இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

677
Image courtesy - The Indian Express

இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 13 பேர் அடங்கிய குழாமை நியூசிலாந்து கிரிக்கெட் சபை இன்று (27) அறிவித்துள்ளது. இந்த குழாமில் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டொக் பிரெஷ்வெல் ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு …

புதிய வீரர்களின் உள் வருகை காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் டொம் லேத்தம், கொலின் டி கிரெண்டோம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் வேர்க்கர், அஜாஸ் பட்டேல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், டொம் லேத்தமின் இடத்துக்கு புதிய  விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் டீம் செய்பர்ட் அழைக்கப்பட்டுள்ளார். டீம் செய்பர்ட் நியூசிலாந்து அணிக்கான T20I குழாமில் இடம்பெற்று வருகின்ற நிலையில், முதன் முறையாக ஒருநாள் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் நீஷம், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர் ஒருநாள் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். உள்ளூர் தொடரான போர்ட் கிண்ணப் போட்டியில் விளையாடிய இவர், 63.87 என்ற ஓட்ட சராசரியில் 503 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன், பந்து வீச்சில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, சிறப்பாக பிரகாசித்ததன் காரணமாக ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

டொக் பிரெஷ்வெல், கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் விளையாடியிருந்த போதும், ஒருநாள் குழாமில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், கடந்த ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்திய A அணிக்கு எதிரான தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். இதனால், மீண்டும் ஒருநாள் குழாமில் இடம்பிடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் மீளழைப்பு குறித்து அணியின் தேர்வுக்குழு தலைவர் கெவின் லார்சன் குறிப்பிடுகையில், “பிரெஷ்வெல் மற்றும் நீஷம் ஆகியோர் உள்ளூர் மற்றும் இந்திய A அணிக்கு எதிரான தொடர்களில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராகியுள்ளனர்” என்றார்.

மெதிவ்ஸ் மற்றும் மெண்டிஸின் அனுபவ ஆட்டமும், மாலிங்கவின் தலைவர் பதவியும் – Cricket Kalam 04

நியூசிலாந்து சென்றுள்ள …

அதேவேளை உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலாக இலங்கை அணிக்கு எதிரான தொடர் அமையவுள்ளதுடன், ஆடுகளங்களும் உலகக்கிண்ணத் தொடரினை மையப்படுத்தி தயார்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து கெவின் லார்சன் குறிப்பிடுகையில், “ஒருநாள் தொடரை நாம் கட்டாயமாக வெற்றிகொள்ள வேண்டும். அத்துடன், உலகக்கிண்ணத்தில் இலங்கையுடன் மோதவுள்ளதால், மேலதிக தகவல்களையும் இந்த தொடரில் திரட்டிக்கொள்ள முடியும்” என்றார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் உலகக் கிண்ணத்திற்கான முன் ஆயத்தமாக புதிய வீரர்களை உள்வாங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உபாதைக்குள்ளாகியிருந்த மார்ட்டின் குப்டிலையும் குழாமில் இணைத்துள்ளது. அத்துடன், அனுபவ வீரர்களான டீம் சௌதி, ட்ரென்ட் போல்ட், கொலின் மன்ரோ மற்றும் ரோஸ் டெய்லர் என முக்கிய வீரர்களுடன் பலமான குழாமை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட், டொக் பிரெஷ்வெல், லொக்கி பேர்கசன், மார்ட்டின் குப்டில், மெட் ஹென்ரி,  கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ரி நிக்கோலஸ், டீம் செய்பர்ட், இஷ் சோதி, டீம் சௌதி, ரோஸ் டெய்லர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<