ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் மஹ்ரூப் தலைமையில் இலங்கை அணி

592
Maharoof to lead Sri Lanka at Hong Kong 6s

ஹொங்கொங்கின் கௌலூன் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவிருக்கும் அதிரடி கிரிக்கெட் போட்டியான ஹொங்கொங் உலக சிக்ஸர்ஸ் தொடருக்கு சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப் தலைமையில் ஏழுவர் கொண்ட இலங்கை அணி பங்கேற்கிறது.

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) நடைபெறும் இந்தப் போட்டிக்கு 12 டெஸ்ட் நாடுகளில் ஐந்து அணிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் தொடரில் ஹொங்கொங்குடன் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முதல் அணிகளாக பங்கேற்பை உறுதி செய்துள்ளன.

சீனாவில் கிரிக்கெட்டை வளர்ச்சிபெறச் செய்யும் முயற்சியாக வரலாற்றில் முதல் முறையாக மெரில்போன் கிரிக்கெட் கழகமும் (MCC) இம்முறை தொடரில் பங்கேற்கிறது.

கிரிக்கெட்டின் சின்னமாக இருக்கும் லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் உரிமை கழகமான MCC, 1788 ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட் சட்ட விதிகளின் காவலராகவும் இருந்து வருகிறது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும்….

தலா நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்று போட்டிகள் நாளை, ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெறும். இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.    

                           குழு A                                    குழு B          
ஹொங்கொங் அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா நியூசிலாந்து கிவி
பாகிஸ்தான் இலங்கை
மெரில்போன் கிரிக்கெட் கழகம் பங்களாதேஷ்

போட்டி விதிமுறைகள்

சிக்சர்ஸ் கிரிக்கெட் விதிகள் மிக எளிமையானது என்பதோடு, அவை ஏனைய வகை கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது.

  • ஆறு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் போட்டிகள் விளையாடப்படும். ஒவ்வொரு போட்டியிலும் இரு அணிகளும் அதிகபட்சம் ஆறு பந்துகள் கொண்ட ஐந்து ஓவர்கள் வீச வேண்டும்.  
  • களத்தடுப்பில் ஈடுபடும் அணியில் விக்கெட் காப்பாளரைத் தவிர்த்து ஒவ்வொரு வீரரும் ஒரு ஓவர் வீச வேண்டும்.
  • வைட் (Wide) மற்றும் நோ போல் (No-ball) பந்துகளுக்கு எதிரணிக்கு இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படும்.
  • 5 ஓவர்கள் பூர்த்தியாகும் முன்னர் ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்தால் எஞ்சிய கடைசி துடுப்பாட்ட வீரர் ஐந்தாவது துடுப்பாட்ட வீரருடன் சேர்ந்து துடுப்பாட்ட களத்தில் இருப்பார். எனினும் ஐந்தாவது துடுப்பாட்ட வீரர் ஓட்டம் எடுப்பதில் மாத்திரமே உதவ முடியும். ஆறாவது துடுப்பாட்ட வீரர் மாத்திரமே தொடர்ந்து துடுப்பெடுத்தாடுவார். ஆறாவது விக்கெட்டும் வீழ்த்தப்படும்போது இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்.
  • 31 ஓட்டங்களை எட்டிய பின் துடுப்பாட்ட வீரர் ஒருவர் தமது துடுப்பாட்டத்தை நிறுத்த வேண்டும். ஆறு சிக்ஸர்களை விளாசினால் 36 ஓட்டங்களை எடுக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் துடுப்பாட்டத்தை இடைநிறுத்திய வீரர் பின் வரிசை வீரர் இதேபோன்று துடுப்பாட்டத்தை இடைநிறுத்தினால் அல்லது ஆட்டமிழந்த பின் மீண்டும் துடுப்பெடுத்தாட வரமுடியும்.

இலங்கை குழாம்

பர்வீஸ் மஹ்ரூப் (தலைவர்), ஜீவன் மெண்டிஸ், அண்டி சொலமன்ஸ், டீ.எம். சம்பத், அஞ்செலோ பெரேரா, பானுக ராஜபக்ஷ, ரமித் ரம்புக்வெல்ல, எரிக் உபஷாந்த (முகாமையாளர்)