ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் மாலிங்க

1244

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியுடன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஊடாக சந்திப்பு இன்று (22) நடைபெற்ற போது, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மாலிங்கவின் ஓய்வு குறித்து தெரிவித்தார்.

திக்வெல்ல தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ்….

இலங்கை அணியின் அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறவிருப்பதாகவும், இலங்கையில் நடைபெறவுள்ள (ஒருநாள்) போட்டியொன்றில் இறுதியாக விளையாடவுள்ளதாகவும் உலகக் கிண்ணத் தொடரின் போது குறிப்பிட்டிருந்தார்.  

பின்னர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வுபெறுவதாக பகிரங்கமாக அறிவித்திருந்த போதும், அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல்கள் எழுந்து வந்தன. இதுதொடர்பில், இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் அசந்த டி மெல் கருத்து வெளியிட்டிருக்கையில், எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் மாலிங்கவிடம் இருந்து கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, மாலிங்க முதல் போட்டியுடன் ஓய்வுபெறுவதை திமுத் கருணாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். 

“பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மாத்திரம் விளையாடுவேன் எனவும், அந்த போட்டியுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவேன் என்பதைனையும் மாலிங்க என்னிடம் தெரிவித்தார். ஆனால், தேர்வுக்குழுவிடம் என்ன கூறினார் என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. அவர் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடுவேன் என்பதையே என்னிடம் கூறினார்” என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, லசித் மாலிங்க அணியிலிருந்து ஓய்வுபெற்றால் அவரின் இடத்தினை நிரப்புவதற்கான பந்துவீச்சாளர் ஒருவரை அடையாளம் காணவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை……

“நாம் இளம் வீரர்களை வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்ல எத்தணிக்கிறோம். லசித் மாலிங்க அணியிலிருந்து விலகினால், சரியான தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்கள் எம்மிடம்  இல்லை. அதனால், ஒவ்வொரு தொடர்களிலும் இரண்டு அல்லது மூன்று புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க 2004ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததுடன், 2006ம் ஆண்டு T20I போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

இதன் அடிப்படையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை 2010ம் ஆண்டு நிறைவுசெய்துக்கொண்ட இவர், 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், இவர் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் முறையே 335 மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<