குல்னா டைட்டன்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல

1283
Mahela Jayawardene to coach Khulna Tigers

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் பங்குகொள்ளும் குல்னா டைட்டன்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு BPL டி20 போட்டித் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடிய மஹேல ஜயவர்தன இம்முறை குல்னா டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு பருவகால போட்டிகளுக்காக அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மஹேல ஜயவர்தன அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்குபற்றி வருகின்றார். இலங்கை அணியின் துடுப்பாட்ட ஜாம்பவானான மஹேல ஜயவர்தன அண்மையில் முடிவுற்ற 10ஆவது இந்தியன் பிரிமியர் லீக் டி20 போட்டித் தொடரில், மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி, அவ்வணி சம்பியன் பட்டதை சுவீகரிப்பதற்கு பெரும் பங்காற்றியிருந்தார்.

இதுவரை குல்னா டைட்டன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டுவர்ட் லோ மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செல்லவுள்ள நிலையிலேயே, மஹேல ஜயவர்தன அவருக்கு பதிலாக 2017-18ஆம் ஆண்டு பருவகால போட்டிகளுக்காக பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

ஐந்தாவது தடவையாகவும் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம் கடந்த 10ஆவது ஐ.பி.எல் போட்டிகளின் போது சன்ரைஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தமிழ் நாடு ப்ரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றவுள்ள திருவள்ளுவர் வீரன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.