அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொண்டாலும், இறுதிக் கட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை.

எனினும் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை அக்கல்லூரி பெற்றுக்கொண்டது. அத்துடன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 27 புள்ளிகளைப் பெற்ற அக்கல்லூரி, 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போட்டிகளின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

யாழ். ஹார்ட்லி கல்லூரிகாக அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன் ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்டு, 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை

இதனையடுத்து போட்டிகளின் 2 ஆவது நாளில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட மிதுன்ராஜ் 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர் மிதுன் ராஜ் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதல் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2 ஆவது தடவையாகவும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற அதே போட்டித் தொடரில் 15 வயதுக்கு உட்பட்ட  ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தை வென்று அக்கல்லூரிக்குப் பெருமையையும் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், குறித்த போட்டியில் மிதுன் ராஜுடன் போட்டியிட்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷன், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் இதே போட்டியில் வெண்கலப்பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம் (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன்ராஜ், 63.01 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். எனினும், போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஆர். தரங்க 63.25 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 54.44 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு, 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கத்தினை வென்றிருந்தார்.

எனினும், இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் 2014ஆம் ஆண்டு இப்போட்டியில் நிகழ்த்திய (52.21 மீற்றர்) சாதனையை முறியடித்திருந்தாலும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகளின்படி ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளின் முன்னைய சாதனைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை.

ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் அபேசேகர, சதுனி சிறந்த வீரர்களாக முடிசூடல்

அத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய், 13.52 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய மட்டப் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றார்.

எனினும், அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் அதே பிரிவில் கலந்துகொண்ட ரகுராஜ் சஞ்சய், 12.30 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரின் முதல் நாளில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட சஞ்சய் துரதிஷ்டவசமாக 4 ஆவது இடத்தைப் அடைந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார். குறித்த போட்டியில் முதற் தடவையாகக் களமிறங்கிய சஞ்சய், 35.32 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 14.53 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க தங்கப்பதக்கத்தையும், 12.32 மீற்றர் தூரத்தை எறிந்த வாரியபொல ஸ்ரீ கனோதயா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மினுர பிரபோத வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.