யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இன்று வியாழக்கிழமை(03) இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பெனால்டி மோதலில் புனித ஜோசப் வாஸ் கல்லூரியை 7 இற்கு 6 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த புனித பத்திரிசியார் கல்லூரி கொத்மலே சொக்ஸ் காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

போட்டியின் போது இரண்டு அணிகளினாலுமே கோல்கள் பெறப்படாத நிலையில், பெனால்டி மோதலின் போது புனித பத்திரிசியார் கல்லூரியின் வழக்கமான கோல் காப்பாளர் A. பிருந்தாபன் மற்றும் மாற்று கோல் காப்பாளராக செயலாற்றிய R. ஷாந்தன் ஒவ்வொரு பெனால்டி உதைகளை தடுத்து அணியின் வெற்றிக்கு வழியமைத்தனர்.

போட்டியின் முதல் பாதியில் கோல் பெற்றுக் கொள்ள கிடைத்த பல சுலபமான சந்தர்ப்பங்களை  இரண்டு அணிகளும் தவறவிட்டன. முதல் 30 நிமிடங்களில் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்த போதிலும், அவ்வணி ஏறத்தாழ 4 வாய்ப்புக்களை தவறவிட்டது. எதிரணியின் கோல் எல்லைக்கு மிக அருகாமையில் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை P. டிலக்ஷன் மற்றும் R. ஷாந்தன் நழுவவிட்டனர்.

30 நிமிடங்களின் பின்னர், புனித ஜோசப் வாஸ் கல்லூரி பல தடவைகள் எதிரணியின் தடுப்பை மீறி ஊடுருவிய போதிலும், அவர்களாலும் இலகு வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. 38 ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதியினுள் வைத்து தன்னால் கோல் அடிக்க வாய்ப்பிருந்த போதிலும், புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் சந்தருவன் பெர்னாண்டோ பந்தை பின்னால் வந்த அனில் மஞ்சுளவிற்கு அனுப்ப, அவர் இடது கோல் கம்பத்திற்கு வெளியாக பந்தை அடித்து கிடைத்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டார்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், கோல் கம்பத்திற்கு அருகாமையில் கிடைத்த இரண்டு வாய்ப்புக்களை பிதுஷ பெர்னாண்டோ அடுத்தடுத்து நழுவவிட்டார். இதன்படி இரண்டு அணிகளுமே கோல் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்கள வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல் அடிக்கும் பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன. புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் எதிரணிக்கு சளைக்காத நிலையில் கிடைத்த வாய்ப்புக்களை கோல்களாக மாற்றத் தவறியது.

எனினும், இரண்டு அணிகளின் கோல் காப்பாளர்களும் சிறப்பாக திறமையை வெளிக்காட்டி தலா 5 கோல்கள் வீதம் காப்பாற்றினர்.

பெனால்டி மோதலில் T. அந்தனி சுபாஷ், அன்ரூட் லெனின், R.டிலக்ஷன், R. ஷாந்தன், E. டார்வின் மற்றும் கோல் காப்பாளர் A. பிருந்தாபன் ஆகியோரின் உதைகள் இலக்கை நோக்கி இருந்த போதிலும் S. அபீஷன் தனது வாய்ப்பைத் தவறவிட்டார்.

புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் அஷேன் கனிஷ்க, பிதுஷ பெர்னாண்டோ, சந்தருவன் பெர்னாண்டோ, நிமேஷ் டில்ஷான், இசுரு தேவிந்த ஆகியோர் வெற்றிகரமாக உதைத்த போதிலும், 3 ஆவது பெனால்டி உதையை கோல் காப்பாளர் A. பிருந்தாபன் அபாரமாகத் தடுத்தார். 7 ஆவது பெனால்டி உதையின் போது சூழ்ச்சித்திறமுடைய நகர்வாக R. ஷாந்தன் கோல் காப்பாளராக களமிறக்கப்பட்டதுடன், தேவிந்த மிலிந்தவின் உதையை லாவகமாக தடுத்த அவர் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.