தென்னாபிரிக்க மண்ணில் அபாரம் காண்பித்த இசுரு உதான

112

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் மாஷானி சுப்பர் லீக் (MSL) கிரிக்கெட் தொடரில் பார்ல் ரொக்ஸ் அணிக்காக  விளையாடி வரும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான, நேற்றைய போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

T10 லீக்கின் சம்பியனாக மராத்தா அரபியன்ஸ் அணி

மூன்றாவது பருவகாலத்திற்கான T10 லீக் கிரிக்கெட் ………..

இந்த தொடரின் 15வது போட்டியில் பார்ல் ரொக்ஸ் அணி, கேப் டவுன் ப்லிட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பார்ல் ரொக்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

பின்னர், 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய  கேப் டவுன் ப்லிட்ஸ் அணி சிறப்பாக ஓட்டங்களை குவித்து வந்தது. ஆரம்ப துடுப்பட்ட வீரர்கள் வெளியேறிய போதும், மொஹமட் நவாஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தார். 

இவரின் ஓட்டக் குவிப்புடன் மிகச்சிறந்த நிலைக்கு வந்த கேப் டவுன் ப்லிட்ஸ் அணிக்கு இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது பார்ல் ரொக்ஸ் அணிக்காக பந்துவீச இசுரு உதான அழைக்கப்பட்டார். இவர், முன்னர் வீசிய மூன்று ஓவர்களிலும் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

எனினும், இவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக பார்ல் ரொக்ஸ் அணியின் தலைவர் பெப் டு ப்ளெசிஸ் இசுரு உதானவுக்கு பந்தினை வழங்கினார். போட்டியின் முக்கியமான தருணத்தில் பந்துவீசிய இசுரு உதான கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொஹமட் நவாஷை (41 ஓட்டங்கள் 23 பந்துகள்) ஆட்டமிழக்கச் செய்தார்.

தொடர்ந்து வீசப்பட்ட இந்த ஓவரின் 2வது பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட, 3வது பந்தில்  லெக் பைஸ் முறையில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. பின்னர், வைட் பந்து வீசப்பட, அதற்கு அடுத்த பந்து ஓட்டமற்ற பந்தாக மாறியது. இதனையடுத்து 2 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில்,  5வது பந்து களத்தடுப்பின் கவனயீனத்தினால் பௌண்டரியாக மாற ஒரு பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.  

T10 லீக் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள்

T10 லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்று அபுதாபி ……….

இவ்வாறு விறுவிறுப்பான தருணத்தில் இசுரு உதான மீண்டும் ஒரு வைட் பந்தினை வீச, ஒரு பந்துக்கு 4 ஓட்டங்கள் பெறவேண்டி ஏற்பட்டது. எவ்வாறாயினும், இறுதி பந்தில் ஒரு ஓடத்தை மாத்திரமே விட்டுக்கொடுத்த இசுரு உதான அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதுமாத்திரமின்றி இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் இசுரு உதான வீழ்த்தியிருந்தார்.

இசுரு உதானவின் அபாரமான இறுதிப் பந்து ஓவரின் உதவியுடன் பார்ல் ரொக்ஸ் அணி 15 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<