கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நடுவராக இலங்கையின் தர்மசேன

346

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) கடந்த ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட கிரிக்கெட் வீரர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் கிரிக்கெட் அணிகளை கௌரவிக்கும் வகையில் கடந்த ஆண்டிற்கான சிறப்பு விருதுகளை அறிவித்து வருகின்றது.

இதில்  கடந்த ஆண்டிற்குரிய சிறந்த போட்டி நடுவருக்குரிய (Umpire) விருதினை இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன வென்றிருக்கின்றார்.

ஐ.சி.சி இன் ஒருநாள், டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோஹ்லி

இரண்டாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த போட்டி நடுவர் விருதினை வென்றிருக்கும் குமார் தர்மசேன தான் பெற்ற இந்த விருது, இலங்கையில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு மேலும் பேசிய தர்மசேன ”கடந்த ஆண்டு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. அத்துடன் ஐ.சி.சி. இடம் இருந்து கிடைத்திருக்கும் இந்த விருதினை பெருமையானதொன்றாகவும், கௌரவமானதொன்றாகவும் கருதுகின்றேன். இந்த விருது, நான் (சிறந்த போட்டி நடுவருக்கான) முதல் விருது பெற்று ஆறு வருடங்களின் பின்னர் கிடைத்திருப்பதோடு எனது வேலையை இன்னும் நான் விரும்புவதற்கான உத்வேகத்தினையும் தருகின்றது. ஒரு கிரிக்கெட் வீரராகவும், போட்டி நடுவராகவும் நான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டியிருக்கின்றேன். எதிர்வரும் காலங்களிலும் எனக்கு நானே சவால்களை உருவாக்கி இந்த விளையாட்டிற்கு எது தேவையோ அதனை வழங்குவேன் ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் பாண்டித்யம் பெற்ற குழுவினர் ஒன்றை வைத்தே கடந்த ஆண்டுக்கான விருதுகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்ற T20 போட்டி ஒன்றில் 172 ஓட்டங்களை விளாசி T20 சர்வதேசப் போட்டி ஒன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக சாதனை படைத்த அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச், கடந்த ஆண்டு T20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரருக்கான விருதினை வென்றிருக்கின்றார்.

அவுஸ்திரேலிய அணியை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வழிநடாத்தும் ஆரோன் பின்ச் இந்த விருதினை வெல்வது இரண்டாவது தடவையாகும். பின்ச், முன்னதாக 2013-14 ஆம் ஆண்டுகளின் பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 போட்டியொன்றில் 156 ஓட்டங்களை விளாசியமைக்காக இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான றிஷாப் பாண்ட், 2018ஆம் ஆண்டின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரருக்கான விருதினை வென்றதோடு, ஸ்கொட்லாந்தின் கெலம் மெக்லியோட் (Calum MacLeod) கடந்த ஆண்டுக்குரிய  சர்வதேச கிரிக்கெட் சபைின் அங்கத்துவ நாடுகளின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றிருக்கின்றார்.

இதில் றிஷாப் பாண்ட், இந்திய அணிக்காக அண்மையில் அறிமுகமாகி தனது ஆரம்ப போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காகவும், கெலம் மெக்லியோட் தனது அபார சதங்கள் மூலம் கடந்த ஆண்டில் ஸ்கொட்லாந்து அணி, நினைவுகூறும்படியான சில வெற்றிகளை பெற்றமைக்காகவும் குறித்த சிறப்பு விருதுகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க தொடர்களுக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

குறித்த சிறப்பு விருதுகளில் ஒன்றினைப் பெற்றுக் கொண்ட மெக்லியோட் பேசும் போது, ”ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளில் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகவும் கௌரமாகவிருக்கின்றது. கடந்த ஆண்டினை எனக்கு மறக்கமுடியாத ஒரு ஆண்டாக மாற்றியமைக்கு ஐ.சி.சி. இற்கும், ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணிக்கும், எனது சகவீரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.  

ஸ்கொட்லாந்து அணியின் மெக்லியோட் ஒருபுறமிருக்க, ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் கடந்த ஆண்டிற்கான சிறந்த அங்கத்துவநாட்டு அணிக்கான விருதினை வென்றிருக்கின்றது.

கடந்த ஆண்டில் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி பலம்கொண்ட இங்கிலாந்து அணியினை தோற்கடித்ததும், கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதுமே அவ்வணிக்கு இந்த விருது கிடைக்க காரணமாகும்.

இதேநேரம் கிரிக்கெட் விளையாட்டின் புனிதத் தன்மைக்கான விருது நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. வில்லியம்சன், கிரிக்கெட் விளையாட்டில் காட்டிவந்த அதீத ஈடுபாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விருதினை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க