”ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஓட்டங்களை குவிப்பேன்” – மெண்டிஸ் நம்பிக்கை

63

T20I  போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் ஓட்டங்களை பெறுவதற்கு இலகுவாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தநிலையில், அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதற்கு முன்னர், எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் குசல் மெண்டிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாகிஸ்தான் சென்று விளையாடாதது மகிழ்ச்சியளிக்கிறது – லசித் மாலிங்க

பாகிஸ்தான் தொடரில் தான் விளையாடாததால் தான் இலங்கை டி-20 அணிக்கு ஒரு புதிய…

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய குசல் மெண்டிஸ் உபாதையிலிருந்து மீண்டு, அணியில் இடம்பிடித்துள்ளார். உபாதையிலிருந்து நீங்கிய இவர், கடந்த வாரம் முதல் பயிற்சிக்கு திரும்பியதுடன், இங்கு (இலங்கையில்) நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் விளையாடி உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

T20I போட்டிகளை பொருத்தவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் மெண்டிஸ், சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார். எனவே, எதிர்காலத்திலும் அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் ஓட்டங்களை பெறமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

“என்னால் அணிக்கு முடிந்தவற்றை செய்வதற்கு எத்தணிக்கிறேன். மத்திய வரிசையிலும் துடுப்பெடுத்தாடியுள்ளேன். எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிங்கிய போது அதிக ஓட்டங்களை குவித்துள்ளேன். அதனால், எனக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக செயற்படுவது சிறந்தது என தோன்றுகிறது. இனிவரும் காலங்களிலும் எனக்கு வழங்கியுள்ள கடமையை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சிறப்பாக செய்வேன்”  

இலங்கை அணி கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்றிருந்த போது, இலங்கை வீரர்கள் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்தளர். இம்முறை பாகிஸ்தானில் தொடரை கைப்பற்றிய பலத்துடன் மீண்டும் அவுஸ்திரேலிய செல்லும் இலங்கை அணியால் தொடரில் நல்ல ஒரு பெறுபேற்றை பெறுமுடியும் என மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கடந்தமுறை அசேல குணரத்ன சிறந்த முறையில் விளையாடி, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அதேபோன்று, பாகிஸ்தான் தொடரில் ஒரு போட்டியை தனுஷ்க குணதிலக்க சிறப்பாக நிறைவுசெய்தார், ஒரு போட்டியை பானுக ராஜகபக்ஷ நிறைவுசெய்தார். T20I போட்டியை பொருத்தவரை முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் அதிக ஓட்ட எண்ணிக்கைக்கு சென்றால் அணியால் சிறந்த முடிவை பெற முடியும். 

அத்துடன், அதிக வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ளது. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுபோன்ற தருணத்தில் முதற்தர வீரர்களுடன் விளையைாடும் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது எமக்கு மேலும் பலமளிக்கும் என்பதுடன், நல்ல அனுபவமாகவும் இருக்கும்” 

அதேநேரம், தற்போது T20I போட்டிகளில் முன்னேறி வரும் இலங்கை அணியின் உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தம் தொடர்பில், அனுபவ வீரர் என்ற ரீதியில் குசல் மெண்டிஸ் தன்னுடைய கருத்துகளை தெரிவித்தார்.

>>Photos : Sri Lanka Team departure for Australia T20I series<<

“அணியை பொருத்தவரை கடைசியாக விளையாடிய T20I  தொடர்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளோம். நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்திருந்தாலும், அவர்களுக்கு சிறந்த போட்டியை கொடுத்திருந்தோம்.  பின்னர், பாகிஸ்தான் அணியை 3-0 என வீழ்த்தியிருக்கிறோம். அதற்கு முன்னரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I தொடரையும் கைப்பற்றியிருந்தோம். 

எனவே, இப்போது எதிரணிகள் எமது அணியை ஒரு சவாலான அணியாக பார்கின்றனர். உலகக் கிண்ணத்துக்கு முன் இதுவொரு சிறந்த விடயமாகும். அதுமாத்திரமின்றி, வீரர்கள் அனைவரும் பிரகாசித்து வரும் நிலையில், 15 பேர்கொண்ட குழாத்தை தெரிவுசெய்ய தெரிவுக்குழுவினர் தடுமாறி வருகின்றனர். இது அணியை கட்டியெழுப்ப மிகச்சிறந்த வாய்ப்பாகும். அதேநேரம், T20I  உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டி, உலகக் கிண்ணத் தொடரிலும் போட்டியை கொடுக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<