இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக ஜோ ரூட்

881
joe-root-
photo courtesy: SkySports

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட்டை டெஸ்ட் குழாத்தின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB)  நேற்று (13) நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், டெஸ்ட் குழாத்தின் துணைத் தலைவர் பொறுப்பு பென் ஸ்டோக்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் அன்ட்ரூ ஸ்டொர்ஸ், கடந்த வாரம் அணித் தலைவருக்கான நேர்முக தேர்வினை ஜோ ரூட்டுடன் மேற்கொண்டதோடு, உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டோக்ஸ் இணையும் சந்தித்தார். அதன்போது, இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் ப்ரோட்டும் கலந்து கொண்டிருந்தார்.  

அதன்போது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அண்மைய நிலவரங்களிற்கு தீர்வாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தனது கருத்தினையும் அன்ட்ரூ ஸ்டொர்ஸ் பகிர்ந்து கொண்டார்.  

இங்கிலாந்து அணி, அண்மையில் இந்தியாவுடன் 4-0 என்ற வகையில் டெஸ்ட் தொடரினை பறிகொடுத்திருந்தது. இத்தோல்வி காரணமாக அத்தொடரில் இங்கிலாந்து அணியினை தலைமை தாங்கியிருந்த அலஸ்டைர் குக் தனது தலைமை பொறுப்பை ராஜினாமா செய்து கொண்டார். இதன் காரணத்தினாலேயே, புதிய தலைவருக்கான தேவை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டிருந்தது.  

இங்கிலாந்து அணியினை 59 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியிருக்கும் குக், இங்கிலாந்து அணி சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளில் அணித் தலைவராக செயற்பட்ட பெருமையினை தன்னகத்தே கொண்டுள்ளார்.

இதுவரை நான்கு முதல்தர போட்டிகளில் மாத்திரம் அணியை தலைமை தாங்கியிருக்கும் ரூட், 2015ஆம் ஆண்டிலிருந்து குக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு பிரதித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

இதுவரையில் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரூட், வியக்கத்தக்க வகையில் 52.80 என்கிற ஓட்ட சராசரியுடன் 4,500 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்.  

அணியின் தலைமைப் பொறுப்பினை பெற்றுக்கொண்ட ரூட் கருத்து தெரிவிக்கையில், ”இங்கிலாந்து அணியின் தலைமைப் பதவி தனக்கு கிடைத்ததன் மூலம், மிகப் பெரும் கெளரவத்திற்கு நான் உள்ளாகியுள்ளேன். அணியின் தலைமைப் பொறுப்பு மூலம் மிகவும் மகிழ்ச்சி கலந்த உணர்வுகளுடன் இருக்கின்றேன்” என்றார்.

அத்துடன், வரும் கோடை காலத்தில், தனது அணியில் இருக்கும் சிறந்த வீரர்கள் குழாத்தினை சரிவர வழிநடாத்துவதோடு, முன்னாள் தலைவர் குக்கின் சிறந்த தலைமையில் அணி எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டதோ, அது போன்று தனது தலைமையிலும் அணி கட்டியெழுப்பபடும்” என்றும் ரூட் தனது தன்னம்பிக்கியினை வெளியிட்டிருந்தார்.

மேலும், அணியினை வழிநடாத்த அணியில் உள்ள மூத்த வீரர்களின் ஆலோசனைகள் தனக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.  

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நிறைவேற்று அதிகாரி கொலின் கிரேவ்ஸ், ஜோ ரூட்டினை அணியின் 80ஆவது டெஸ்ட் தலைவராக தெரிவு செய்தது மிகச் சிறந்த விடயம் என்று கூறியிருந்தார். மேலும், அனைவரின் கருத்துக்களுக்கும் மரியாதை அளிக்கும் வீரர்களில் ரூட்டும் ஒருவர் என்று புதிய தலைவரின் தன்னடக்கத்திற்கு சான்று பகிர்ந்தார்.

அத்துடன், வரும் காலத்தில் அணியினை சிறப்பாக வழிநடாத்த தனது வாழ்த்துக்களையும், ரூட்டிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் தனது கருத்தினை கிரேவ்ஸ் தெரிவித்திருந்தார்.

மேலும், தலைவரை தெரிவு செய்த அன்ட்ரூ ஸ்டொர்ஸ் கருத்து தெரிவிக்கையில், தேர்வாளர்களினால் தலைமை பொறுப்பிற்கு ரூட்டின் பெயர் சிபாரிசு செய்யப்பட்ட தருணத்தில், அதனை ரூட்டிடம் தெரிவித்த போது எந்தவித தயக்கமோ, பதற்றமோ இன்றி அப்பதவியினை அவர் ஏற்றுக்கொண்டார். ரூட்டே எமது டெஸ்ட் குழாத்திற்கான பொருத்தமான அணித் தலைவர்” என்று குறிப்பிட்டார்.

இன்னும், அலஸ்டைர் குக்கின் பதவி விலகளின் பின்னர், பல கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான் ரூட்டிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ், தனது சிறப்பான சகல துறை ஆட்டம் மூலம் ஜோ ரூட்டிற்கு ஓத்தாசையாக இருப்பார் என்றும் கூறி, குறித்த இரு வீரர்களின் மீதான நம்பிக்கையினையும் அன்ட்ரூ ஸ்டொர்ஸ் வெளியிட்டிருந்தார்.

ஜோ ரூட், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஜூலை மாதத்தில் தனது சொந்த மண்ணில் இடம்பெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தலைவர் பாத்திரத்தினை முதல் தடவையாக ஏற்கவுள்ளார்.

அதனையடுத்து இங்கிலாந்து இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான பிரபல்யமான அஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.