இன்று கொழும்பு கொல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த “நீல மற்றும் பச்சை வர்ணங்களின் சமர்“ என அழைக்கப்படும் லும்பினி கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகளுக்கு இடையிலான நான்காவது முறையான வருடாந்த கிரிக்கெட் சமரில், லும்பினி கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் அபார வெற்றியினை சுவீகரித்துள்ளது.

முதல் நாளில் ஆதிக்கத்தினை தமதாக்கியிருக்கும் லும்பினி கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியின் முதல் நாள் நிறைவில், கவீன் பீரிசின் சிறப்பாட்டத்துடன் முதல் இன்னிங்சினை லும்பினி கல்லூரி முடித்திருந்தது. பதிலுக்கு துடுப்பாடியிருந்த கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணி, சற்று தடுமாற்றமான ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்ததுடன், தமது முதல் இன்னிங்சிற்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று, எதிரணியினை விட தாம் குறைவாக இருந்த 197 ஓட்டங்களினை பெறுவதற்குரிய நம்பிக்கையுடன் பண்டாரநாயக்க கல்லூரி மைதானம் விரைந்தது.

எனினும், அதி சிறப்பாக பந்து வீசிய பசிந்து நதுனினை எதிர் கொள்ள தடுமாறிய பண்டாரநாயக்க கல்லூரியின் இளம் வீரர்கள் இன்றைய நாளில் தமது முதல் இன்னிங்சில் மேலதிகமாக வெறும் 56 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று 35.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 108 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.

பண்டாரநாயக்க கல்லூரியில் அதிகபட்சமாக பசிந்து பண்டார 25 ஓட்டங்களினை குவித்ததோடு, பிரமாதமான முறையில் பந்து வீசிய பசிந்து நதுன் 49 ஓட்டங்களினை மாத்திரம் கொடுத்து 7 விக்கெட்டுக்களை சுருட்டிக் கொண்டார்.

முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்களின் காரணமாக மீண்டும் பலோவ் ஒன் முறையில் பண்டாரநாயக்க கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்தது.

அவ்வணி இம்முறை ஒரு நல்ல ஆரம்பத்தினை தந்திருப்பினும், பின்னர் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய லும்பினி கல்லூரியினால், பண்டாரநாயக்க வீரர்கள் அனைவரும் 130 ஓட்டங்களுக்குள் மடக்கப்பட்டனர். எனவே அவர்கள் இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவினர்.

பங்களாதேஷுடன் மோதும் இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் தலைவராக மிலிந்த சிறிவர்தன

இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்க்க போராடியிருந்த பண்டாரநாயக்க கல்லூரியில் அதிகபட்சமாக, சசிரி அதிகாரி 40 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததுடன் பந்து வீச்சில் சிறப்பித்திருந்த விமுக்தி குலத்துங்க மூன்று விக்கெட்டுக்களையும் பசிந்து நதுன் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி லும்பினி கல்லூரியின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி  கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 247 (57.4) கவின் பீரிஸ் 80, அமித தாபரே 30, ரவிந்து சஞ்சீவ 29, கனிஷ்க மதுவந்த 21, ஹிமாத் ஹன்ஷன 3/57, ஜனிது ஜயவர்த்தன 3/62

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 108 (35.3) பசிந்து பண்டார 25, பசிந்து நதுன் 7/49

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 130 (36.3) சசிரி அதிகாரி 40, ஜனிது ஜயவர்த்தன 35, விமுக்தி குலத்துங்க 3/17, பசிந்து நதுன் 2/36, தனுக்க தாபரே 2/21

போட்டி முடிவு லும்பினி கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் வெற்றி