ஆசிய விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தை பெறும் வாய்ப்பை இழந்த இலங்கை

152

ஜகார்த்தாவின் கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் இன்று (26) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் காலிங்க குமாரகே எட்டாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட ஜானக பிரசாத் விமலசிறி, 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் காலிங்க, பிரசாத் இறுதிப் போட்டிக்குத் தகுதி

இதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற மற்றுமொரு அரிய வாய்ப்பு இன்றைய தினம் நிறைவேறாமல் போனது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்றுவரும் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் எட்டாம் நாளுக்கான போட்டிகள் இன்று (26) நடைபெற்றது.

இதில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாகவும், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு ஒருசில பதக்கங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்றன.

இலங்கை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான காலிங்க குமாரகே கலந்துகொண்டார்.

கட்டார், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசியாவின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த அதிசிறந்த குறுந்தூர ஓட்ட வீரர்கள் கலந்துகொண்ட குறித்த போட்டியில் முதலாவது சுவட்டில் ஓடிய காலிங்க குமாரகே, 46.49 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, நேற்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட காலிங்க குமாரகே, 45.99 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து, தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவுசெய்தார்.

அத்துடன், குறித்த போட்டிப் பிரிவில் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் பதிவுசெய்த அதிசிறந்த இரண்டாவது நேரப்பெறுமதியாகவும் அது இடம்பிடித்தது.

சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட காலிங்க குமாரகே மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதற்காக அவர் 46.21 செக்கன்களை எடுத்துக் கொண்டார். எனவே, இலங்கை அணிக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற வீரர்களுள் ஒருவராக கருதப்பட்ட காலிங்க குமாரகேவுக்கு இறுதிப் போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இது இவ்வாறிருக்க, விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்ற 400 மீற்றர் இறுதிப் போட்டியில் கட்டார் வீரர் ஹசன் அப்தலில்லாஹ் 44.89 செக்கன்களில் போட்டியை முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியாவின் மொஹமட் அனாஸ் (45.69 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பஹ்ரைன் வீரர் காமிஸ் அலி (45.70 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பிரசாத்துக்கு ஏழாமிடம்

ஆசியாவின் 12 முன்னணி வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (26) இரவு நடைபெற்றது.

இதில் இலங்கை சார்பாக போட்டியிட்ட ஜானக பிரசாத் விமலசிறி, 7.86 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் முதலாவது முயற்சியில் 7.86 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதல் நான்கு வீரர்களுக்குள் இடம்பிடித்த பிரசாத், அடுத்த இரண்டு முயற்சிகளிலும் 7.75, 7.51 மீற்றர் தூரங்களைப் பாய்ந்து முன்னிலை பெற்றிருந்தார்.

எனினும், இறுதி மூன்று முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய பிரசாத்துக்கு ஏழாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

நேற்று நடைபெற்ற நீளம் பாய்தல் தகுதிகாண் போட்டியில் முதல் 7.56 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த ஜானக பிரசாத், ஒட்டுமொத்த வீரர்களின் அடிப்படையில் 11 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில்  நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஜானக பிரசாத் விமலசிறி, ஏப்ரல் மாத இறுதியில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 8.14 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இந்த நிலையில், ஆண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் சீனாவின் வேங் ஜியனென், 8.24 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், மற்றுமொரு சீன வீரரான ஷேங் யெகுவாங் (8.15 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் சப்வதுர் ரஹ்மான் (8.05 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நான்கு மெய்வல்லுனர்கள் களத்தில்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு குறைந்தபட்சம் இரண்டு பதக்கங்களையாவது பெற்றுக்கொடுக்கின்ற போட்டிகளாக கருதப்படுகின்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) காலை ஆரம்பமாகவுள்ளன. இதில் பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் நடப்புச் சம்பியன்களான நிமாலி லியானாரச்சி மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகியோர் முதலாவது மற்றும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்

அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான 800 மீற்றரில் இலங்கையின் தேசிய சம்பியனும், கடந்த சில மாதங்களாக கென்யாவில் பயிற்சிகளைப் பெற்றுவந்த இந்துனில் ஹேரத், ஆண்களுக்கான முதலாவது தகுதிச்சுற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதில் வெற்றிபெறுகின்ற வீரர்கள், நாளை இரவு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டலில் தேசிய சம்பியனும், கடந்த பெப்ரவரி மாதம் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற முன்னோடிப் போட்டிகளில் புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கமும் வென்ற நிலானி ரத்னாயாக்க, நாளை இரவு நடைபெறவுள்ள பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<