லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) அடுத்த ஓகஸ்டில்

145

அடுத்த ஆண்டின் (2020) ஓகஸ்ட் மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரான ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆத்தரினை நியமனம் செய்யும் நிகழ்வின் போது இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஷம்மி சில்வா லங்கன் ப்ரீமியர் லீக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டிருக்கின்றார். 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்படு செய்யவுள்ள இந்த லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் (எல்.பி.எல்), இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டின் ஜூலை மாதம் நடாத்தவிருக்கும் “த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் பின்னர் இலங்கையில்  பல வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“நாங்கள் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரினை 2020ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் நடாத்தவிருக்கின்றோம். தற்போது நாங்கள் இதற்கான உடன்படிக்கைகளினையும், தொடருக்கான கட்டமைப்பினையும் உருவாக்கி வருகின்றோம். இன்னும் ஒரு மாதத்தில் நாம் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளோம்.” என ஷம்மி சில்வா தெரிவித்தார். 

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை வருடாந்தம் நடாத்தும் உள்ளூர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்  அணிகள் குறைக்கப்பட்டு நடாத்தப்படும் எனவும் ஷம்மி சில்வா தெரிவித்திருந்தார். 

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 70 பேரிற்கு ஒப்பந்தம் வழங்குவதாகவும் இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் இன்னும் விருத்தி செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<