இலங்கையின் முன்னணி ரக்பி அணியான கண்டி விளையாட்டுக் கழகத்தின் அனுபவமிக்க முன்வரிசை வீரர் கிஷோர் ஜெஹான், இவ்வாரம் CH & FC அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியுடன் கழக மட்ட போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாக கண்டி அணி சார்பில் விளையாடி வரும் கிஷோர், 2007ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேசிய ரக்பி அணியின் முக்கிய முன்வரிசை வீரராகவும் காணப்பட்டார்.

கிஷோர் ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில், “நான் மிகவும் நேசித்த ரக்பி விளையாட்டில் இருந்து விடைபெற இதுவே சரியான தருணம் என எண்ணுகின்றேன். நான் பன்னிரண்டு வருடங்களாக கண்டி கழகம் சார்பில் விளையாடி வந்ததுடன், பத்து வருடங்களாக ரக்பி விளையாட்டின் மிக உயர்ந்த மட்டமான தேசிய மட்டத்தில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளேன். எனவே நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விடைபெறுகின்றேன்,” என்றார்.

கிஷோர் ஜெஹான் ரக்பி விளையாட்டிற்குள் பிரவேசித்த விதமானது ஆச்சரியத்துக்குரியதொன்றாகும். அது பற்றி அவர் கூறும் போது,

Kishore Jehan

“நான் பத்திரிகை விளம்பரம் ஒன்றின் மூலமே இலங்கை ரக்பி சங்கத்தினால் வளர்ச்சி அணிக்கான வீரர்களை தெரிவு செய்யவிருப்பதை அறிந்து கொண்டேன். நான் பாடசாலையிலிருந்து சிறிது காலத்திற்கு முன்னரே விலகியிருந்தேன். அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அதற்கு விண்ணப்பித்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பயிற்சிகளை மேற்கொண்டு வளர்ச்சி அணிக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது எனது முதல் பயிற்றுவிப்பாளராக திரு. ஹிஷாம் ஆப்தீன் பயிற்சிகளை வழங்கினார்” எனத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன்னணி வீரர் ஒருவராக காணப்பட்ட ஹிஷாம் ஆப்தீன் தனது சீடனான கிஷோர் ஜெஹான் பற்றி பின்வரும் கருத்தினை வெளியிட்டார்.

“கிஷோர் பலமிக்க மற்றும் சிறப்பான வேகத்தை கொண்டிருந்த போதிலும், அவர் ரக்பி விளையாட்டை பற்றி எவ்விதத்திலும் அறிந்திருக்கவில்லை. ரக்பி பந்தினை கூட அவர் கண்டிருக்கவில்லை என்பதே உண்மை. நான் முதலில் அவரை ஒரு பின்வரிசை வீரராக சென்டர் மற்றும் விங் நிலைகளில் விளையாடக் கூடிய வகையிலே பயிற்றுவித்தேன். எனினும் பின்னர் அவரை ஒரு முன்வரிசை வீரராக பயிற்சியளிக்க முடிவு செய்தேன். தினசரி பயிற்சிகளின் பின்னர் நான் அவருக்கு இரண்டு உணவுப் பொதிகளை கொடுப்பது வழமை,” என சிரித்துக் கொண்டே கூறினார். அத்துடன் கடின உழைப்பின் மூலம் கிஷோர் விளையாட்டில் உயர்ந்த நிலைக்கு வந்தமை தொடர்பில் தான் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி மற்றும் இலங்கை அணிகள் சார்பில் விளையாடிய மற்றுமொரு முன்னாள் வீரரான L. V. ஏக்கநாயக்கவும் தனது கருத்தினை தெரிவித்தார். “ஹிஷாம் ஆப்தீனின் உதவி இல்லாவிட்டால் கிஷோரினால் இந்நிலைக்கு முன்னேறியிருக்க முடியாது. கிஷோர் மிகவும் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே ஒரு முன்வரிசை வீரர் என்ற போதிலும் அவரால் பத்து வருடங்களுக்கு தொடர்ந்து இலங்கை அணியில் விளையாடக் கூடியதாக இருந்தது. அத்துடன் அவர் பாடசாலை மட்டத்தில் ரக்பி விளையாட்டில் ஈடுபடாத ஒருவராக இருந்த போதிலும், தேசிய மட்டம் வரை முன்னேறியமை உண்மையில் வியக்கத்தக்க ஒரு விடயமாகும்,” என்றார்.

கிஷோர் ஜெஹானுடன் பல வருடங்கள் சக அணி வீரராக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பாசில் மரிஜா அவரது பிரியாவிடை தொடர்பாக கூறும் போது, “கிஷோர் ஆரம்ப காலம் முதலே அபாரமான வேகத்தை கொண்டிருந்ததுடன், ஒவ்வொரு வருடமும் அவர் தனது திறமையை சீராக வெளிக்காட்டியிருந்தார். Kishore Jehan 2017அவர் எவ்வேளையும் தனது திறன்களை வளர்த்துக் கொள்வதில் முனைப்பாக இருந்தார். கிஷோர் எமது கழகத்திற்கும் நாட்டிற்கும் அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளார் என்றால் மிகையாகாது. முக்கியமாக அவர் ஆடுகளத்திலும், களத்திற்கு வெளியேயும் அடக்கமான, பணிவான ஒருவராக இருந்தார் என்பதை குறிப்பிட்டுக் கூறலாம்,” எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் முன்வரிசை வீரர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் பின்னர் பாடசாலை மற்றும் கழக மட்ட அணிகளின் முன்வரிசை பயிற்றுவிப்பாளராக செயலாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் கிஷோர் ஜெஹான் குறிப்பிட்டார்.

நாம் Thepapare.com சார்பில் கிஷோர் ஜெஹானின் எதிர்காலம் சுபீட்சமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.