டி20 அணியின் தலைவராக மீண்டும் ஜேசன் ஹோல்டர்

379
Image Courtesy - Getty Images

இங்கிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 13 பேர் கொண்ட குழாம் இன்று (05) அதிகாலை அந்நாட்டு கிரிக்கெட் சபை தேர்வுக்குழு தலைவர் கௌர்ட்னி பிரௌனினால் வெளியிடப்பட்டதற்கமைய அவ்வணியின் தலைவராக மீண்டும் ஜேசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கிறிஸ் கெய்ல் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடிவருகின்றது. இருதரப்பு தொடரின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள இம்ரான் தாஹிர்

சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டி மழையினால் கைவிப்பட ஒருநாள் தொடரானது, 2-2 என்ற அடிப்படையில் கடந்த சனிக்கிழமையுடன் (02) சமநிலையில் நிறைவுக்கு வந்திருந்தது.   

இந்நிலையில் இருதரப்பு தொடரின் இறுதி தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று செய்வாய்க்கிழமை (05) (இலங்கை நேரப்படி புதன் அதிகாலை) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த டி20 தொடருக்கான இங்கிலாந்து குழாம் கடந்த மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாமானது தொடர் ஆரம்பமாகுவதற்கு இன்னும் ஒரேயொரு நாள் எஞ்சியுள்ள நிலையில் இன்று (05) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், டி20 தொடரை கைப்பற்றும் நோக்குடன் இங்கிலாந்து டி20 அணிக்கு சவாலான அணியொன்று பெயரிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20 சர்வதேச போட்டிகளுக்கான வழமையான அணித்தலைவராக செயற்படுபவர் கார்லஸ் பரெத்வெயிட் ஆவார். தற்போது அவர் 13 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்தாலும் அணியின் தலைமைத்துவமானது அவரிடமிருந்து மீட்கப்பட்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்காக அணியின் தலைவராக செயற்பட்டுவரும் ஜேசன் ஹோல்டரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்டு அதில் தனது அதிரடி துடுப்பாட்டத்தை நிரூபித்துள்ள நிலையில் மீண்டும் 8 மாதகால இடைவெளியின் பின்னர் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இறுதியாக கிறிஸ் கெய்ல் கடந்த வருடம் (2018) மே மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி பங்குபற்றியிருந்த உலக பதினொருவர் அணியுடனான டி20 சர்வதேச போட்டியிலேயே விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியுடனான இரு தரப்பு தொடர் மூலமாகவே சர்வதேச அரங்கிற்குள் தடம்பதித்த ஜோன் கேம்பெல் தற்போது நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடரிலும் கன்னி போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் குறித்த குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்த பந்துவீச்சாளரான ஆஷ்லி நேர்ஸ் மீண்டும் டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இரட்டை சதத்தின் மூலம் கோஹ்லியை நெருங்கியுள்ள வில்லியம்சன்

மேலும் நான்கு வருடங்களின் பின்னர் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான தெவேந்திர பிஸ்ஷோ மீண்டும் டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நிறைவுக்கு வந்திருந்த இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரிலும் நீண்ட காலத்திற்கு பின்னர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), பெபியன் அலென், தெவேந்திர பிஸ்ஷோ, கார்லஸ் பரெத்வெயிட், டெரென் பிராவோ, ஜோன் கேம்பெல், சில்டன் கொட்ரெல், கிறிஸ் கெய்ல், சிம்ரொன் ஹெட்மயர், ஷாய் ஹோப், ஆஷ்லி நேர்ஸ், நிக்கொலஸ் பூராண், ஒஸ்ஹானே தோமஸ்

3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் அட்டவணை. (இலங்கை நேரப்படி)

  • 06 மார்ச் அதிகாலை 01.30 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் லூசியா
  • 09 மார்ச் அதிகாலை 01.30 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் கைட்ஸ்
  • 11 மார்ச் அதிகாலை 01.30 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – சென்ட் கைட்ஸ்

  

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<