய்ப்பை தட்டிப் பறித்தது – சர்பராஸ்

நேற்று வெள்ளிக்கிழமை (5) லோட்ஸில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றபோதும் அந்த அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு நுழைவதற்கு அது போதுமாக அமையவில்லை. எனினும் மலிக் தனது ஓய்வை அறிவிக்க எதிர்பார்த்திருந்தபோதும் அந்தப் போட்டியில் அவரை நீக்கி வெற்றிக்கான குழாம் ஒன்றை அனுப்ப அணி நிர்வாகம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

“20 ஆண்டுகள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய பல நினைவுகள் உள்ளன. இது ஒரு உணர்வுபூர்வமான தருணம். சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது எனது வாழ்வில் சிறந்தது. பாகிஸ்தான் டி-20 போட்டிகளில் என்னால் பங்களிப்புச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். நான் உடற்தகுதியுடன் இருக்கிறேன். எனது களத்தடுப்பு ஒரு சொத்தாகும். உலகெங்கும் டி-20 லீக்குகளில் விளையாடி என்னால் பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான் டி-20 அணியில் இடம்பெறுவதற்கு நான் தீர்மானித்தேன்” என்று மலிக் குறிப்பிட்டார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் முடித்திருக்கும் மலிக், உலகக் கிண்ணத்திற்கு முன்னரே தனது ஓய்வு பற்றி குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் இம்முறை உலகக் கண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி 8 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.

“நான் கவலைப்படவில்லை. என்றாலும் நான் எனது துடுப்பாட்ட வரிசையில் அதிகம் நெகிழ்வுப்போக்கை காட்டிவிட்டேன். அணிக்குத் தேவையான எந்த இடத்திலும் நான் துடுப்பெடுத்தாடினேன். சுமார் கடந்த 20 ஆண்டுகளில் நான் பல நேரங்களில் அணியில் இருந்து  நிறுத்தப்பட்டேன், சில ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை இழந்தேன்” என்று மலிக் குறிப்பிட்டார்.

IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்

சப்ராஸ் அஹமட்டுக்கு அப்பால் ஒருவருக்கு அணித்தலைமைப் பொறுப்பை வழங்குவதாயின் புதியவருக்கு இரண்டு ஆண்டுகளாயினும் அந்தப் பதவியை வழங்க வேண்டும் என்று மலிக் உணர்கிறார். “யாருக்காயினும் தலைமைப் பொறுப்பு வழங்குவதாயினும் அவர் மீது தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எல்லாம் ஒரே இரவில் மாறிவிடாது” என்று அவர் குறிப்பிட்டார். முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானும் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தியபோதும் அதற்கு காலம் எடுத்துக்கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பித்த மலிக், முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அவர் 237 ஒருநாள் போட்டிகளில் 7534 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 111 டி-20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<