எதிர்வரும் 2019 உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் நிலை வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிறகு பந்துவீச்சாளராக இலங்கை அணிக்கு அதிகளவு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் அவர் விளங்குகிறார். அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு முதற் தடவையாக பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். அதுமாத்திரமன்றி, டி20 போட்டிகளில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு இலங்கை வீரரும் மாலிங்கதான்.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

எனினும், அண்மைக்காலமாக அவர் தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற காரணத்தால் இலங்கை அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்.

இந்நிலையிலையே 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் மாலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்திருந்தது.

ஆனால் தனக்கு எதற்காக இத்தொடரில் ஓய்வு வழங்கப்பட்டது என அறிய முடியவில்லை என மாலிங்க தனது கடுமையான அதிருப்தியை இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவின் முதல் நாள் பயிற்சியில் இணைந்துகொண்ட பின்னர் க்ரிக் இன்போ (Cricinfo) இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”எனது கிரிக்கெட் வாழ்க்கையும் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவே ஆரம்பமாகியது. எனவே பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு வலைப் பயிற்சிகளில் பந்துவீசுவதற்கு நான் இங்கு வந்தேன்.

ஆனால் பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச அணியிலும் என்னை இணைத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது. 25, 26 வயதுப்பிரிவு வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டமைக்கு காரணம் கூறமுடியும் என்றால், 34 வயதான எனக்கு ஏன் ஓய்வளிக்கப்பட்டது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. இளம் வீரர்களுக்கு ஓய்வளித்தாலும் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மீண்டும் அணியில் விளையாட முடியும். ஆனால் எனக்கு அவ்வாறு விளையாட முடியாது. வேண்டுமானால் எம்மைப் போன்ற வீரர்களுக்கு இன்னும் 2 வருடங்களுக்கு மாத்திரமே விளையாட முடியும். எனவே தற்போது அணியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் ஓய்வளிக்க நடவடிக்கை எடுத்தால் எப்போதுதான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. எனினும், எதிர்வரும் நாட்களில் எனக்கு இறுதி 15 பேரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவ்வாறு எனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் எனது திறமைகளை வெளிப்படுத்துவேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் முற்பகுதியல் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார். எனினும், இவ்வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியதுடன், இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.

இலங்கை அணியின் பின்னடைவுக்கு அசேல, மெதிவ்சின் உபாதையும் காரணம்

இந்நிலையில், மாலிங்க இறுதியாக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், அவ்வணிக்காக 8 போட்டிகளில் கலந்துகொண்டு 8 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். அத்துடன் இலங்கை அணிக்காக இறுதியாக இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது ஒற்றை டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், உபாதைக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய மாலிங்க, இவ்வருடத்தில் மாத்திரம் 6 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களையும், 13 ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொண்டு 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

நான் உபாதையிலிருந்து மீண்டு வந்து 13 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகிய முதல் வருடத்திலும் என்னால் எதிர்பார்த்தளவு விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடியவில்லை. அதன் பிறகு தொடர்ந்து 14 வருடங்களாக இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தேன். எனினும், இவ்வருடத்தில் எனது பந்துவீச்சில் 13 போட்டிகளில் 12 பிடியெடுப்புகள் (Catches) நழுவவிடப்பட்டதை அனைவரும் மறந்துவிட்டனர். இதற்கு நான் குற்றவாளி அல்ல. இறுதியில் அந்த தண்டணைக்குரிய குற்றவாளியாகவும் நான் ஆகிவிட்டேன்.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. எனினும் லசித் மாலிங்க தனது பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். எனினும், மாலிங்கவின் பந்துவீச்சின் போது இரு முக்கிய பிடியெடுப்புக்களை இலங்கை அணியின் வீரர்கள் தவறவிட்டனர். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி வெற்றி பெற காரணமாக அமைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, என்னை அணியிலிருந்து நீக்கியிருப்பது என்னிடம் திறமை இல்லை என்பதற்காக அல்ல. அவ்வாறான கருத்தை இதுவரை எவரும் முன்வைக்கவும் இல்லை. என்னாலும் மீண்டும் திறமையை வெளிக்காட்டி அணியில் மீண்டும் இடம்பெற முடியும். ஆனால் அங்கு வேறொரு காரணம் இருக்குமாயின், தெரிவுக்குழுவினர் பதவி விலகும் வரை என்னால் அணிக்குள் வரமுடியாது எனவும் தெரிவித்தார்.

அதேநேரம், கிரிக்கெட் விளையாடுவதை ஒருபோதும் நிறுத்திவிட மாட்டேன் என தெரிவித்த மாலிங்க, இலங்கைக்காக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆவலுடன் இருக்கிறேன் எனவும், அப்படி எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அதுவே எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதித் தொடராக அமையும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமனம் பெற்றதன் பிறகு, பங்களாதேஷ் தொடரை இலக்காகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 23 வீரர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சிகளை கடந்த வியாழக்கிழமை (28) ஆரம்பித்தார். இதன்போது லசித் மாலிங்கவும் திடீரென மைதானத்துக்கு வருகை தந்து வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில் மாலிங்கவின் வருகை குறித்து ஊடகவியலாளர்கள் ஹத்துருசிங்கவிடம் வினவியபோது, ”பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லசித் மாலிங்க இடம்பெறாமை குறித்து தெரிவுக்குழு தலைவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவருக்கு தற்போது எந்தவொரு போட்டிகளும் இல்லாத காரணத்தால் பந்துவீச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக எவ்வித அழைப்பும் விடுக்காமல் இன்று இங்கு வந்தார். உண்மையில் அவரைப் பாராட்ட வேண்டும். அவருடைய முயற்சியை நான் மிகவும் விரும்புகிறேன். அதேபோல மாலிங்கவின் கிரிக்கெட் எதிர்காலம் அவரது ஆட்டத்திறனில் தங்கியிருப்பதாகவும், அவருக்கான வாய்ப்பு இல்லாமல்போய் விடவில்லை எனவும் சுட்டிக்காட்டிய ஹத்துருசிங்க, அவரை அணிக்குள் மீண்டும் கொண்டுவருவதற்கு முயற்சிப்பதாகவும்” இதன்போது தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற மாலிங்க, இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுக்களைக் கைப்ற்றியுள்ளதுடன், 204 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 7 ஐந்து விக்கெட்டுக்கள் உள்ளடங்கலாக 301 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். எனினும் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற அவர், 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டு சம்பியன் பட்டத்தை வென்றுகொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார்.