கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் கொழும்பு லும்பினி கல்லூரி ஆகியன பிரிவு B இல் தமது குழுக்களில் முதல் இடத்தை பிடித்து, நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி லீக் போட்டிகளில் பிளேட்  கிண்ணத்திற்கான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

நடைபெற்று வரும் முதலாம் பிரிவு ரக்பி போட்டிகளுடனேயே B பிரிவு போட்டிகளும் நடைபெற்று வருவதுடன், இதில் மொத்தமாக 11 அணிகள் போட்டியிடுகின்றன. குழு 1B இல் 5 அணிகளும், குழு 2B இல் 6 அணிகளும் மோதிக்கொண்டன.

குழு 1B இல் லும்பினி கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, பிலியந்தல மத்திய மகா வித்தியாலயம், மஹாநாம கல்லூரி மற்றும் லலித் அத்துலத் முதலி கல்லூரிகள் போட்டியிட்டன.

முதற் பிரிவிலிருந்து B பிரிவிற்கு சென்ற வருடம் பின்தள்ளப்பட்ட கிங்ஸ்வூட் கல்லூரி குழு 2B இல் போட்டியிட்டது. கிங்ஸ்வூட் கல்லூரியுடன் வித்தியார்த்த கல்லூரி, ஆனந்த கல்லூரி, மலியதேவ கல்லூரி, புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் நுகேகொட புனித ஜோன்ஸ் கல்லூரியும் இக்குழுவில் போட்டியிட்டன.

கடந்த வருடம் மோசமான விளையாட்டை வெளிக்காட்டியதால் முதலாம் பிரிவிலிருந்து பின்தள்ளப்பட்ட கிங்ஸ்வூட் கல்லூரியானது, B பிரிவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக வெற்றியீட்டி, இப்பிரிவின் சிறந்த அணியாக உருவெடுத்தது. மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய கிங்ஸ்வூட் கல்லூரியானது, அனைத்து போட்டிகளிலும் போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற்றது. இதனால் சராசரியாக 5.5 புள்ளிகளை பெற்று தமது ஆதிக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.

2B

குழு 2B இல் தாம் போட்டியிட்ட 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியை தமதாக்கிக்கொண்ட வித்தியார்த்த கல்லூரியானது, 4.4 என்ற சராசரி புள்ளிகளுடன் இக்குழுவில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிறப்பாக திறமையை வெளிக்காட்டியுள்ள வித்தியார்த்த கல்லூரியானது, பிளேட் கிண்ண போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டால் 5 வருடங்களின் பின்னர் முதல் தர பிரிவில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

அதேவேளை குழு 1B இல் கொழும்பு லும்பினி கல்லூரியானது ஆதிக்கம் செலுத்தி முதல் இடத்தை பெற்றுக்கொண்டது. 4 போட்டிகளில் மோதிய லும்பினி கல்லூரியானது, அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுக் கொண்டது.

1B

தர்ஸ்டன் கல்லூரி மற்றும் பிலியந்தல மகா வித்தியாலயம் முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டன.

இவ்விரு குழுக்களில் இருந்தும் 3 அணிகளே பிளேட் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன. டி.எஸ். சேனநாயக்க கல்லூரி இறுதி நேரத்தில் முதலாம் பிரிவில் உள்ளடக்கப்பட்டதன் காரணமாக, குழு 1B இல் இருந்து ஒரு அணியும், குழு 2B இல் இருந்து இரண்டு அணிகளும் பிளேட் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.

கிங்ஸ்வூட் கல்லூரி, லும்பினி கல்லூரி மற்றும் வித்தியார்த்த கல்லூரிகளே B பிரிவிலிருந்து பிளேட் கிண்ண சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் அணிகள் ஆகும். இவ் அணிகள் முதற் தர பிரிவில் பின்தள்ளப்பட்ட அணிகளுடன் பிளேட் கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

பிளேட் கிண்ணத்திற்கான சுற்றில் மொத்தமாக 8 அணிகள் போட்டியிடவுள்ளன. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

புனித அந்தோனியார் கல்லூரி, தர்மராஜா கல்லூரி மற்றும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஆகியன குழு 1A இலிருந்து பிளேட் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற அணிகளாகும். பிரின்ஸ் ஒப் வேல்ஸ் மற்றும் கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி ஆகியன குழு 2A இல் இருந்து பிளேட் கிண்ண சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளாகும்.

8 அணிகளும் ஒன்றுடன் ஒன்று எதிர்த்து போட்டியிடவுள்ளதோடு, முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த வருடம் முதற் தர பிரிவில் விளையாடுவதற்கு தகுதிபெறும்.