மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் யாழ். மத்தியிடம் வீழ்ந்த ஸ்கந்தவரோதயா

74

சிங்கர் நிறுவனம் 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகள் இடையில் நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் நேற்று (5) நிறைவுக்கு வந்த போட்டியில், யாழ். மத்திய கல்லூரி அணி யாழின் மற்றொரு பாடசாலைகளில் ஒன்றான ஸ்கந்தவரோதயா கல்லூரியினை 500 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மைதான சொந்தக்கார அணி, 69.4 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

முதல் நிலை T20 அணியை வீழ்த்தி சாதித்த இளம் இலங்கை அணி

முதல் நிலை T20 அணியை வீழ்த்தி சாதித்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 …

யாழ். மத்திய கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக K. இயலரசன் சதம் தாண்டி 117 ஓட்டங்களை குவித்துக் கொள்ள, இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 78 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

மறுமுனையில் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கஜதீபன் 3 விக்கெட்டுக்களையும், தன்ஸ்ராஜ்  2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர். 

இதன் பின்னர் பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி 25.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

ஸ்கந்தவரோதயா கல்லூரியினை தனது பந்துவீச்சு மூலம் நிர்மூலம் செய்த யாழ். மத்தியின் இடதுகை சுழல் வீரரான விதுஷன் வெறும் 10 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 295 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி 30.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் A. கஜன் சதம் தாண்டி 122 ஓட்டங்கள் எடுக்க, வியாஸ்காந்தும் 42 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் திருந்தன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 546 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. மிகவும் கடினமான இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி வெறும் 45 ஓட்டங்களுக்கு இரண்டாம் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது. 

இம்முறையும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய விதுஷன் வெறும் 8 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு மிகச்சிறந்த வெற்றி ஒன்றினை அடைவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தார். 

போட்டியின் சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 364/8d (69.4) – K. இயலரசன் 117, விஜயகாந்த் வியாஸ்காந்த் 78, கௌதம் 58, கஜதீபன் 3/56, தன்ஸ்ராஜ் 2/51

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 69 (25.4) – அமிதா சரண்டன் 30, விதுஷன் 6/10

யாழ். மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 250/6d (30.2) – A. கஜன் 122, திருந்தன் 3/48

ஸ்கந்தவரோதயா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 45 (25) – விதுஷன் 8/08

முடிவு – யாழ். மத்திய கல்லூரி அணி 500 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…