யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்குள் இழந்திருந்தாலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாந்தாஸ் 20 ஓட்டங்களையும், ஆறாம் இலக்கத்தில் களம் புகுந்த அணியின் விக்கெட் காப்பாளர் கஜாநத் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் ஒன்றையும், தொடர்ந்து வந்த சிவலக்சனின் 16 மற்றும் தனுஸ்ரனின் 11 ஆகிய ஓட்டங்களின் துணையுடன் 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி

திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி

பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண..

பந்துவீச்சில் அபாரங்காட்டிய ஹசித 7 ஓவர்களில் வெறுமனே 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நதிஷ, கவிந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சிக்கனமாகப் பந்துவீசிய ஷமல் 5 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

131 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆனந்த கல்லூரி கனிஷ்க (17), கவிந்து (27) ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுக்க, வலுவாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. 81 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும், 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்த லகிரு, துன் ஆகியோர் ஆனந்த கல்லூரிக்கு 28ஆவது ஓவரின் முதல் பந்திலேயே வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர்.

இந்துக் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசிய சந்தோஷ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சிவலக்சன், துவாரகன் மற்றும் கோபிராம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேற்படி வெற்றியின் மூலம் சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயம் ஆகியவற்றை ஆனந்தா கல்லூரி தக்கவைத்துக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 130 (46) – கஜாநத் 52(64), சந்தோஷ் 20(42), சிவலக்சன் 16(28), ஹசித 3/03, நதிச2/28, கவிந்து 2/36

ஆனந்தா கல்லூரி – 131/5 (27.1) – லகிரு 34*(50) கவிந்து 27(21), துஷான் 21*(24)

போட்டி முடிவுஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றி

விருதுகள்

சிறந்த பந்துவீச்சாளர் – ஹசிந்து சமிக்க – ஆனந்த கல்லூரி

சிறந்த துடுப்பாட்டவீரர் – கஜாநத் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

சிறந்த களத்தடுப்பாளர் – தமிந்த றொஷான் – ஆனந்த கல்லூரி