பிரமாண்டமான முறையில் இடம்பெற்று நிறைவடைந்த ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் றக்பி தொடரில் பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சுப்பர் செவன்ஸ் இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் மருதானை புனித ஜோசப் (சூசையப்பர்) கல்லூரி அணியை எதிர்த்தாடிய கிங்ஸ்வூட் கல்லூரி அணி 7 – 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.  

இந்த சுற்றுப் போட்டியில் சந்தேகமற்ற அதி சிறந்த அணியாக விளங்கிய கிங்ஸ்வூட் கல்லூரி, கால் இறுதியில் இசிபதனவை 29 – 5 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் பரபரப்பான அரை இறுதியில் புனித பேதுரு கல்லூரியை 15 – 12 எனவும் வெற்றிகொண்டது.

மறுபுறத்தில் இவ் வருட பாடசாலை றக்பி போட்டிகளில் பெரு முன்னேற்றம் காட்டி வரும் புனித ஜோசப் கல்லூரி, கால் இறுதியில் சயன்ஸ் கல்லூரி அணியை 12 – 5 எனவும் வெஸ்லி கல்லூரியை 29 – 7 எனவும் வெற்றிகொண்டது.

டயலொக் ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் சம்பியனாக முடிசூடிய ஈகள்ஸ் அணி

டயலொக் ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் (அணிக்கு எழுவர்) றக்பியின் இரண்டாம்..

இந்நிலையில் ஆரம்பமாக சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை எற்படுத்துவதாக அமைந்தது.  போட்டியின் முதலாவது பாதியில் சுதாரக தேவப்ரியவின் ட்ரை மூலம் புனித ஜோசப் அணி 5 – 0 என முன்னிலை பெற்றது.

ஆனால் இடைவேளையின் பின்னர் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய கிங்ஸ்வூட் அணியினர் இறுதி வினாடிகளில் தக்ஷின அத்துகோறளே மூலம் ட்ரை வைத்து அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் (கன்வேர்ஷன்) பெற்று 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.

அதேபோன்று கோப்பை் பிரவில் வெஸ்லி கல்லூரியை 36 – 5 என வெற்றிகொண்ட புனித பேதுரு கல்லூரி சம்பியனானது.

குவளைப் பிரிவில் இசிபதன கல்லூரியை 15 – 10 என வெற்றிகொண்ட சயன்ஸ் கல்லூரி சம்பியன் ஆனது.

கேடயப் பிரிவு இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிராவை எதிர்த்தாடி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் அணி மிக இலகுவாக 33 – 7 என வெற்றிபெற்று கேடயத்தை சுவீகரித்தது.

பெண்கள் பிரிவு  

பெண்களுக்கான சுப்பர் செவன்ஸ் றக்கி போட்டியில் கடற்படைக் கழகம் சம்பியனானது. இறுதிப் போட்டியில் இராணுவ மகளிர் அணியை எதிர்த்தாடிய கடற்படை மகளிர் அணி 41 – 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று டயலொக் சுப்பர் செவன்ஸ் மகளிர் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இடைவேளையின்போது கடற்படை மகளிர் அணி 15 – 5 என முன்னிலை வகித்தது. கடற்படை சார்பாக டில்ருக்ஷி ஜயன்தி 3 ட்ரைகளையும் தனுஜா வீரக்கொடி, சந்திகா ஹேமகுமாரி, ஷானிகா மதுமாலி, சந்த்யா விஜேதிலக்க ஆகியோர் தலா ஒரு ட்ரையையும் வைத்தனர்.

இராணுவ அணி சார்பாக அயேஷா பெரேரா ஒரு ட்ரை வைத்தார்