ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் பிரகாசித்த ஹார்ட்லி, மகாஜனா வீரர்கள்

766

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 88ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் வட பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மேலும் 3 பதக்கங்களை சுவீகரித்தனர்.

சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் இரண்டாவது நாளில் சாதனை மழை

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்…

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இம்முறை வட மாகாணம் சார்பாக பங்குகொண்ட யாழ், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 11 பதக்கங்களை வென்றனர்.

எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொள்ளவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று அசத்தினார்.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

போட்டிகளின் 2ஆவது நாளான நேற்று (20) நடைபெற்ற பரிதிவட்டம் எறிதலில் அவர் 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 57.60 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 54.33 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 66.50 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 55.15 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், இப்போட்டியில் முதல் ஐந்து இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்கள் வர்ண சாதனைகளை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

மகாஜனாவுக்கு எட்டுப் பதக்கங்கள்

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சந்திரசேகரன் ஹெரீனா மற்றும் ரோஹினி கனகசுந்தரம் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்.  

ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்களுக்கு ஐந்து பதக்கங்கள்

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை…

அண்மைக்காலமாக வட மாகாணத்தைப் பிரதிநித்துப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாடசாலை மாணவியான ஹெரீனாவுக்கு, இம்முறை ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் எதிர்ப்பாத்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 2.85 மீற்றர் உயரத்தை ஹெரீனா வெற்றிகரமாக தாவினார். எனினும், 2 ஆவது சுற்றில் 2.95 மீற்றர் உயரத்தை தாவுவதற்காக அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய இறுதியில் 2.85 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளின் முதல் சுற்றில் அனித்தா ஜெகதீஸ்வரனுடன் போட்டியிட்ட ஹெரீனா, தேசிய மட்ட வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் 3.10 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், கோலூன்றிப் பாய்தலில் தனது சிறந்த உயரத்தையும் பதிவு செய்தார்.

அதேபோல, கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, தனது சொந்த போட்டி சாதனையை 0.01 மீற்றரினால் தவறவிட்டு (2.90 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதுஇவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட ஹெரீனா, 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டட் கல்லூரியைச் சேர்ந்த அவ்ஷிதி விக்ரமசேகர, 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், 2.65 மீற்றர் உயரம் தாவிய மகாஜனாவின் மற்றுமொரு மாணவியான கே. ரோஹினிக்கு வெண்கலப் பதக்கமும் கிட்டியது.  

இதன்படி, கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<