கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன் ஓட்டப் போட்டி கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது. இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்றுவருகின்ற ஒரேயொரு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியான எல்.எஸ்.ஆர் (LSR) கொழும்பு மரதன் ஓட்டப் போட்டியில் 41 நாடுகளைச் சேர்ந்த 8,000 க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பு மரதனில் கென்ய வீரர்களுக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

”கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன்”…

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கென்ய நாட்டைச் சேர்ந்த வீர வீராங்கனைர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அரை மரதனில் ஆண் மற்றும் பெண்கள் பிரிவின் வெற்றிகளை அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மற்றும் வெனிசுவேலாவைச் சேர்ந்த கணவன்மனைவி ஜோடியொன்று பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அரை மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கையின் தேசிய மரதன் ஒட்ட சம்பியனான ஹிருனி விஜயரத்ன போட்டியை 2 மணித்தியாலம் 23 நிமி. 21 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஹிருனி விஜயரத்ன

இதேவேளை, ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை ஹிருனி விஜயரத்னவின் கணவரும், வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவருமான லூவிஸ் ஓர்ட்டா பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 10 நிமி. 39 செக்கன்களில் நிறைவு செய்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்திய நிலூகா ராஜசேகர, அண்மையில் நடைபெற்ற ஹொங்கொங் மரதன் ஓட்டப் போட்டியில் 2 மணித்தியாலம் 40 நிமி. 07 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து வருடத்தின் சிறந்த காலத்தை பதிவு செய்திருந்தார். உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கும் முகமாக அமெரிக்காவின் யுஜீன் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஹிருனி, குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 43 நிமி. 31 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை சார்பாக இவ்வருடத்துக்காக 2ஆவது சிறந்த காலத்தைப் பதிவு செய்த வீராங்கனையாகவும் மாறினார்.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை முதற்தடவையாகப் பெற்றுக்கொண்ட ஹிருனி விஜேரத்ன, போட்டியில் 21 கிலோ மீற்றர் தூரத்தை நிறைவு செய்த பிறகு இடைநடுவில் ஏற்பட்ட தடங்கலினால் ஏற்பட்ட உபாதை காரணமாக துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

FIFA இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி மோதல்கள் நாளை

எனினும், குறித்த போட்டியில் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் அதிகமான தூரம் ஓடிய பிறகு நிறைவு கம்பத்தை அண்மித்திருந்த ஹிருணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

15 மற்றும் 10 கிலோ மீற்றர் தூரங்களைக் கொண்ட அரைமரதன் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிருனி, கடந்தவருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். பெட் ஹெட்சனின் பயிற்றுவிப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஹிருனி, ஹெட்சன் எலைட் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது 9ஆவது வயதில், அதாவது 2000ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய ஹிருனி, 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்து சர்வதேசப் போட்டியொன்றில் தனது கணவன் லூவிஸுடன் இணைந்து வெற்றியைப் பதிவு செய்திருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

லூவிஸ் ஓர்ட்டா

கல்வியைப் போல விளையாட்டிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹிருனி, தனது பாடசாலைக் கல்வியை அமெரிக்காவின் வேர்ஜினியா ஆரம்ப பாடசாலையில் முடித்துக்கொண்டு மேலதிக பட்டப்படிப்பை கென்டகி பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

எனினும் படிப்பை போன்று மரதன் ஓட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வந்த ஹிருனி, கென்டகி பல்கலைக்கழகத்தின் மெய்வல்லுனர் குழாமில் இணைந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த காலத்தில், அதே பல்கலைக்கழகத்தில் படித்த, ஹிருனியைப் போல மரதன் ஓட்டப் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவருமான வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த லூயி ஓர்ட்டாவுடனான நட்பு, ஹிருனியின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நட்பு காலம் செல்லச் செல்ல காதலாக மாறியதுடன், 2 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணமும் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது, தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியப்படுத்தல் முகாமையாளராக ஹிருனி தொழில் புரிந்து வருவதுடன், அவருடைய கணவரான லூவிஸ், தொழில்முறை மரதன் ஓட்ட வீரராக செயற்பட்டு வருகின்றார்.

இம்முறை வெபர் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய மட்டக்களப்பு அணி

”நாங்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு கென்டகி பல்கலைக்கழகத்தில் மெய்வல்லுனர் குழாமில் பயிற்சிகளைப் பெற்றுவந்தோம். எனது கணவர் 3,000 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வந்ததுடன், நான் 5000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் விளையாடி வந்தேன். ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட லூவிஸ், 51ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

உண்மையில் 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்து சர்வதேச போட்டியொன்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றிபெற கிடைத்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காகவே நாம் இலங்கைக்கு வந்தோம். இதற்காக பாரிய தொகை பணத்தை செலவிடுவதற்கு நேரிட்டதுடன், இலங்கையை வந்தடைவதற்கு 3 நாட்கள் சென்றது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதே எமது அடுத்த இலக்காகும்.

அத்துடன், அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மற்றும் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என ஹிருனி தெரிவித்தார்.

எனவே, இலங்கையில் பிறந்த ஹிருனிக்கும், வெனிசுவேலாவில் பிறந்த லூவிஸுக்கும் திருமண பந்தத்தில் இணைந்து சிறப்பானதொரு குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வரம் கிடைத்தது போல 2020 ஒலிம்பிக்கிலும் ஒன்றாகப் போட்டியிட்டு வெற்றி கிடைக்க வேண்டும் எனவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க