மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்றும் தரங்க

428

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான நான்கு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (25) நடைபெற்றன.

இதில் SSC அணியின் கௌஷால் சில்வா மற்றும் தமிழ் யூனியன் கழகத்தின் தரங்க பரணவிதாரன ஆகியோர் இரட்டைச் சதங்களைப் பெற்றிருந்ததோடு, சிலாபம் மேரியன்ஸ் அணியின் ஹர்ஷ குரே, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய வீரர்கள் சுப்பர் 8 சுற்றுக்கான இரண்டாம் நாள் ஆட்டங்களில் சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.

மேஜர் லீக் சுப்பர் 8 சுற்றில் சதமடித்த கௌஷால், ஓசத, மஹேல மற்றும் தரங்க

SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC கழகம், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வாவின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 582 ஓட்டங்களப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

SSC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கௌஷால் சில்வா இரட்டைச் சதம் கடந்து 273 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று இம்முறை முதல்தரப் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அத்துடன், இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 345 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 29 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.

இதேநேரம், SSC கழகத்துக்காக கவிந்து குலசேகர (94) மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து கைகொடுத்தனர்.

பந்துவீச்சில் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான துஷான் விமுக்தி 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இராணுவ அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த துஷான் விமுக்தி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 582/9 (114.5) – கௌஷால் சில்வா 273, கவிந்து குலசேகர 94, சந்துன் வீரக்கொடி 52, சச்சித்ர சேனாநாயக்க 42, துஷான் விமுக்தி 5/155, விராஜ் புஷ்பகுமார 2/141

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128/3 (38) – துஷான் விமுக்தி 55*, லக்‌ஷான் எதிரிசிங்க 30, தரிந்து ரத்னாயக்க 2/30


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

அனுபவ வீரர் தரங்க பரணவிதாரன பெற்ற இரட்டைச் சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியது.

Photos: CCC v Tamil Union – Major Super 8s Tournament 2018/19

இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ் யூனியன் அணி 405 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் போது 120 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த தரங்க பரணவிதாரன கடைசிவரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 215 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 2 சிக்ஸர்களும் 22 பவுண்டரிகளும் அடங்கும்.

2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், வனிந்து ஹசரங்கவின் சதத்தின் உதவியுடன் ஆட்ட நேர முடிவில் 218 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405 (127.5) – தரங்க பரணவிதாரன 215*, தமித சில்வா 72, லஹிரு மதுஷங்க 3/54, அஷான் பிரியன்ஞன் 2/49, வனிந்து ஹசரங்க டி சில்வா 2/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218/6 (52) – வனிந்து ஹசரங்க 104*, மலிந்து மதுரங்க 22, ரங்கன ஹேரத் 3/57


NCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

இளம் துடுப்பாட்ட வீரர்களான பிரமோத் மதுவன்த, அஷேன் பண்டார மற்றும் கமிந்து கனிஷ்கவின் அரைச்சதங்களின் உதவியோடு NCC கழகத்திற்கு எதிரான போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

Photos: Saracens SC vs NCC | Major Super 8s Tournament 2018/19

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NCC கழகம் முதல் இன்னிங்சுக்காக 253 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பிரமோத் மதுவன்த 91 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 76 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 253 (87.3) – மஹேல உடவத்த 101, சாரங்க ராஜகுரு 38, சாமிகர எதிரிசிங்க 4/82, மொஹமட் டில்ஷாட் 2/25

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 309/3 (91) – பிரமோத் மதுவன்த 91*, கமிந்து கனிஷ்க 81, அஷேன் பண்டார 76*, டிலேஷ் குணரத்ன 2/60


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

நேற்று கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 560 ஓட்டங்களைக் குவித்தது. சிலாபம் மேரியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்ஷ குரே (162) மற்றும் ஓசத பெர்னாண்டோ (109) ஆகியோர் சதங்களைக் குவிக்க, திக்‌ஷில டி சில்வா (79), யசோதா லங்கா (75) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ஸ்மித்துக்குப் பதிலாக ரஸல் ஒப்பந்தம்

பந்துவீச்சில் சங்கீத் குரே 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.

பந்துவீச்சில் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதுடைய சாகர் பரேஷ் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

Photos: Colts CC Vs Chilaw MCC | Major Super 8s Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (133) – ஹர்ஷ குரே 162, ஓசத பெர்னாண்டோ 109, திக்‌ஷில டி சில்வா 79, யசோதா லங்கா 75, சங்கீத் குரே 4/105

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 158/5 (45) – ஹஷான் துமிந்து 68, தனன்ஞய லக்‌ஷான் 32, சாகர் பரேஷ் 4/38

சகல போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<