தென்னாபிரிக்க சுற்றுத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க

6030
Lasith Malinga

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுடன் இலங்கை அணி மோதவுள்ள T-20 தொடருக்காக, லசித் மாலிங்க இந்த வாரம் தென்னாபிரிக்கா பயணமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது லசித் மாலிங்க, தனது இரண்டு முழங்கால்களிலும் வலியை உணருவதாக முறையிட்டார். இதனைத் தொடர்ந்தே அவர் குறித்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லசித் மலிங்கவின் அடுத்த கட்டம் என்ன? இலங்கை அணியுடன் இணைந்து கொள்வாரா?

 

இந்நிலையில், மாலிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான 3 போட்டிகள் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணிக்கு T-20 உலகக் கிண்ணத்தை பெற்றுத்தந்த தலைவர் என்ற பெருமையைக் கொண்டுள்ள லசித் மாலிங்க, முழங்கால் உபாதையின் காரணமாக நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரின் பின்னர் அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.  

எனினும், கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டார்.

தற்பொழுது 33 வயதாகும் லசித் மாலிங்க இலங்கை அணிக்காக விளையாடி மொத்தமாக 470 விக்கெட்டுக்களை விழ்த்தியுள்ளதுடன், எதிரணியை மிரட்டும் ஒரு பந்து வீச்சாளராகவும் செயற்பட்டுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு தனது 27ஆவது வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

முன்னரும் வலது முழங்காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக மாலிங்க சுமார் 18 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ளாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நீண்ட இடைவெளியின் பின்னர் லசித் மாலிங்க இலங்கை அணியில் இணைந்தால், மீண்டும் முன்னர் போன்றே சிறப்பாக செயற்படுவாரா? அல்லது சொதப்புவாரா? உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.