ரினௌன் அணியோடு இணையும் சொலிட் இளம் வீரர் ஜூட்சுபன்

1138
Jude suman

கடந்த பல ஆண்டுகளாக அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வந்த இளம் கால்பந்து வீரர் செபமலைநாயகம் ஜூட்சுபன் இந்த பருவகாலத்தில் விளையாடுவதற்காக இலங்கையின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ரினௌன் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்துள்ளார்.  

இளம் வீரர் படையணியைக் கொண்டுள்ள ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக செயற்பட்ட தேசிய அணி வீரர் மொஹமட் ரிப்னாஸ், அண்மையில் அவ்வணியில் இருந்து விலகி கொழும்பு கால்பந்துக் கழகத்துடன் இணைந்தார். குறித்த செய்தி வெளியாகிய நிலையிலேயே, தற்பொழுது ஜூட்சுபன் ரினௌன் அணியுடன் இணைந்த செய்தியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைந்த அடுத்த பிரபலம் ரிப்னாஸ்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில்..

ரினௌன் விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக கடந்த 3 வருடங்களாக டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் இறுதி வாரப் போட்டிகள் வரை முன்னிலையில் நீடித்தாலும், இறுதி வாரத்தில் கொழும்பு கால்பந்துக் கழகம் தொடரின் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து, தொடர்ந்து 3 முறை DCL கிண்ணத்தை சுவீகரித்த அணியாக தம்மைப் பதிவு செய்துள்ளது.

இவ்வாறு DCL இல் தொடர் ஏமாற்றங்களை சந்தித்த ஒரு அணியாக உள்ள ரினௌன் அணியின் நிர்வாகம், இவ்வருடம் தமது முதலாவது புதிய வீரராக ஜூட்சுபனை இணைத்துள்ளது. இது, இவ்வருடமும் அவ்வணி இளம் வீரர்களுடனேயே விளையாட இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

விளையாட்டு போன்றே, கல்வியிலும் திறமை கொண்ட இவர் உயர்தரப் பரீட்சையில் A, 2B என்ற பெறுபேற்றைப் பெற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவப் பிரிவில் உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பல்கலைக்கழக வாய்ப்பும் அவர் ரினௌன் அணியில் இணைவதற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரினௌன் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லாஹ் ”நாம் எப்பொழுதும் இளம் வீரர்களுடன் ஆடும் அணி. அந்த வகையில் எமது புதிய வீரராக ஜூட்சுபன் இணைந்துள்ளார். திறமையான, வளர்ந்து வரும் வீரராக உள்ள இவரை எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி வீரராக மாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இவர் மூலம் கழகத்திற்கு சிறந்த ஒரு பங்களிப்பை எதிர்பார்த்துள்ளோம். அது போன்றே அவரும் எம்மிடமிருந்து சிறந்த பயனை பெற எதிர்பார்த்துள்ளார்” என்றார்

யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியின் முன்னாள் வீரரான ஜூட்சுபன், 14 வயது முதல் தனது கல்லூரிக்கு தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த ஒரு வீரராவார்.

வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது?

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும்..

அதில் குறிப்பாக, 2014ஆம் அண்டு இடம்பெற்ற ”கொல்சிம் கிண்ண” 17 வயதின் கீழ் கால்பந்து தொடரில் புனித ஹென்ரியரசர் கல்லூரி ஜூட்சுபனின் தலைமையிலேயே தேசிய மட்ட சம்பியனாகியது. பின்னர் 2016ஆம் ஆண்டு கொத்மலை சொக்ஸ் கிண்ணத் தொடர் மற்றும் 2017ஆம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடர் என்பவற்றில் தனது கல்லூரியை தேசிய சம்பியனாக்க இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது.

இலங்கை தேசிய அணி மற்றும் சொலிட் விளையாட்டுக் கழக வீரர் ஞானரூபன் வினோதின் சகோதரரான ஜூட்சுபன் கடந்த கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சொலிட் விளையாட்டுக் கழகத்தில் விளையாடி வருகின்றார். எனவே, கழக மட்டத்தில் இவர் பெற்ற அனுபவம் ரினௌன் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரினௌன் அணியுடன் இணைந்தமை குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த ஜூட்சுபன் ”முதலில், என் கழக மட்ட கால்பந்துக்கு அடித்தளமிட்ட இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளர் ஜெஸ்மின் மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.  

தாய்நாட்டு தேசிய அணிக்கு விளையாட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள எனக்கு கொழும்புக்கு நகர வேண்டி ஏற்பட்டது. எனவே, கால்பந்தைத் தொடர்வதற்கு சிறந்த ஒரு அணியைத் தேடினேன். இறுதியாக, ரினௌன் அணியைத் தெரிவு செய்தேன்” என்றார்.  

பாடசாலைக் காலத்தில் முன்கள வீரராக இருந்த இவர், 2015ஆம் ஆண்டு 19 வயதின் கீழ் தேசிய அணிக்கு தெரிவாகிய வேளை, அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் சுமித் வல்பொல ஜூட்சுபனை பின்களத்தில் விளையாடுவதற்கு தயார்படுத்தினார். அன்று முதல் அவர் பின்களத்தில் விளையாடும் வீரராக உள்ளார்.  

அனைத்து இடங்களிலும் விளையாடும் ஆற்றல் கொண்ட ஜூட்சுபனுக்கு ரினௌன் அணியில் இருந்து விலகிய ரிப்னாஸின் மத்திய களத்திலும் விளையாட முடியும் என்பது ரினௌன் அணிக்கு ஒரு சாதகமகவே உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமானுல்லாஹ் ”ரினௌன் அணியில் விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ரிப்னாஸ் முக்கியமானவர். அவரது தலைமைத்துவம், அணிக்கான அர்ப்பணிப்பு என்பன வித்தியாசமானது. ரிப்னாஸின் இடத்தை மற்றொரு வீரரால் நிரப்புவது என்பது கடினமான விடயம். எனினும், அணியில் நாம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவோம். நாம் ஜூட் சுபனை அணியில் எந்த இடத்தில் விளையாட விடுவோம் என்பதை விட. நாளை அவரை இலங்கையின் முன்னணி வீரர்களில் ஒருவராக மாற்றுவோம்” என்றார்.  

எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாணத்தில் தனது சொந்த கழகமான யங் ஹென்ரீசியன்ஸ் அணிக்காக பிரகாசித்து வந்த ஜூட்சுபன், இலங்கை இளையோர் தேசிய அணியில் விளையாடிய நாள் முதல் தேசிய மட்டத்தில் பலரது அவதானத்தையும் பெற்றார்.  

இந்நிலையில் தான் ரினௌன் அணியைத் தெரிவு செய்தமைக்கான காரணத்தை எம்மோடு பகிர்ந்த ஜூட்சுபன், ”அதிகமான இளம் வீரர்கள் மற்றும் இலங்கையின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவருமான அமானுல்லாஹ் பயிற்றுவிக்கும் ரினௌன் அணியின் விளையாட்டு மிகவும் வித்தியாசமானது. எனவே, இளம் வீரர்கள் பிரகாசிக்கும் அவ்வாறான ஒரு அணியில் இணைந்து  விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ரினௌன் அணியை நான் தெரிவு செய்தேன்” என்றார்.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<