கெண்ட் கிக் கிண்ணத்தை சுவீகரித்த ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்

252
Kentkick Final

நிந்தவுர் கெண்ட் விளையாட்டுக் கழகம் அம்பாரை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நடத்திவரும் கெண்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டி மற்றும் மூன்றாமிடத்திற்கான போட்டி நிந்தவுர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இறுதிப் போட்டி இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது. இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணியும், மருதமுனை கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான உதைப்பந்தாட்டச்  சுற்றுப் போட்டியில் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை இங்கு விசேட அம்சமாகும்.

கெண்ட்  விளையாட்டுக் கழகத் தலைவரும், பொலிஸ் இன்ஸ்பெக்டருமான எம்.எல்.ரபீக் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதாரத்துறை பிரதியமைச்சர் பைசல் காசீம் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சம்பியன் கிண்ணத்தையும் வழங்கி வைத்தார்.

மைதானத்தில் கூடுதலான ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டுகளித்ததுடன் தமது உற்சாகத்தையும் கரகோசத்துடன் வெளிப்படுத்தினர்.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில்  ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணி வீரா் சப்னி அஹமட்  கொடுத்த பந்து பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட  எம்.எம்.ஏ. ஜரீத் பின்கள வீரா்கள்  இருவரைத் தாண்டி கோல் கம்பத்திற்குள் மிக வேகமாக அடித்த பந்து கோல் கம்பத்திற்குள் சென்றது. இதனால் ஒலிம்பிக் கழகம் தமது முதலாவது கோலை பதிவு செய்ததுடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டியின் முழுக்கட்டுப்பாட்டையும் தமக்குள் கொண்டுவந்த ஒலிம்பிக் வீரா்கள் மிக ஆக்ரோஷமாக கிறின் மெக்ஸ் அணியின் கோல் கம்பத்தை நோக்கி ஊடுருவினர். இந்த சந்தர்ப்பத்தில் 22ஆவது நிமடத்தில் முன்கள வீரா் கொடுத்த பந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர வீரா் எம்.எம்.ஏ.ஜாவீத் மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது கோல் கம்பத்திற்கு மேலால் பந்து சென்றது.

கிறின் மெக்ஸ் அணி வீரர்கள் பந்து பரிமாற்றத்தை முன்னகர்த்திச் சென்ற போது கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து கோல் போடும் நல்லதொரு வாய்ப்பை கிறின் மெக்ஸ் வீரர் பஸ்லூனினால் தவறவிடப்பட்டது. அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.

ஒலிம்பிக் கழக வீரா்கள் மிகுந்த உற்சாகத்துடன் பந்துகளை வேகமாக முன்னகர்த்திய போதும் கிறின் மெக்ஸ் கழக பின்கள வீரா்களின் சிறப்பான தடுப்பாட்டத்தினால் கோல் போடும் பல வாய்ப்புகள் முறியடிக்கப்பட்டது.

சுகததாச மைதானத்தில் கோல் மழை பொழிந்த புனித ஜோசப் கல்லூரி

கிறின் மெக்ஸ் கழக கோல் காப்பாளர் ஐ.எல்.எம்.தாலீப் மிகச்சிறந்த முறையில் செயற்பட்டு ஒலிம்பிக் கழக வீரா்களின் அபாராமான உதைகள் பலவற்றையும் தடுத்து நிறுத்தியமை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. போட்டியின் முதல் பாதி முடிவடையும் போது 1-0 என்ற கோல்கள் அடிப்படையில் ஒலிம்பிக் கழகம் முன்னிலை வகித்தது.

 

முதல் பாதி: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1-0  கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழகம்

 

இரண்டாவது பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் ஒலிம்பிக் கழக வீரா்கள் பந்துகளை தடுத்து ஆடுவதிலும் பார்க்க கிறின் மெக்ஸ் கழக கோல் கம்பத்தை நோக்கி பந்துகளை அடிப்பதிலேயே கூடுதலாக செயற்பட்டனர்.

போட்டியின் 65ஆவது நிமிடத்திலும் எம் எம்.ஏ.ஜாவீத் மைதானத்தின் வலது பக்கத்திலிருந்து மிக வேகமாக அடித்த பந்து கோல் காப்பாளரின் கையில் பட்டு கம்பத்திற்குள் சென்றது. இதன் மூலம் 2ஆவது கோலையும் ஒலிம்பிக் கழகம் பெற்றுக்கொண்டது.

ஒரு கோலையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிறின் மெக்ஸ் கழக வீரர்கள் ஒலிம்பிக் கழக கோல் எல்லையை நெருங்கிய போதும் அவர்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒலிம்பிக் கழக வீரா்களின் அபாரமான உதைகளை கிறின் மெக்ஸ் கழக கோல் காப்பாளர் ஐ.எல்.எம்.தாலீப் பிடித்து போட்டியில் அசத்தினார்.

போட்டியின் முழுமையான நேரம் முடிந்த போது ஒலிம்பிக் கழகம் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

முழு நேரம்: ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்  2- 0  கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் வெற்றி பெற்ற ஒலிம்பிக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் யூ.எஸ். சமீம் கருத்துத் தெரிவிக்கும்போது, ”எமது அணி வீரா்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். வீரர்களின் சரியான புரிந்துணர்வுடன் கூடிய பந்து பரிமாற்றம்தான் எமது வெற்றிக்குக் காரணமாகும். அத்தோடு அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முன்னணி சுற்றுப்போட்டிகளில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கிண்ணங்களைக் கைப்பற்றியதனால் இப்போட்டியில் மிகுந்த உற்சாகத்துடனேயே விளையாடினேம்” என்றார்.

பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது அணியாக தகுதிபெற்ற மெக்சிகோ

தோல்வியடைந்த கிறின் மெக்ஸ் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் எம்.தாரீக் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இந்தப் போட்டியில் வென்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றுவோம் என்று நம்பியிருந்தோம். எமது வீரா்களும் திறமையாக விளையாடினார்கள். எதிரணி வீரா்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதுடன் பல கிண்ணங்களையும் கைப்பற்றியவர்கள். எமது அணி அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதுதான், இருந்தபோதும் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளோம். எதிர்காலத்தில் சம்பியன் பட்டத்தை வெல்லும் நிலைக்கு முன்னேற்றம் அடைவோம்” என்றார்.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக எம்.ஆர்.எம்.ரசீட் கடமையாற்றியதுடன் துணை நடுவர்களாக எஸ்.எம். உபைதீன், சீ.எம்.அஸ்கர் செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக ஜே.பாட்சா செயற்பட்டார். போட்டி ஆணையாளராக எம்.எல்.ஜமால்டீன் செயற்பட்டார்.

வெற்றி பெற்ற மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் ரூபா 60,000 பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கு கிண்ணத்துடன் 40,000 ரூபா காசோலையும், மூன்றாமிடத்தைப் பெற்ற கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழக அணிக்கு கிண்ணத்துடன் 20,000 ரூபா காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

கெண்ட் கிக் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் தொடரின் மிகச்சிறந்த வீரராக ஒலிம்பிக் கழகத்தின் எம்.எம்.ஏ. ஜரீத் தெரிவு செய்யப்பட்டு கிண்ணத்துடன் 5,000 ரூபா காசேலையும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக எம்.எம்.ஏ.ஜாவீத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவருக்கு கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

சிறந்த கோல் காப்பாளராக கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக அணியின் கோல் காப்பாளர் ஐ.எல்.எம்.தாலீப் தெரிவு செய்யப்பட்டதுடன் அவருக்கு கிண்ணத்துடன் 5,000 ரூபா காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் சம்பியன் பட்டம் வென்ற ஒலிம்பிக் கழக வீரா்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற கிறின் மெக்ஸ் கழக வீரா்களுக்கும், மூன்றாமிடம் பெற்ற கல்முனை சனி மௌன்ட் கழக வீரா்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை மூன்றாமிடத்தை தெரிவு செய்வதற்கான போட்டி மாலை 6.30 மணிக்கு கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக் கழக அணிக்கும், மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணிக்குமிடையில் இடம்பெற்றது.

இதில் முதல் பாதி ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் மருதமுனை கோல் மைன்ட் அணி கோல் ஒன்றைப்  பெற்று முன்னிலை வகித்தது. இந்த கோலை எச்.வஸீப் அஹமட் அடித்தார்.

முதல் பாதி: கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் 1 – 0 சனி மௌன்ட் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடியது. போட்டியின் 90 நிமிடம் முடிவடைந்த பின்னர் கிடைத்த மேலதிக நேரத்தில் தமக்குக் கிடைத்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திய சனி மௌன்ட் கழக வீரா் எம்.எஸ்.ஹினாஸ் இரண்டு வீரா்களைத் தாண்டி இடது பக்கத்திலிருந்து வேகமாக அடித்த பந்து கம்பத்திற்குள் சென்று கோலாக மாறியது.

முழு நேரம்: கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் 1 – 1 சனி மௌன்ட் விளையாட்டுக் கழகம்

வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இரு அணிகளுக்கும் பெனால்டி வழங்கப்பட்டது. இதில் 4 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் கல்முனை சனி மௌன்ட் விளையாட்டுக்  கழக அணி வெற்றி பெற்றது.

கோல் பெற்றவர்கள்

சனி மௌன்ட் விளையாட்டுக் கழகம் – ஏ.டபிள்யு.எம்.றிபாஸ், ஆர்.எம்.றிழ்வான், ஏ.றிபாய், எப்.எம்.சரபி

கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் – எஸ்.எம்.எம்.எஸ்.ராபி மௌலானா, எச்.வஸீப் அஹமட்

கோல்ட் மைன்ட் கழக வீரா் ஏ. றிபாசுக்கு 23ஆவது நிமிடத்திலும் 65ஆவது நிமிடத்திலும் மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதனால் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

வெற்றி பெற்ற சனி மெளன்ட் கழக பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.மனாப் கருத்துத் தெரிவிக்கும்போது, ”எமது வீரா்களின் இறுதிவரை சளைக்காத ஆட்டம் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. ஆரம்பத்தில் சற்று வேகம் குறைந்த ஆட்டம்தான் கோல்கள் பெற முடியாமல் போனது. இருந்த போதிலும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். எதிர்காலத்தில் சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்” என்றார்.

தோல்வியடைந்த கோல்ட் மைன்ட் கழக பயிற்றுவிப்பாளர் ஏ.சீ.எம்.பைசால் கருத்துத் தெரிவிக்கும்போது, ”கடைசி நிமிடம் வரை வெற்றி எங்களிடம் தான் இருந்தது. மத்தியஸ்தர் 1 நிமிடத்தை கூடுதலாக அதிகரித்தமையால் எதிரணி கோல் பெற்றது. இது கவலைக்குரியதாகும்” என்றார்.  

இப்போட்டிக்கு பிரதான மத்தியஸ்தராக எம்.எல்.வை.அறபாத் கடமையாற்றியதுடன் துணை நடுவர்களாக ஏ.ஜப்ரான் மற்றும் எம்.ரசீட் அகியோர் கடமையாற்றினர்.