5 ஆண்டுகளின் பின் இசிபதனவை வீழ்த்திய திரித்துவக் கல்லூரி

301
Trinity College

இசிபதன கல்லூரியுடன் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற சிங்கர் ரக்பி லீக் போட்டியில், இசிபதன கல்லூரியின் 5 ஆண்டு வெற்றியோட்டத்தை முடித்து, 15-10  என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரி வெற்றிபெற்றது.

அனைவரின் எதிர்பார்ப்புகளின் மத்தியில், இரண்டு அணிகளும் சம்பியன் ஆக வேண்டும் எனில் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. புனித ஜோசப் கல்லூரியை கடந்த போட்டியில் வீழ்த்திய நம்பிக்கையுடன் திரித்துவக் கல்லூரி போட்டியில் கலந்துகொள்ள, புனித தோமியர் கல்லூரியை வென்ற உறுதியுடன் இசிபதன கல்லூரி போட்டியில் களமிறங்கியது.

சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புடன் நான்கு அணிகள்

பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் லீக் ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் மேலும்..

எதிர்பார்க்கப்பட்டது போலவே பல்லேகலை மைதானத்தில் இசிபதன ரசிகர்களின் ஆக்கிரமிப்பு அதிகம் காணப்பட்டது. இயற்கை அழகுடனும், பச்சை ரசிகர்கள் கூட்டத்துடனும் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. முதல் உதையில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய திரித்துவக் கல்லூரி ஆரம்ப நிமிடங்களிலேயே முதலாவது ட்ரையினை பெற்றுக்கொண்டது. பந்தை உதையில் இருந்து பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரி ட்ரை கோட்டை  கடந்து முதல் புள்ளியினை பெற்றுக்கொண்டது. முன் வரிசை வீரரான அவீஷ ப்ரியங்கர முதல் ட்ரையினை மைதானத்தின் ஓரத்தில் வைத்தார். கடினமான கொன்வெர்சனை சிறப்பாக உதைத்த லஷென் விஜேசூரிய மேலதிக 2 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தார். (திரித்துவக் கல்லூரி 07-00 இசிபதன கல்லூரி)

தொடர்ந்து இரு அணிகளும் புள்ளிகளைப் பெறுவதற்கு கடினமாக முயற்சி செய்தன. திரித்துவக் கல்லூரியிடமே பந்து அதிகமாக காணப்பட்ட நிலையில் இசிபதன கல்லூரி வீரர்கள் சிறப்பாக அவர்களை தடுத்து வந்தனர். எனினும் மீண்டும் ஒரு முறை இசிபதன கல்லூரியின் தடையை உடைத்த திரித்துவக் கல்லூரி வீரர்கள் 2ஆவது ட்ரையினை வைத்தனர். இம்முறை பல முறை முயற்சி செய்து, பல கட்டங்களின் பின்னர் ரெஷான் பண்டாரநாயக்க மூலமாக திரித்துவக் கல்லூரி ட்ரை வைத்தது. இம்முறை கொன்வெர்சனை விஜேசூரிய தவறவிட்டார். (திரித்துவக் கல்லூரி 12-00 இசிபதன கல்லூரி)

12 புள்ளிகள் முன்னிலை பெற்று திரித்துவக் கல்லூரி காணப்பட்டாலும் இசிபதன கல்லூரி தனது முயற்சியை கைவிடவில்லை. 50 மீட்டர் நடு கோட்டின் அருகே பந்தை பெற்றுக்கொண்ட இசிபதன கல்லூரியின் ஹரித் பண்டார, திரித்துவக் கல்லூரி வீரர்களின் இடையே நுழைந்து, 50 மீட்டர் தூரம் தனியாக ஓடிச் சென்று சிறப்பான ட்ரை ஒன்றை வைத்தார். திரித்துவக் கல்லூரி வீரர்கள் அவரை பிடிக்க முற்பட்ட பொழுதும், தனது மின்னல் வேகத்தால் அனைவரையும் கடந்து சென்று மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். சமோத் கொன்வெர்சனை தவறவிட்டார். (திரித்துவக் கல்லூரி 12-05 இசிபதன கல்லூரி)

இசிபதன கல்லூரியின் ஹரித் பண்டார, நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, இசிபதன கல்லூரி 14 வீரர்களுடன் களத்தில் விளையாடியது. எனினும் தொடர்ந்து போட்டியில் இசிபதன கல்லூரி ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுதும், திரித்துவக் கல்லூரி அவர்களை ட்ரை வைக்க விடாமல் சிறப்பாகத் தடுத்தது. முதற் பாதியின் இறுதி சில நிமிடங்களில் திரித்துவக் கல்லூரியின் கோட்டையில் இசிபதன கல்லூரி ஆதிக்கம் செலுத்திய பொழுதும், அவர்களால் புள்ளிகளைப் பெறமுடியாமல் போனது. திரித்துவக் கல்லூரி வீரரான ராஜரத்தினம் அபாயகரமான முறையில் எதிரணி வீரரை தடுத்ததால், நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். சிறிய தவறின் மூலம், திரித்துவக் கல்லூரியின் 5 மீட்டர் கோட்டின் அருகே பந்தை இசிபதன கல்லூரி தவறவிட, நடுவர் முதற்பாதி நிறைவடைந்ததாக அறிவித்தார்.

முதல் பாதி – திரித்துவக் கல்லூரி 12 – 05 இசிபதன கல்லூரி

இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் சமமாக ஆதிக்கம் செலுத்தின. திரித்துவக் கல்லூரிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் சிறிய தவறுகளினால், புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை தவறவிட்டது. தனது எல்லைக்குள் இசிபதன கல்லூரி பெனால்டி வாய்ப்பொன்றை திரித்துவக் கல்லூரிக்கு வழங்கியது. பந்தை இசிபதன கல்லூரி விடுவிக்காததால் நடுவர் திரித்துவக் கல்லூரிக்கு பெனால்டி வழங்கினார். கிடைத்த பெனால்டி மூலம் 3 புள்ளிகளைப் பெற நினைத்த திரித்துவக் கல்லூரி, கம்பத்தினை நோக்கி உதையத் தீர்மானித்தது. 30 மீட்டர் தொலைவில் இருந்து சிறப்பாக கம்பத்தின் நடுவே உதைத்து விஜேசூரிய 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (திரித்துவக் கல்லூரி 15-05 இசிபதன கல்லூரி)

திறமைகளை வெளிக்காட்டவிருக்கும் இலங்கை ரக்பி அணியின் அறிமுக வீரர்கள்

இலங்கை ரக்பி அணியானது, இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை..

போட்டியை விட்டுக்கொடுக்காத இசிபதன கல்லூரி ட்ரை வைக்க முயற்சி செய்தது. எனினும் திரித்துவக் கல்லூரியின் தடையை தாண்டுவது அவர்களுக்கு கடினமாக அமைந்தது. எனினும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததினால் இறுதியில் இசிபதன கல்லூரி ட்ரை வைத்தது. பல கட்டங்கள் பந்தை பரிமாற்றம் செய்த பின்னர் பந்து சமோத் பெர்னாண்டோவை வந்து சேர்ந்தது. திரித்துவக் கல்லூரி வீரர் அவரை தடுக்கத் தவற, சமோத் ட்ரை கோட்டை தாண்டி இசிபதன  ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும் சமோத் கொன்வெர்சனை தவறவிட்டார். (திரித்துவக் கல்லூரி 15-10 இசிபதன கல்லூரி)

இறுதி சில நிமிடங்களே எஞ்சி இருந்த நிலையில், இரண்டு அணிகளும் வெற்றிபெறுவதற்கு கடினமாக முயற்சித்தன. திரித்துவக் கல்லூரியானது பல இலகுவான சந்தர்ப்பங்களை உருவாக்கினாலும் அவற்றின் மூலம் பலன் பெறத்தவறியது. சில நொடிகள் எஞ்சி இருந்த நிலையில் திரித்துவக் கல்லூரி ட்ரை வைத்த பொழுதும், தொலைக்காட்சி நடுவரால் அது நிராகரிக்கப்பட்டது. இறுதி நிமிடத்தில் இசிபதன கல்லூரி பந்தை எடுத்து முன்னேறி வந்த பொழுதும், பெனால்டி வாய்ப்பொன்றை திரித்துவக் கல்லூரிக்கு வழங்கியது. பந்தை பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரி, அதனை வெளியே உதைத்துடன் போட்டி நிறைவடைந்ததாக நடுவர் அறிவித்தார்.

இரண்டு அணிகளும் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தின. எனினும் இறுதியில் திரித்துவக் கல்லூரியே மகுடத்தை சூடிக்கொண்டது. எவ்வாறாயினும் இசிபதன கல்லூரியின் முயற்சியும் பாராட்டுக்குரியது. இதன் மூலம் அடுத்தம் வாரம் நடைபெறவிருக்கும் திரித்துவக் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரிகளுக்கிடையிலான ‘ப்ரெட்பி’ கிண்ண போட்டியே, லீக் கிண்ணத்தை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

முழு நேரம் – திரித்துவக் கல்லூரி 15 – 10 இசிபதன கல்லூரி

புள்ளிகள் பெற்றோர்

திரித்துவக் கல்லூரி (2T, 1C ,1P ) – அவீச ப்ரியங்கர 1T, ரெஸான் பண்டாரநாயக்க 1T, லஷென் விஜேசூரிய 1C 1P

இசிபதன கல்லூரி (2T) – ஹரித் பண்டார 1T, சமோத் பெர்னாண்டோ 1T