உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை T20 அணி : குசல் மென்டிஸ் நீக்கம்

3927
Kusal Mendis left out of Bangladesh t20

செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க பெயரிடப்பட்டுள்ளார். இதன்படி, இலங்கை T20 குழாமை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் உபுல் தரங்க வழிநடாத்தவுள்ளார்.

வழமையான அணித் தலைவர் அஞ்செலோ மதிவ்சின் காலில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாகக் குணமடையாத காரணத்தினால், நடைபெறவுள்ள T20 தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.  இதன் காரணமாகவே அணியின் தலைமைப் பொறுப்பு தரங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம்

அதேநேரம், நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில், தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த இளம் வீரர் குசல் மென்டிஸ், பங்களாதேஷுடனான குறித்த T20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம், இரண்டு அரைச் சதங்களை பெற்று அதிரடியை வெளிப்படுத்தியிருந்த திசர பெரேரா 16 பேர் கொண்ட குழாமிற்கு பெயரிடப்பட்டுள்ளமையினால், மீண்டும் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய,  “குசல் மெண்டிசுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆகவே, அதிகளவான பழுவை அவர் மீது சுமத்த விரும்பவில்லை. ஏற்கனவே, பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலைமையில் அவருக்கு நாம் மேலும் அழுத்தங்களை கொடுக்க விரும்பவில்லை ” என்றார்.

விக்கெட் காப்பாளர் மற்றும் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, நடைபெறவுள்ள உடற்தகுதிப் பரிசோதனையை தொடர்ந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளார். அதேநேரம், குறித்த பரிசோதனையில் அவர் தகுதி பெறத் தவறும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக சந்துன் வீரக்கொடி அணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளார். மேலும், காயம் காரணமாக அவதியுறும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல தெரிவின்போது கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அத்துடன், அவுஸ்திரேலிய அணியுடனான கடந்த T20 தொடர் மற்றும் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் குழாமில் இடம்பிடித்திருந்த சஜித் பத்திரனவுக்குப் பதிலாக முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேநேரம், எதிர்பார்த்தவாரே வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, அனுபவ பந்து வீச்சாளர் நுவான் குலசேகர மற்றும் T20 நிபுணர் இசுறு உதான ஆகியோரும் இலங்கை அணியின் பந்து வீச்சினை பலப்டுத்தவுள்ளனர்.

இலங்கை T-20 குழாம்

உபுல் தரங்க (அணித் தலைவர்), தில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக்க, குசல் ஜனித் பெரேரா (உடற்தகுதியை பொறுத்து), லசித் மாலிங்க, இசுரு உதான, நுவான் குலசேகர, தசுன் ஷானக, விக்கும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, சாமர கபுகெதர, திசர பெரேரா, லக்க்ஷான் சந்தகன், செஹான் ஜெயசூரிய, சந்துன் வீரக்கொடி (குசல் உடற் தகுதியை தவறும் பட்சத்தில்)

அஷன் பிரியஞ்சனின் சதத்துடன் மாவட்ட சம்பியனாக முடிசூடிய கொழும்பு மாவட்டம்