உள்ளூர் கழக T-20 தொடரில் சம்பியனான சோனகர் கழகம்

189

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான டி-20 தொடரின் NCC கழகத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சோனகர் விளையாட்டுக்  கழகம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து இவ்வருடத்துக்கான சம்பியனானத் தெரிவாகியது.

கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற இறுதிப் போட்டியில் NCC கழகம் துடுப்பாட்டம் பந்துவீச்சு என சகல துறைகளிலும் பிரகாசித்த போதும், சோனகர் விளையாட்டுக்  கழக அணியும் கடைசி ஓவரில் கடைசி விக்கெட் மற்றும் கடைசிப் பந்து வரை வெற்றிக்காக போராடியதால் பரபரப்பான இறுதிப் போட்டியாக மாறியது.

வனிந்துவின் போராட்டம் வீண்; NCC கழகம் ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர …

24 முதல் தர கழகங்கள் பங்குபற்றிய 2018/2019 பருவகாலத்துக்கான டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் NCC மற்றும் சோனகர் கழகங்கள் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள  NCC கழகத்தின் தவைராக மஹேல உடவத்தவும், இளம் வீரர்களைக் கொண்ட சோனகர் கழகத்தின் தலைவராக இரோஷ் சமரசூரியவும் செயற்பட்டனர்.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் NCC  கழகத்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இதையடுத்து, NCC கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லஹிரு உதார மற்றும், தினேஷ் சந்திமால் களமிறங்கினர். லஹிரு உதார 19 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும், ஹசித போயகொட 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

Photos: Moors SC vs NCC | Final | Major T20 Tournament 2018/19

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மத்திய வரிசையில் களமிறங்கி பொறுப்புடன் விளையாடிய இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க அரைச் சதமடித்து ஆறுதல் கொடுத்தார்.

இதன்படி, NCC  கழகம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.   

இதில் பெதும் நிஸ்ஸங்க 38 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களைக் குவித்தார். மறுபுறம் அணித் தலைவர் மஹேல உடவத்த 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

சோனகர் விளையாட்டுக் கழகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அதீஷ திலக்ஷன 30 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

174 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம் வேகமாக அடித்தாட முயன்று முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதன்படி, அந்த அணி 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், அந்த கழகத்துக்கான பின்வரிசையில் வந்த நிமந்த மதுஷங்க (47) மற்றும் ரமேஷ் மெண்டிஸ் (37) ஆகியோர் வெற்றிக்காக போராடிய போதும் எதிரணி பந்துவீச்சாளர்கள் முக்கியமான விக்கெட்டுக்களை வீழ்த்தி அவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இதன்படி, இறுதி ஓவரில் சோனகர் கழகத்தின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சாரங்க ராஜகுரு போட்டியின் இறுதி ஓவரை வீசினார்.

முதல் பந்தில் சிரான் பெர்னாண்டோ 2 ஓட்டங்களை எடுக்க, 2 ஆவது, 3 ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசினார். எனினும், 4 ஆவது பந்தில் அயன சிறிவர்தன ரன்-அவுட் ஆக அவ்வணிக்கு இறுதி 2 பந்துகளில் 2 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.

ICC யினால் சனத் ஜனசூரியவுக்கு இரண்டு ஆண்டு தடை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதி இரண்டினை மீறியதை ஒப்புக்கொண்ட ……

இதன்படி, விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியின் எஞ்சிய இரு பந்துகளிலும் ஒவ்வொரு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சோனகர் கழகம் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியீட்டியது.

போட்டியின் இறுதிவரை சோனகர் விளையாட்டுக்  கழகத்துக்கு நம்பிக்கை கொடுத்து ஓட்டக் குவிப்பில் ஈடுபட்ட சிரான் பெர்னாண்டோ 6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 16 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

இறுதியில் சோனகர் கழகம் 20 ஓவர்களில் 174 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டினால் வெற்றியீட்டியதுடன், இவ்வருடத்துக்கான உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T-20 சம்பியன் பட்டத்தையும் வெற்றி கொண்டது.

பந்துவீச்சில் NCC  கழகத்தின் இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளரான திலேஷ் குணரத்ன 18 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சதுரங்க டி சில்வா 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்:டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

NCC– 173/7 (20) – பெதும் நிஸ்ஸங்க 52, மஹேல உடவத்த 31, சதுரங்க டி சில்வா 20, தினேஷ் சந்திமால் 20, அதீஷ திலன்சன 3/30

சோனகர் விளையாட்டுக் கழகம் – 174/9 (20) – நிமன்த மதுஷங்க 47, ரமேஷ் மெண்டிஸ் 37, சிரான் பெர்னாண்டோ 16*, திலேஷ் குணரத்ன 3/18, சதுரங்க டி சில்வா 2/20

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் ஒரு விக்கெட்டினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<