வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

407

இலங்கை அணியும், இந்திய அணியும் 1996ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மோதிய குழுநிலைப் போட்டி ஒன்று அது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சனத் ஜயசூரிய தனது மிரட்டல் துடுப்பாட்டம் மூலம் இந்திய அணியின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரரான மனோஜ் பிரபாகரின் கிரிக்கெட் வாழ்க்கையினையே முடிவுக்கு கொண்டு வந்தார்.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்

இலங்கை அணியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே திமுத்….

இந்திய அணியுடனான போட்டிக்கு முன்னர் உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளில் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் இலங்கை அணியுடன் விளையாடியிருக்கவில்லை. இதனால், டெல்லியில் நடைபெற்ற போட்டியே இலங்கை அணிக்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் முதல் போட்டியாக அமைந்தது.  

1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடருக்கு முன் இலங்கை அணியின் உலகக் கிண்ணப் போட்டி பதிவுகள் சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை. ஒரு கத்துக்குட்டியாகவே இலங்கை அணி இந்திய அணியுடனான போட்டிக்கு முன்னர் 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தின் போது காணப்பட்டிருந்தது.

இதேநேரம், சொந்த மைதானம், திறமைமிக்க வீரர்கள், தோல்வியை வெறுக்கும் இரசிகர்கள் பட்டாளம் என போட்டியின் முழு ஆதிக்கமும் உலகக் கிண்ணத்தில் ஏற்கனவே (1983) ஒரு தடவை வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு சாதகமாகவே இலங்கையுடனான போட்டியின் போது காணப்பட்டது.

ஆனால், இப்போட்டியின் முடிவுக்கும், மறக்க முடியாத சம்பவம் ஒன்றுக்கும் இலங்கையின் இளம் வீரர் ஒருவர் காரணமாக இருக்கப் போகின்றார் என்பதை மைதானத்தில் இருந்த யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து போட்டி ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரனதுங்க முதலில் இந்திய அணியினை துடுப்பாட பணித்தார்.  

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு, அதன் தலைவர் மொஹமட் அஸாருதீன் மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டென்டுல்கர் ஆகியோர் அபாரமான முறையில் ஓட்டங்கள் சேர்த்து உதவினர்.

இதில், சதம் கடந்த சச்சின் டென்டுல்கர் 137 ஓட்டங்களைப் பெற, மொஹமட் அஸாருதீன் அரைச்சதம் ஒன்றுடன் 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இப்போட்டியில் டென்டுல்கர் அப்போது தான் ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு வீரர்களின் அபார துடுப்பாட்டத்தோடு இந்திய அணி போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 272 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.  

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில்….

இந்த வெற்றி இலக்கு கடினமான ஒன்று என்பதால் இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தில் மற்றுமொரு வெற்றி கிடைக்கப் போகின்றது என அனைவரும்  எண்ணத் தொடங்குகின்றனர். இத்தருணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஆரம்பமாகின்றது.

வெற்றி இலக்கினை துரத்த இலங்கை அணிக்கு அதிரடி ஆரம்பம் ஒன்று தேவைப்படுகின்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்ய சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் கலுவிதாரன ஆகியோர் மைதானத்திற்குள் வருகின்றனர்.

இதில் சனத் ஜயசூரிய அதிரடியான துடுப்பாட்டம் மூலம் போட்டியின் போக்கினை மாற்றக் கூடியவர் என்ற போதிலும், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு முன்னர் அவர் குறைவான போட்டிகளிலேயே  ஜொலித்திருந்தார்.

மறுமுனையில், சவால்மிக்க இந்திய அணியின் பந்துவீச்சை இன் ஸ்விங், அவுட் ஸ்விங் பந்துகளை வீசுவதில் தேர்ச்சிமிக்க வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் மனோஜ் பிரபகார் ஆரம்பம் செய்ய காத்திருக்கின்றார். இலங்கை  அணியுடனான போட்டியில் விளையாட முன்னர் 129 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய பிரபாகர் அவற்றில் 157 விக்கெட்டுகளை கைப்பற்றிய அனுபவத்தினை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், பிரபாகருக்கு இப்போட்டி அவரின் கிரிக்கெட் வாழ்க்கையினை மாற்றப் போகின்றது என்பது தெரியாது.

மனோஜ் பிரபகார்   Photo – PA Images/Getty Images

தொடர்ந்து பிரபாகர் முதல் ஓவரினை வீச ஆரம்பிக்கின்றார். பிரபாகரின் முதல் ஓவரில் கலுவிதாரன 2 பெளண்டரிகள் விளாச இலங்கை அணி போட்டியின் முதல் ஓவரில் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்கின்றது. இதனை அடுத்து இரண்டாவது ஓவரில் இலங்கை அணி 9 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது ஓவரிற்கு நகர்கின்றது.

மூன்றாவது ஓவரினை வீச இந்திய அணித்தலைவர் மொஹமட் அஸாருதீன் மீண்டும் பிரபாகரினை அழைக்கின்றார். இங்கே பிரபாகரினை எதிர்கொள்ள சனத் ஜயசூரிய தயராகிக் கொண்டிருக்கின்றார். பிரபாகரின் ஓவரின் முதல் பந்துவீசப்படுகின்றது. இதனை மிக நேர்த்தியாக எதிர்கொண்ட சனத் ஜயசூரிய, அதனை ஓப் திசையில் ஒரு பெளண்டரியாக மாற்றுகின்றார்.

தொடர்ந்து பிராபகரின் இரண்டாவது பந்தில் ஒன் திசையில் ஒரு சிக்ஸர்  ஜயசூரியவினால் விளாசப்படுகின்றது. மூன்றாவது பந்தில் ஓட்டங்கள் எதனையும் பெறாத ஜயசூரிய, பிரபாகரின் கடைசி மூன்று பந்துகளுக்கும் மைதானத்தின் வெவ்வேறு திசைகளில் தொடர்ச்சியாக மூன்று பெளண்டரிகளை விளாசியிருந்தார். பிரபாகர் ஜயசூரியவினை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை அனைத்தும் வீணாகியிருந்தது.

இத்தருணத்தில் சனத் ஜயசூரியவின் அதிரடி ஆட்டத்தினை மெச்சிய  தொலைக்காட்சி வர்ணனையாளரான டொனி கிரேக் இப்படியே ஆட்டம் சென்றால் போட்டி வெறும் பதினைந்து  ஓவர்களுக்குள் நிறைவடைந்துவிடும் எனக் கூறினார். இதேநேரம், எல்லைகளுக்கு அப்பால் மட்டுமே பந்தினை விரட்டிய சனத் ஜயசூரிய தனது அதிரடி ஆட்டம் மூலம் மனோஜ் பிரபாகரின் ஓவரில் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர்….

T20 போட்டிகள் இல்லாத 1996ஆம் ஆண்டில் வீரர் ஒருவர், ஓவர் ஒன்றிற்கு அதுவும் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் ஒருவருக்கு  எதிராக 22 ஓட்டங்கள் பெறுவது என்பது அப்போது மிகப் பெரிய விடயமாக பார்க்கப்பட்டது.

இதேவேளை, இளம் வீரரான சனத் ஜயசூரியவின் அதிரடியைக் கண்டு மலைத்த இந்திய அணித்தலைவர் மொஹமட் அஸாருதீன், மூன்றாவது ஓவருக்குப் பின்னர் சனத் ஜயசூரிய ஆட்டமிழக்கும் வரையில் மனோஜ் பிராபகரிற்கு பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. அஸாருதீனினால் வாய்ப்பு வழங்கப்படாத பிரபாகர் தனது முதல் இரண்டு ஓவர்களை 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தவாறு நிறைவு செய்திருந்தார்.

அதேநேரம் மனோஜ் பிரபாகரினை துவம்சம் செய்த சனத் ஜயசூரிய ஆட்டமிழக்கும் போது அரைச்சதம் ஒன்றினை பெற்று 76 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சனத் ஜயசூரியவின் ஆட்டமிழப்பினை அடுத்து பந்துவீச வந்த மனோஜ் பிரபாகர் தனது பந்துவீச்சுப்பாணியினை மாற்றி மைதானத்தில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முன்னர் வேகப் பந்துவீச்சாளராக பந்துவீசிய பிரபாகர் தனது வேகப் பந்துவீச்சிற்கு இருந்த ஆற்றலை சனத் ஜயசூரிய இல்லாமல் செய்தது போல் சுழல் பந்துவீச்சாளராக போட்டியில் இன்னும் இரண்டு ஓவர்களை வீசினார்.

ஆனால் சுழல் பந்துவீச்சாளராக மாறி மனோஜ் பிரபாகர் வீசிய இரண்டு ஓவர்களிலும் இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்படி மனோஜ் பிரபாகர் எந்தவித விக்கெட்டுகளையும் கைப்பற்றாது  4 ஓவர்களுக்கு மொத்தமாக 47 ஓட்டங்களை விட்டுத்தந்தவாறு போட்டியில் பந்துவீசுவதை நிறுத்தினார்.

சனத் ஜயசூரியவின் விக்கெட்டுக்குப் பின்னர் மனோஜ் பிரபாகரின் இறுதி இரண்டு ஓவர்களையும் எதிர் கொண்ட அர்ஜுன ரணதுங்க, ஹஷான் திலகரட்ன ஜோடி இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுகாக 131 ஓட்டங்களை பகிர்ந்து போட்டியின் வெற்றி இலக்கினை 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது.

இதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி 1996ஆம் கிரிக்கெட் உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியதுடன், இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு போட்டியில் அவர்களை சொந்த மண்ணில் வைத்தே தோற்கடித்தது.

இலங்கை அணியின் போட்டி வெற்றிக்கு சனத் ஜயசூரியவுடன் சேர்ந்து உதவிய ஹஷான் திலகரட்ன அரைச்சதத்தோடு 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நிற்க, அர்ஜுன ரணதுங்க 46 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.

மனோஜ் பிரபாகர் இலங்கை அணியுடனான இந்தப் போட்டியின் பின்னர் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இந்தியா விளையாடிய போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, சில நாட்களில் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்தார். இதன்படி பிரபாகரிற்கு இலங்கை அணியுடனான உலகக் கிண்ணப் போட்டி கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.

கேள்விக்குறியாகும் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு

ஆக சனத் ஜயசூரியவின் மிரட்டல் துடுப்பாட்டம் ஒரு சிரேஷ்ட வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையினையே நிறைவு செய்ய காரணமாகவிட்டது. இதனை அடுத்து தொடர்ந்து வந்த போட்டிகளில் சனத் ஜயசூரியவின் அதிரடி ஆட்டத்தினால் 1996ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தினையும் ஒரு கத்துக்குட்டியாக இலங்கை அணி கைப்பற்றிக் கொண்டது.

அதேவேளை, சனத் ஜயசூரியவின் மிரட்டல் துடுப்பாட்டத்தினால் 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டி ஒன்றில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் பில் டெப்ரெய்டசும் மனோஜ் பிரபாகர் போன்று சுழல் பந்துவீச்சாளராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்களின் கிரிக்கெட் வாழ்க்கையினையே நிறைவுக்கு கொண்டுவரும் அளவுக்கு திறமைமிக்க வீரர்களை கொண்டிருந்த இலங்கை அணி, அடுத்த மாதம் இங்கிலாந்தில் இடம்பெறப்போகும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினையும் ஒரு கத்துக்குட்டியாகவே எதிர் கொள்ளப்போகின்றது.

எனவே, இந்த உலகக் கிண்ணத்திலும் சனத் ஜயசூரிய போன்ற ஒருவர் வந்து இலங்கை அணிக்கு உலகக் கிண்ணம் பெற்றுத்தருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<