டயலொக் அனுசரணையில் இடம்பெறவுள்ள மகாவலி விளையாட்டு விழா

54

மகாவலி வலயங்களில் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை இனங்கண்டு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும் நோக்கில் மகாவலி அதிகார சபையின் மகாவலி மத்திய நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற 30ஆவது மகாவலி விளையாட்டு விழா எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவை ஆக்கிரமிக்கும் ஆபிரிக்க நாட்டு வீரர்கள்

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேங்…

இதன் ஆரம்ப நாள் விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும், இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்ளவுமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 3000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ள இம்முறை விளையாட்டு விழாவில், முப்படையில் மற்றும் பொலிஸ் ஆகியவற்றில் பணிபுரிகின்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கும் முதற்தடவையாக வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டித் தொடரின் முதல் நாளன்று (15) கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மெய்வல்லுனர் உள்ளிட்ட 36 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. எனினும், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் மகாவலி எச் வலயம் 57 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

1986ஆம் ஆண்டு அப்போதைய மகாவலி அமைச்சராக கடமையாற்றிய அமரர் காமினி திஸாநாயக்கவின் எண்ணகருவுக்கு அமைய மகாவலி வலயங்களில் வாழ்கின்ற இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறமையினை இனங்காணும் நோக்கில் மகாவலி விளையாட்டு விழா வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.

இந்த விளையாட்டு விழாவின் மூலம் இதுவரை 86 சர்வதேச வீரர்கள் உருவாகியுள்ளனர். இதில் இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற முன்னாள் வீராங்கனையான ஸ்ரீயானி குலவன்ச, மகாவலி விளையாட்டு விழாவின் மூலம் உருவாகிய வீராங்கனையாவார். இவர் 1992, 1996 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்…

இதேநேரம், 2016 றியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சுமேத ரணசிங்கவும் மகாவலி வலயத்தைச் சேர்ந்த வீரர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இம்முறை எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள மகாவலி விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர் கொழும்பிலிருந்து தனது பயணத்தை கடந்த 6ஆம் திகதி ஆரம்பித்தது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். தீபச் சுடர் ஏற்றப்பட்டு சைக்கிள் சவாரியாக எம்பிலிப்பிட்டியவுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி போட்டிகள் நடைபெறும் எம்பிலிப்பிட்டிய மகாவலி மைதானத்தை அது வந்தடையவுள்ளது.

மகாவலி விளையாட்டு விழாவின் தீபச் சுடர் பவணி கொழும்பிலிருந்து ஆரம்பமாகிய போது

1111 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் இந்த தீபச் சுடர் 111 மகாவலி வலய கிராமங்களைக் கடந்து செல்வது. இதன்போது 111111 பலா மரக் கன்றுகளும் நடப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, மகாவலி விளையாட்டு விழா தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) கொழும்பிலுள்ள மகாவலி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில்,

மகாவலி அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இம்முறை போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வெல்லும் வலயத்துக்கு சகல வசதிகளையும் கொண்ட உடற்பயிற்சி மத்திய நிலையம், போட்டித் தொடரின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு மகாவலி வலயத்தில் நிலப்பரப்பு, விசேட திறமைகளை வெளிப்படுத்தும் 10 வீரர்களுக்கு விளையாட்டு புலமைப்பரிசில் மற்றும் மேலும் 20 பேருக்கு தொழில் பயிற்சிகள், சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகத் தெரிவாகின்றவர்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு உபகரணங்கள், மகாவலி சாதனையை முறியடிக்கின்ற வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களும் இம்முறை விளையாட்டு விழாவில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேநேரம், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில்,

இலங்கையின் அரசியலை எடுத்துக்கொண்டால் ஜனாதிபதியின் கீழ் நிதி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சுகள் காணப்படுகின்றன. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் மனங்களை வென்ற தலைவர் ஆவார். அதிலும் குறிப்பாக சுற்றாடலுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கிராமிய பாரம்பரியங்களை பாதுகாத்து வருகின்றவராகவும் திகழ்கின்ற ஜனாதிபதியின் கீழ் மகாவலி அமைச்சு இருப்பது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகும். எனவே, மகாவலி வலயங்களில் உள்ள தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க அவர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அதன் ஒரு அங்கமாகவே இம்முறை மகாவலி விளையாட்டு விழா இடம்பெறவுள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை விளையாட்டு விழாவுக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குனர்களான டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி நிறுவனம் அனுசரணை வழங்கவுள்ளது.

இவ்விளையாட்டு விழாவுக்கான அனுசரணை காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு டயலொக் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்காரவிடமிருந்து மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க