மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன

1220
Mahela Jayawardene appointed Mumbai Indians

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவருமான மஹேல ஜயவர்தன இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். எனினும் அவரது குறித்த பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையிலேயே மஹேல ஜயவர்தன அவரது பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மஹேல ஜயவர்தனவின் இந்த நியமனம் குறித்து மும்மை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கருத்து தெரிவிக்கையில், ”தற்போதைய நவீன கிரிக்கெட்டில் உள்ள ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளராக மஹேல உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் குழாமிற்கு மஹேல சிறந்த ஒரு முன்மாதிரி. மஹேலவின் புதிய நியமனத்தினால் எமதும், உலக அளவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களினதும் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவடையும்” என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒப்பந்த காலம் ஒரு வருடத்துக்கு மேற்பட்டது என கூறப்பட்டாலும், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் இது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

மஹேல ஜயவர்தன 2008ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியிருந்தார். முதலில் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், 2011ஆம் ஆண்டு பருவகாலப் போட்டிகளில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காகவும், அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்காகவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வந்தார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பல தரப்பட்ட T20 போட்டித் தொடர்களிலும் விளையாடி வருகின்றார். அதேபோன்று, சில அணிகள் அவரை துடுப்பாட்ட ஆலோசகராகவும் அமர்த்திக்கொண்டன.

இந்நிலையில் தனது புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த மஹேல, ”என்னை மும்பை அணி தனது பயிற்சியாளராக ஏற்றுக்கொண்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது வாழ்கையில் புதியதொரு அத்தியாயமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்தார்.