ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தி வரும் இசுரு உதான

978
Afghanistan Premier League Twitter

ஐ.பி.எல். போட்டிகளைப் போன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் (ACB) இம்முறை முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வரும் ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் T20 (APL) தொடரின், போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் இசுரு உதான சிறப்பான ஆட்டத்தினை பதிவு செய்து வருகின்றார்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐந்து அணிகள் பங்குபெறும் இந்த ஏ.பி.எல் தொடரில், இசுரு உதானவின் அணியான பக்தியா பன்தர்ஸ் கந்தகார் நைட்ஸ் அணியுடன் பங்குபற்றிய போட்டி ஒன்று சார்ஜா மைதானத்தில் நேற்று (12) இடம்பெற்றிருந்தது.

தொடரின் 10 ஆவது மோதலாக இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, பக்தியா பன்தர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாடிய பக்தியா பன்தர்ஸ் அணியினருக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. அத்தோடு முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும், பக்தியா பன்தர்ஸ் அணிக்கு மத்திய வரிசையில் துடுப்பாடிய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா மற்றும் இசுரு உதான ஆகியோர் தமது துடுப்பாட்டத்தின் மூலம் பெறுமதி சேர்த்தனர்.

இதன் மூலம், பக்தியா பன்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 127 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பன்தர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சிக்கந்தர் ராஸா அரைச்சதம் ஒன்றினை விளாசி 51 ஓட்டங்களையும், இசுரு உதான 23 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். இதேநேரம் கந்தஹார் நைட்ஸ் அணியின் பந்துவீச்சில் சயேத்  சிர்ஷாத் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் நவீட் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 128 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய கந்தஹார் நைட்ஸ் அணி இசுரு உதானவின் அபார பந்துவீச்சினால் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 118 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.  

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான இப்போட்டியில் வெறும் 19 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு உதவியிருந்ததோடு, இப்போட்டியில் சிறு துடுப்பாட்ட பங்களிப்பையும் வழங்கி சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

Cricingif on Twitter

WATCH: Isuru Udana’s 3/19 against Kandahar Knights Ball-by-ball clips and live-streaming: https://t.co/mGPkLQ12AW #APLT20 https://t.co/iZPHJdupI8

இதேநேரம் கடந்த புதன்கிழமை (10) இடம்பெற்ற ஏ.பி.எல். தொடரின் போட்டியொன்றில் பல்க் லெஜென்ட்ஸ் அணிக்கு எதிராக 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த உதான பக்தியா பன்தர்ஸ் தரப்பு 37 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கு பங்களிப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Cricingif on Twitter

OUT! Udana has the last laugh and rattles the timber. @henrygayle makes the walk back to the hut. He departs for 20(10). Balkh Legends are 38/1 in the 3rd over. Ball-by-ball clips and live-streaming: https://t.co/NHWBZ8NMI7 #APLT20 https://t.co/5IxTzJ2ary

இதற்கு முன்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற போட்டியில் நங்கர்ஹர் கிங்லெபர்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த இசுரு உதான 21 ஓட்டங்களால் தனது பக்தியா பன்தர்ஸ் அணி வெற்றி பெற உதவியிருந்தார்.

இவ்வாறாக ஏ.பி.எல். தொடரில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் உதான மொத்தமாக 9 விக்கெட்டுக்களுடன் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் சாய்த்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடும் இந்த ஏ.பி.எல். தொடரில் உதானவிற்கு கிடைக்கும் அனுபவம் தேசிய கிரிக்கெட் அணிக்கான போட்டிகளிலும் அவர் எதிர்காலத்தில் சிறப்பாக செயற்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<