கேள்விக்குறியாகியுள்ள மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு

340

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெறாத ஆர்ஜென்டீனா அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு கேள்விக்குறியாக உள்ளது.

21ஆவது உலகக் கிண்ண கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியன் பட்டத்தை வெல்லும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2018 உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணியின் முன்னோட்டம்

ஆர்ஜென்டீனா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியாகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார்.

ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. அதிலும் முக்கியமான போட்டிகளில் மெஸ்சி பெனால்டியைத் தவறவிடுவது வேடிக்கையாகிவருகிறது. 2014 இல் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஜேர்மனியிடம் வீழ்ந்து சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார்.

2016 கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில், சிலி அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் போடத் தவறினார். 2012 சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சி அணிக்கு எதிராக பெனால்டியைத் தவறிவிட்டார். அந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்ஜென்டீனாவும் சரி, பார்சிலோனாவும் சரி தோல்வியையே சந்தித்தன.

2016 கோபா அமெரிக்க தொடர் தோல்விக்குப் பிறகு மெஸ்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கழகத்துக்காக சிறப்பாக விளையாடினாலும், தேசிய அணிக்காக ஏன் இவ்வாறு விளையாடுவதில்லை என ஆர்ஜென்டீனா ரசிகர்கள் விமர்சித்தார்கள்.

மறுபுறம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக யூரோ கிண்ணத்தை வென்று அசத்த, மெஸ்சி மீதான விமர்சனங்கள் வலுத்தன. ஓய்வு பெற்று மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

அதுமாத்திரமின்றி, ஆர்ஜென்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த முறை உலகக் கிண்ணத்தில் மெஸ்சி களமிறங்கினார். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் ஆர்ஜென்டீனாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

நைஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீனாவை முந்திய குரோஷியா

எனவே, மெஸ்சியின் தயவால் இம்முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுக் கொண்ட ஆர்ஜென்டீனா அணிக்கு ஆரம்பமே ஏமாற்றத்தைக் கொடுத்தன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சியினால் அவ்வணிக்கு பெருமை சேர்க்க முடியமால் போனமை கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதில் இம்முறை உலகக் கிண்ணத்திற்கு முதல் தடவையாக தகுதிபெற்றுக் கொண்ட ஐஸ்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் கடந்த வியாழக்கிழமை (21) குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. எனவே இதுவரை நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் விளையாடி வெற்றி பெறாத ஆர்ஜென்டீனா அணி, போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.

அதுமாத்திரமின்றி, 30 வயதான மெஸ்சியின் உலகக் கிண்ண கனவு கேள்விக்குறியாகவும் இருக்கிறது. கடந்த உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர், மயிரிழையில் சம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே ஏமாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் மைதானத்தில் தவித்துக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.

கடந்த உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக கோல் அடித்த பிறகு, இதுவரை 21 தடவைகள் முயற்சி செய்தும் ஒரு கோல் கூட அவரால் கோல் அடிக்க முடியவில்லை. அதேநேரம் லாலிகா தொடரில் இந்த பருவகாலத்துக்காக 34 கோல்களை, அதாவது சராசரியாக 88 நிமிடத்துக்கு ஒரு கோல் அடித்து அசத்தியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, ஆர்ஜென்டீனா அணிக்காக அவர் 17 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 5 கோல்கள் (2006 இல் ஒரு கோல், 2014 இல் 4 கோல்கள்) மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். 2010 மற்றும் 2018 இல் எந்தவொரு கோலையும் அடிக்கவில்லை.

இந்நிலையில் மெஸ்சியின் இவ்வாறான ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவரை சமூகவலைத்தளங்கள் வாயிலாக கிண்டல் செய்து வருவதை காணமுடிகின்றது.

மறுபுறத்தில், உலகின் தலைசிறந்த வீரர் மெஸ்சி தலைவராக இருந்தும், சக வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடத் தவறியதால் அந்த அணி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது என்றே சொல்ல வேண்டும்.

ஹரி கேனின் கடைசி நிமிட கோல் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி

பார்சிலோனா கழகத்துக்காக மெஸ்சியால் சாதிப்பதற்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு அவருக்கு இருந்தது. ஆனால் ஆர்ஜென்டீனா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்கவில்லை.

குரேஷிய அணிக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது நெற்றியைத் தேய்த்தபடி மெஸ்சி கவலையுடன் காணப்பட்டத்தை அவதானிக்க முடிந்தது. இதனால் நடக்கப்போவதை முன்பே மெஸ்சியினால் அறிந்துவைத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடைய உதவிக்கு எந்தவொரு வீரரும் நெருங்கி வரவில்லை.

ஆனால் மெஸ்சியினால் மாத்திரம் ஆர்ஜென்டீனா அணியைக் காப்பாற்ற முடியாது. சக வீரர்களின் பங்களிப்பு வேண்டும் என்பது இந்த உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனா பெற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம் என்றே சொல்லலாம்.

இவ்வாறு பல குறைபாடுகளுடன் முதலிரண்டு ஆட்டங்களிலும் விளையாடிய ஆர்ஜென்டீனாவுக்கு இம்முறைடி உலகக் கிண்ணம் வெறும் கனவாகவே மாறிவிட்டது.

மன்னிப்புக் கோரிய பயிற்றுவிப்பாளர்

ஆனாலும், எல்லாவற்றையும் கோட்டை விட்ட பிறகு மெஸ்சியின் திறமையை பயிற்றுவிப்பாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். மறுபுறத்தில் ஆர்ஜென்டீனா அணியின் தோல்விக்கு தனது தவறே காரணம் என தெரிவித்துள்ள சம்போலி, ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியமைக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆர்ஜென்டீனாவின் தோல்விக்கு அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோர்ஜ் சாம்போலியின் மோசமான திட்டமிடல் தான் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. உலகில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான சம்போலிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கொஸ்டாவின் அதிஷ்ட கோல் மூலம் ஈரானை வென்ற ஸ்பெயின்

எனவே, நைஜீரியாவுடனான போட்டிக்கு முன் 1986 இல் கோல் அடித்து ஆர்ஜென்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் முன்னாள் வீரரான ஜோர்ஜ் பருச்சகாவை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்க அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துவருவதாக கால்பந்து வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரடோனா சோகம்

ஆர்ஜென்டீனா அணிக்காக அதிக தடவைகள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற வீரர்களுள் ஒருவரான டியாகோ மரடோனா அவ்வணிக்கு 1986bஇல் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தார். தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா விளையாடும் ஆட்டங்களை மைதானத்துக்குச் சென்று நேரடியாக பார்த்து உற்சாகம் கொடுத்து வருகின்றார். முதல் லீக் ஆட்டத்தில் அவ்வணி போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்த மரடோனா, குரேஷியாவுடனான தோல்விக்குப் பிறகு சோகத்துடன் இருக்கையில் சாய்ந்து முகத்தில் கைவைத்து அழும் நிலைக்கு சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆர்ஜென்டீனா நிகழ்த்திய மோசமான சாதனைகள்

* 1958 இல் செகோஸ்லோவேகியாவுக்கு எதிராக 1-6 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவிய ஆர்ஜென்டீனா அணி, அதன் பிறகு லீக் சுற்றில் சந்தித்த மோசமான தோல்வியாக இது அமைந்தது.

* 1974 இற்கு பிறகு ஆர்ஜென்டீனா அணி உலகக் கிண்ணத்தில் 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி கூட பெறாதது இதுவே முதல் முறையாகும்.

* ஆர்ஜென்டீனா கடைசியாக விளையாடிய 4 உலகக் கிண்ண ஆட்டத்திலும் வெற்றி பெறத் தவறி உள்ளது (2 டிரா, 2 தோல்வி).

ஆர்ஜென்டீனா காலிறுதிக்கு தகுதிபெறுமா?

D குழுவில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட குரேஷியா அணி ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது. ஆனாலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கு ஒரு புள்ளியை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ள ஆர்ஜென்டீனா அணி, நைஜீரியாவுக்கு எதிராக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். மறுபுறத்தில் குரேஷிய அணியுடனான இறுதி லீக் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணி தோல்வியையோ அல்லது போட்டியை சமநிலையில் முடிக்க வேண்டும்.

எகிப்தை வீழ்த்தி அடுத்த சுற்றை நெருங்கியுள்ள ரஷ்யா

இது நடந்தால் மட்டுமே ஆர்ஜென்டீனா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெறும். எனவே D பிரிவில் இறுதி லீக் ஆட்டங்களின் பெறுபேறுகளை பொறுத்துத் தான் ஆர்ஜென்டீனாவின் உலகக் கிண்ண எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க