டாக்கா டெஸ்ட்டில் சிறந்த ஆடுகளத்தை எதிர்பார்க்கும் கருணாரத்ன

636

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமின்றி பந்து வீச்சாளர்களுக்கு உதவாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளில் (பெப்ரவரி 4) வெற்றியை நோக்கி முன்னேற முடியாதது குறித்து இலங்கை ஏமாற்றம் அடைந்ததாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

[rev_slider LOLC]

பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 81 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களால் பின்தங்கி இருந்த நிலையில் இலங்கை அணி அதிக வெற்றி வாய்ப்புடனேயே கடைசி நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எவ்வாறாயினும் மோமினுல் ஹக் மற்றும் லிடொன் தாஸ் அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை சிதறடித்ததோடு போட்டி சமநிலையில் முடிந்தது.

சிறிய தோற்றம் கொண்ட இடது கை துடுப்பாட்ட வீரரான மோமினுல் ஹக் முதல் இன்னிங்சில் 176 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டாவது இன்னிங்சில் 174 பந்துகளில் 105 ஓட்டங்களை குவித்து பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற உதவினார். இதனை அடுத்து போட்டி முடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும்போது ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் இணங்கின.

இலங்கை அணி பங்களாதேஷ் துடுப்பாட்ட வரிசைக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் மோமினுல் பெற்ற இரண்டாவது சதம் மற்றும் லிடோனுடனான இணைப்பாட்டம் இல்லாவிட்டால் பங்களாதேஷ் முன்கூட்டியே விக்கெட்டுகளை பறிகொடுத்திருக்கும். மோமினுல் மற்றும் தனது கன்னி சதத்தை ஆறு ஓட்டங்களால் இழந்த லிடொன் தாஸ் ஆகியோர் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்து நான்காவது விக்கெட்டுக்காக 180 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையின் வெற்றி வாய்ப்பை சிதறடித்த மோமினுலின் சதம்; போட்டி சமநிலையில் முடிவு

பங்களாதேஷ் அணியின் 513 ஓட்டத்திற்கு பதிலடி கொடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து 713 என்ற இமாலய ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி 200 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்தது. “பங்களாதேஷ் அணி 500 இற்கும் அதிகமான ஒட்டங்களை பெற்ற நிலையில் எமது துடுப்பாட்ட வீரர்கள் அதிக திறமையை வெளிக்காட்டி 700 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றனர். அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தே இந்த ஆடுகளத்தில் எமது வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றனர்” என்று போட்டி சமநிலையில் முடிந்த பின் கருணாரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே 1,500 இற்கும் அதிகமான ஓட்டங்கள் பெற்றிருக்கும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த ஆடுகளம் பொருத்தமானது என நான் நினைக்கவில்லை. அது பந்துவீச்சாளர்களுக்கும் கூட சாதகமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கருணாரத்ன மேலும் கூறினார்.  

“பொதுவாக துணைக் கண்டத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாட்களில் பந்து சற்று சுழல ஆரம்பிக்கும். துடுப்பாட்ட வீரர்களுக்கு கூட பின் காலை பயன்படுத்தி வேகமாக துடுப்பெடுத்தாட முடியுமாக இருக்கும். ஆட்டத்தில் சரியான திசையை எட்டி விட்டால் இந்த ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரருக்கு அதிக ஓட்டங்களைப் பெற முடியும். ஓட்ட பலகையில் அதிகமான மிகப் பெரிய ஓட்டங்கள் இருந்தன” என்று திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.   

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியில் இணைந்த அதிரடி வீரர்

“அடுத்த டெஸ்ட்டில் சரிசமனான விக்கெட் ஒன்று கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மோமினுல் இரண்டு இன்னிங்சுகளிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதற்கு பாராட்டு வெளியிட்ட கருணாரத்ன, அவர் லிடொன் தாசுடன் இணைந்து பெற்ற இணைப்பாட்ட ஓட்டங்கள் போட்டியின் முக்கிய அம்சமாக குறிப்பிட்டார். “இரண்டு இன்னிங்சுகளிலும் மோமினுல்லின் துடுப்பாட்டத்திற்கு அவருக்கு பாராட்டுகள் சேர வேண்டும். ஐந்தாவது நாளின் காலை நேர ஆட்டம் தீர்க்கமானதாக இருந்தது. நாங்கள் சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் எமக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது” என்றார் கருணாரத்ன. “மோமினுல் மற்றும் லிடொன் சிறப்பாக ஆடினர். பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மிக மந்தமாக இருந்தது. பந்து சுழலவோ அல்லாது மேலெழவோ இல்லை. துடுப்பாட்ட வீரர்கள் தமது இயல்பான ஆட்டத்தை ஆடினார்கள்” என்றும் கூறினார்.    

“ஐந்தாவது நாளின் காலை நேரத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். பந்து வீச்சாளர்களுக்கு எந்த சாதகமும் இருக்கவில்லை. என்றாலும் அதுவும் போட்டியின் ஓர் அங்கமே” என்றார்.

சுதந்திர தினத்தன்று போட்டியில் வெற்றி பெற்று அதனை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கும் வாய்ப்பு பறிபோனது குறித்தும் கருணாரத்ன வருத்தம் தெரிவித்தார். “அன்று எமது சுதந்திர தினம் என்பதால் (வெற்றி பெற்றால்) சிறப்பாக இருந்திருக்கும். நாம் அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமே உதவியது, அவர்கள் அதிக ஓட்டங்கள் குவித்தார்கள்” என்றார் திமுத் கருணாரத்ன.