ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தொடரும் தலைவர்களுக்கான அபராதம்

287
IPL Twitter

ஐ.பி.எல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு நேற்று (13) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தாம் விளையாடிய முதல் ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூர் அணி, ஏழாவது போட்டியிலேயே முதல் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

ஆனால், அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விராட் கோஹ்லிக்கு போட்டியின் முடிவில் ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய தேசிய அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக்….

இதன் மூலம் இம்முறை ஐ.பி.எல் தொடரில் மும்பை அணித் தலைவர் ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணித் தலைவர் அஜிங்கிய ரஹானே, சென்னை அணித் தலைவர் டோனி ஆகியோருக்குப் பிறகு விராட் கோஹ்லிக்கும் அபராதம் விதிக்க ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.பி.எல் விதிகளின்படி, ஒவ்வொரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச வேண்டும். குறிப்பிட்ட கால அளவைத் தாண்டி இன்னிங்ஸ் நீண்டு கொண்டே சென்றால், பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட அணியின் தலைவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று (13) நடைபெற்ற போட்டியில் முதலில் பந்துவீசிய பெங்களூர் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதனால் முதல் இன்னிங்ஸ் முடிய இரவு 9.45 ஆனது. இதன்படி, பெங்களூர் அணி சுமார் 15 நிமிடங்கள் மேலதிகமாக எடுத்துக் கொண்டுள்ளது.

எனவே, இம்முறை போட்டிகளில் முதல் முறையாக இந்த தவறை செய்யும் பெங்களூர் அணித் தலைவர் கோஹ்லிக்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை அணித் தலைவர் தனது ஒப்பந்த தொகையிலிருந்து இருந்து செலுத்தமாட்டார். மாறாக, ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே இதை ஏற்றுக் கொள்வார்கள்.

ஏற்கனவே, பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் மும்பபை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் சென்னை அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற போட்டியின்போது, ராஜஸ்தான் ரோயல்ஸ் ரஹானே ஆகியோருக்கு குறித்த நேரத்தில் பந்துவீசி முடிக்காததற்காக ரூ. 12 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதேபோன்று, ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தானை வீழ்த்தியது.

முன்னதாக கடைசி ஓவரின் 4ஆவது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-போல்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-போல்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணித் தலைவர் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-போலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். இறுதியில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்த ஐ.பி.எல் நிர்வாகம் டோனிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

அந்த வரிசையில், தற்போது நான்காவது தலைவராக ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டுக்காக கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஒரு போட்டியில் தடை செய்யப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பு யாருக்கு?

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 50 இற்கு குறைவான நாட்களே இன்னும்….

ஐ.பி.எல் விதிமுறைகளின் படி, இரண்டாவது முறையாகவும் ஓவர்களை குறித்த நேரத்தில் வீசி முடிக்காவிட்டால் அணியின் தலைவருக்கு ரூ.24 இலட்சம் அபராதமும், அணியில் உள்ள ஏனைய வீரர்களுக்கு போட்டித் தொகையில் 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்காமல் தாமதித்தால் அணித்தலைவருக்கு ரூ.30 இலட்சம் அபராதத்துடன், ஒரு போட்டித் தடை செய்வதற்கான வாய்ப்புள்ளது.

பயிற்சியாளர்கள் கருத்து

முறையே சென்னை மற்றும் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களான ஸ்டீபன் பிளமிங் மற்றும் டொம் மூடி இருவரும் அணித் தலைவர்கள் நேரங்களை கடைபிடிக்க தவறி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது குறித்து பிளமிங் கூறுகையில், ”நடுவர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் அல்லது ஒவ்வொரு 5 ஓவருக்கும் அணித் தலைவர்களிடம் நேரம் அதிகமாக செல்வது குறித்து எடுத்துரைக்க வேண்டும்” என்றார்.

இதேநேரம், ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டொம் மூடி கூறுகையில், ”அபராதம் என்பது கொடுக்கப்படும் சரியான தண்டனை அல்ல. மாறாக அணியின் ஓட்ட விகிதத்தை குறைத்தால் தான் அடுத்த போட்டியில் இருந்து சரியாக செயற்படுவார்கள்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<